Weblinks

சென்ட்டிமென்ட் தொல்லை தாங்க முடியல...!

birthday-_2


ஏற்கனவே உங்களுக்கு ´தீப்பொறி பாலா´ பற்றி சொல்லியிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா? அவனோடு இன்னொரு பாசக்காரப் பையன் இருக்கிறதாக சொன்னேன் அல்லவா? அவன் இன்று என்ன செய்தான் தெரியுமா? "அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று இன்று வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தான். மடல் ரொம்ப அழகாக இருந்தது. இன்னும் ஐம்பதுக்கும் மேல் வாசகர்கள் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பி இருந்தார்கள். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது எனக்கு. என் தனிப்பட்ட செய்தியை எங்கும் சொல்லியதில்லையே எப்படி கண்டுப்பிடித்தார்கள் என்று. மெயிலைத் திறந்தால் கே.கே என்னும் என்னுடைய தீவிர வாசகர் ´நாசமாகப் போங்கள்´ என்று நையாண்டியோடு வாழ்த்துச் செய்தியும், படங்களும் அனுப்பி இருந்தார். ரொம்பவும் இரசித்த வாக்கியங்கள் அவை. என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

'எப்படித் தெரியும்?´ என்று விசாரித்தேன். கே.கே எப்போதோ ஒரு வாசகர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை ஞாபகத்தில் வைத்திருந்தேன் என்று விளக்கம் கொடுத்தார்.
இந்த எழவு பிடித்த நாளை நான் என்றும் பிரமாதமாகப் பார்த்ததில்லை. எல்லா நாட்களைப் போலத்தான் இந்த நாளையும் நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை யாரென்றே தெரியாத வாசகர்களும் ஒரளவு தெரிந்த வாசகரான அமெரிக்காவில் இருக்கும் ப்ரதீப், துபாயில் இருந்து தோழர் கவிமதி பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்து அறிவிப்பு செய்திருந்தார்கள். சிங்கப்ரில் இருந்து ராம்ஸ், அமெரிக்காவில் இருந்து செந்தில், வசந்த் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். யோசித்துப் பார்க்கிறேன்...

நம்மோடு எந்த தொடர்பும் இல்லாதவர்கள் நம் பிறந்த தேதியை நினைவு வைத்து வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்றால் அவர்களிடம் இருக்கும் நேசம் என்பதை சென்ட்டிமெண்ட் பார்ட்டிகள் என்று நையாண்டி பண்ணுவதென்பது என்பது எவ்வளவு கேவலமானது. என் மீதே எனக்கு கோபமாக இருந்தது.  வாழ்த்து சொல்லியவர்களில் பிரபுவை மட்டும் இருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த போது பாண்டிச்சேரியில், சீமான், தோழர் கொளத்தூர் மணியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரபுவை சந்தித்தேன். கூட்டம் முடிந்த போது என்னை நோக்கி ஓடிவந்த இந்த பிரபுவையும் கூட இருந்த 10-பசங்களையும் கண்டு பயந்து போய் செர்ரி....

'அய்யோ உன்னை உதைக்க வருகிறார்கள் போல... வா ஓடிப்போயிடலாம்´ என கையை இழுத்துக் கொண்டு மிரள....

"அக்கா, அக்கா நீங்க தமிழச்சி தானே?"

என்று பிரபு கேட்ட போது, கொஞ்சம் தைரியம் வந்து நான் ஆமாம் என்று சொல்ல...

செர்ரி அவசர அவசரமாக இல்ல.. இல்ல.. என்று பயந்து கொண்டே சொல்ல..

ஏதேது ஏதோ நமக்குன்னு நாளு இரசிகர்கள் இருக்கிறார்கள் போல! அதையும் விட்டுட்டு வருவதா என்று எனக்குள் மனசு கணக்கு போட ஆரம்பித்துவிட்டது.

பிரவும் குழம்பிப் போய், "நீங்க பிரான்சு தமிழச்சி தானே" என்று திரும்பவும் கேட்க...

"ஆமாங்க, நான் தான் சொல்லுங்க.. என்றதும்,

செர்ரி மெதுவாக என்னிடம், "இந்த பசங்கள பார்த்தா பொறுக்கிங்க மாதிரி இருக்கு. வா போயிடலாம்" என அவசரப்படுத்த...

"சும்மா இருப்பா அப்படியே அடிவிழுந்தாலும் அதை வச்சி அரசியல் பண்ணிடுவேன்ல.." நான் நக்கலாக சொல்ல,

தோழர் கொளத்தூர் மணி கூப்பிடுகிறார் என்று இன்னொரு தோழர் அழைக்க...

பிரபு பாவமாக, ´அக்கா.. அக்கா... போன் நம்பரையாவது குடுத்துட்டு போங்கக்கா. நான் பேசனும் அக்கா" என்று கெஞ்ச

செர்ரி, "வா போலாம் கூப்பிடறாங்க" என்று என்னை இழுத்துக் கொண்டு போக...

"அக்கா.. அக்கா... நான் ஆர்ட்டிஸ்டுக்கா, கவிதை கூட எழுதுவேன். உங்கள் எழுத்தை ரொம்ப விரும்பி படிப்பேன். என் மனைவி கூட உங்கள் எழுத்துக்களின் இரசிகை.."

ஏதேதோ ஆர்வமாக பேசிக் கொண்டே போக, அருகில் இருந்த சிலர் ஆட்டோகிராப் கேட்க,

"அக்கா எனக்கும் போடுங்கக்கா.. அப்படியே போன் நம்பரும் குடுங்கக்கா பாவமாய் பேசிக் கொண்டே போனான் பிரபு.

"போன் நம்பரெல்லாம் இல்லங்க.." செர்ரி திருப்பவும் வில்லன் போல் குறுக்கே.

"இருங்க என் செல் நம்பர் தரேன் எழுதிக்குங்க..."

"வேணாம், சொன்னா கேளு. இவனுங்க முழியப் பார்த்தா சரியில்ல.... போன் நம்பரெல்லாம் குடுக்காதே" ப்ரெஞ்ச் மொழியில் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிகை செர்ரியிடம் இருந்து.

"சும்மா இரு இவங்க என்னோட விசிறிங்கப்பா, பொறுக்கின்னு சொல்லாதே.."

"இங்க ஒண்ணு தானே இருக்கு? நீ ஏன் பன்மையில் சொல்ற... ஆகா, கிழிஞ்சிது போ.. இனி உன்னை பிடிக்க முடியாது. இந்த தமிழ்நாட்டுல இவ்ளோ முட்டாள் பயல்களா? உன்னிடம் எல்லாம் ஆட்டோகிராப் கேட்கிறாங்களே.."

"நானா ஆட்டோகிராப் போடுகிறேன் வாங்க வாங்கன்னு மைக் போட்டு கூப்பிடுகிறேன். அவங்க வந்து கேட்கிறாங்க நான் என்ன செய்யறது..."

"அக்கா... அக்கா... போன் நம்பர்!"

மீண்டும் கேட்ட பிரபுவிடம் நம்பர் கொடுத்துவிட்டு தோழர் கொளத்தூர் மணியோடு சென்றேன்.

"என்னங்க தோழர் ஆட்டோகிராப்லாம் கேட்கறாங்க. சங்கடமா இருக்கு.." என்றேன்.

தோழர் சிரித்துக் கொண்டே, "இங்க பாருங்க.. இந்த கூட்டத்தில் தான் எனக்கு முதன்முறையாக கட் அவுட் வைத்திருக்கிறார்கள். நான் இதுவரை எந்த கூட்டத்திலும் கட் அவுட் வைக்க அனுமதித்ததில்லை. இந்த கூட்டத்தில் வைத்துவிட்டார்கள். என் நிலைமை இப்படி"

சில தினங்களுக்கு பிறகு பிரபுவிடம் இருந்து போன் அக்கா... அக்கா... நலமா? அக்கா... அக்கா.. எங்க இருக்கிங்க? அக்கா... அக்கா... எப்ப எங்க வீட்டுக்கு வருவீங்க... அப்போதெல்லாம் சும்மா ம்ம்ம்... போட்டு விட்டு நாளு வார்த்தையில் போனை வைத்துவிடுவேன்.

மீண்டும் மீண்டும் போன் பிரபுவிடம் இருந்து...

அக்கா இப்ப எந்த ஊரு பயணத்துல இருக்கிங்க? எப்ப பாண்டிச்சேரி வருவீங்க? அக்கா இன்னும் 3-நாளுதான் இருக்கு. பிரான்ஸ் போயிடுவிங்க அதுக்குள்ள எங்க வீட்டுக்கு வாங்கக்கா, என் மனைவி உங்கள பார்க்கனும்னு ஆசையா இருக்காங்க..."

பிரபு கேட்ட போது நான் பாண்டிச்சேரியில் தான் இருந்தேன். அவன் குறிப்பிட்ட இடமும் நான் இருந்த இடத்திற்கு அருகிலேயே இருந்ததால் சில தோழர்களுடன் சென்றிருந்தேன். பிரபுவின் மனைவி 7-மாத கர்பிணி. ரொம்ப பிரமிப்பாய் பார்த்தபடி உங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும் எனக்கு அதிலும் ´என்னிடம் இருப்பது ஆண்குறி' என்ற கவிதை எனக்கும், அக்காவுக்கும் ரொம்ப பிடிக்கும். நாங்கள் அக்கவிதை குறித்து நிறைய பேசியிருக்கிறோம் என்று மனப்பாடமாக எனக்கு சொல்லி சரிதானே என்றார்.

நான் கவிதை எழுதுவதாக எண்ணியதில்லை அதுவும் நான் எழுதியது எனக்கே மறந்து போய்விடும். நீங்கள் மனப்பாடம் செய்திருக்கிறீர்கள். அக்கவிதை இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரியும் தானே என்றேன் சிரித்துக் கொண்டு.

கொஞ்ச நேரத்திலேயே போய்விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு சென்றிருந்த நான் அவர்களுடைய இயல்பும், உபசரிப்பும் பிடித்துப்போகவே நிறைய நேரங்கள் அவர்களோடு பேசிக் கொண்டே இருந்துவிட்டேன். விருந்தே நடத்தி விட்டார்கள். இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்ன?

அவர்களின் வார்த்தைகளுடன் காணமால் போயிருந்த எனக்கு செர்ரியின் போன் ´என்னாச்சி, என்னாச்சி.. மணியாகிறது வா.. வா.." என்று பயத்தில் பிதற்றிக் கொண்டிருந்த போது தான் இரவு வந்தது உறைத்தது.

இதோ இன்று அக்கா பிறந்தநாள் வாழ்த்து என்கிறான் பிரபு.

செர்ரியிடம் காட்டினேன் பிரபுவின் வாழ்த்து மடலை.

"பார்த்தாயா பிரபுவைக் கண்டு பயந்தாயே. அவன் என்ன செய்திருக்கிறான் பார்..."

ம்ம்ம்.... எதுவும் சொல்ல முடியாமல் போகிறான் செர்ரி.

தமிழச்சி
28.10.2009


 

தோழர் ஆனைமுத்துவுடன் ஓர் சந்திப்பு!

இம்முறை தமிழகம் போகும் போது கண்டிப்பாக தோழர் ஆனைமுத்துவையும் சந்தித்துவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கேற்றார் போல் வாய்ப்பும் கிடைத்தது. பாண்டிச்சேரியில் மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகச் செய்தி கிடைத்தும் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி வைத்துவிட்டார்கள் தோழர்கள். காலை பத்து மணியளவில் அவருடைய மகள் வீட்டுக்குச் சென்றோம். பெரியாருடன் இருந்த முதிய தோழரை சந்திக்கப் போகிறோம் என்னும் பதட்டமும், ஆவலும் அதிகமாக இருந்தது.

1952-இல் இருந்து பெரியாருடன் இணைந்து தீவிரமாக இயக்கப்பணிகளை செய்துக் கொண்டிருந்தவர் தோழர் ஆனைமுத்து. 1963-இல் இருந்து தினமும் பெரியாருடன் இணைந்திருக்கும் வாய்ப்பை பெற்றிருந்தவர். 1957-இல் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் 18-திங்கள் கடும் தண்டனையாக சிறையில் அடைக்கப்பட்டவர். 1974-இல் பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் தொகுத்து பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என்று தொகுதிகளாக வெளியிட்டவர்.
1975-இல் தி.க தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தி.க வில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பிறகு இன்னும் தீவிரமாக இயங்கியவர் தோழர் ஆனைமுத்து. நாம் அவரை சந்திக்க சென்ற போது கூட பெரியாரின் சிந்தனைகளை மீண்டும் நூல்களாக வெளியிடும் பணியில் இருப்பதாக அறிந்தோம். 84-வயதான தோழர் ஆனைமுத்து இன்னமும் கொள்கைப்பிடிப்புடனும் அதை செயல்படுத்துவதிலும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். அவருடன் இருந்த சில மணிநேரங்களில் அத்தனையும் உண்மைதான் என்பதை உணர்ந்தேன்.

images_14அருகில் இருந்த உதவியாளரிடம் ´சிந்தனையாளன்´ பத்திரிகை பணிகள் குறித்து பேசுவதும், அடிக்கடி வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளித்துக் கொண்டும், எம்மோடும் பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருந்தார். எந்த கேள்வி கேட்டாலும் வருடம், தேதி என ஆதாரத்தோடு பேசுகிறார். அவரின் நினைவாற்றல் அபாரமாக இருக்கிறது. எதையும் யோசித்து பேசுவதில்லை. சடசடவென பதில்கள் வருகிறது. இந்தியக் கல்வி திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

பொதுக்கல்வி, அறிவியல் கல்வி, தொழில் நுட்பக் கல்வி இவற்றில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அந்த படிப்பின் காரணமாக படித்தவர்கள் எல்லாம் பகுத்தறிவாளர்களாகவில்லை. இதுதான் இன்றைய இந்தியாவின் இருப்பு நிலையாக இருக்கின்றதே. ஏன்?" என்ற கேள்வியை முன்வைத்தோம்.

இந்தியாவிலுள்ள எல்லா வகுப்பினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு, இந்திய அரசாங்கக் கல்வி, இந்திய அரசாங்க வேலை, மாநில அரசாங்கக் கல்வி, மாநில அரசாங்க வேலை ஆகியவற்றில் கிடைத்திட வகை செய்வதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 1978-இல் இருந்து கிட்டத்தட்ட 30-ஆண்டுகளாக பீகார், உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம், டில்லி, ஆந்திரா, கேரளா முதலான மாநிலங்களுக்கும் சென்று பரப்புரை கிளர்ச்சி செய்து வரும் தோழர் ஆனைமுத்துவிடம், இந்தியக் கல்வித் திட்டத்தைக் குறித்து பேசும் தகுதியும், சிந்தனையும் இருப்பதால் இந்தியக் கல்வித் திட்டத்தைக் குறித்த கேள்வியை முன்வைத்தோம்.

தோழர் ஆனைமுத்துவும் தெளிவாக இந்திய கல்வி குறித்து விளக்கினார்.

கல்வித் திட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் மதநம்பிக்கை சார்ந்த கல்வியே கற்பிக்கப்படுகிறது. அரசாங்க கல்வியிலும் அப்படியே. தனியார் கல்வியிலும் அப்படியே. மதநிறுவனங்கள் சார்பிலும் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் அப்படியே. இப்படிப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் எவ்வளவு காலத்திற்கு கல்வி பெறுகிறார்கள். பகுத்தறிவு பெற்றுக் கொள்ள வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

பெரியார் இயக்கம் போன்ற வெளியில் உள்ள தூண்டுதல் காரணமாக படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களுள் எப்போதுமே ஒரு சில பேர் மட்டுமே பகுத்தறிவாளர்களாக உருவாக முடியும்.

பெரியார் 50-ஆண்டுகள் பரப்புரை செய்த பிறகு இப்போது அவருடைய இயக்கத்தினர் அதேக் கொள்கையை பரப்புரை செய்த பிறகு 80-ஆண்டுகள் கழித்து மிகச் சிலரே பகுத்தறிவாதிகளாக இருக்கிறார்கள். படிப்புத் திட்டம் இப்படி இருக்கிற வரையில் இதே நிலைமை தான் நீடிக்கும் இதை அடியோடு மாற்றுவதற்கு பெரியார் சொன்ன வழி

1-கல்வி என்பது அரசாங்கத்தினால் மட்டுமே தரப்பட வேண்டும்.
2-கல்வியில் இருந்து மதம் என்பது அறவே பிரிக்கப்பட வேண்டும்.
3-அரசின் அன்றாட நடப்பில் இருந்து மதம் பிரிக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட நிலை உருவாக்கப்பட்டாலன்றி பகுத்தறிவு வளராது. இன்றுள்ள நிலையே நீடிக்கும்.

இந்தியாவில் கல்வி அரசினால் மட்டுமே கல்வி தரப்படும் நிலையை பெரியார் தொணடர்கள் உண்டாக்க வேண்டும். அப்படி தரப்படும் கல்வி, மதம் சாராத கல்வியாக இருக்கும்படி பெரியார் தொண்டர்கள் முயற்சிக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசை பெரியார் தொண்டர்கள் உருவாக்க வேண்டும். திராவிடர் கட்சி ஆட்சியாக எது இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சி தனக்கென்று ஒரு கல்விக் கொள்கையை கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு வகுக்கும் கல்விக் கொள்கையை ஏற்றதான் ஒவ்வொரு மாநில அரசும் கல்வியைத் தர வேண்டும்.

இந்த நிலை மாற்றப்படுவது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குள்ள அமைப்பில் தமிழ்நாடு மட்டுமோ, இன்னொரு மாநிலம் மட்டுமோ தனியாக முயற்சித்து இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவர முடியாது. எனவே பெரியார் அவர்கள் 1971-இல் அறிவுறுத்தியபடி திராவிடர் இயக்கம் அகில இந்திய இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். இந்த அறிவுரையையும் பெரியார் தொண்டர்கள் அறிந்திருக்கப்படவில்லை. திராவிட வாக்கு வேட்டை கட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவில் ஆட்சி வடிவங்கள் மாறினாலும், ஆளும் கட்சிகள் மாறினாலும் ஆளும் வர்க்கத்தால் காலந்தோறும் மாறினாலும் அவர்களை இயக்குகின்ற இந்திய அரசு என்னும் இயந்திரம் மதத்தையும் மதம் சார்ந்த கல்வியையும் மதம் சார்ந்த விழாக்களையும், பண்டிகைகளையும் அழியாமல் பார்த்துக் கொள்வதை நோக்கமாகவே கொண்டவையாகும்.  தோழர் ஆனைமுத்துவின் இந்திய கல்வி குறித்த சிந்தனையில் நமக்கும் எந்த ஆட்சேபமும் இருக்காது. மிகத் தெளிவான தற்போதைய நிலையை விளக்கி இருக்கிறார். அப்படியானால் இந்திய அரசு இந்து சாஸ்திரங்களையும், இந்து மத அரசமைப்புச் சட்டங்களையும் பாதுகாப்பதில் இன்னும் தீவிரமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறதா?

கண்டிப்பாக என்கிறார் தோழர் ஆனைமுத்து.

"எடுத்துக்காட்டாக பாருங்கள், பெரியார் சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்த காலத்தில் 1926-இல் (26.12.1926) திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு ஆண்டு வருமானம் 20-இலட்ச ரூபாய். அன்றைய பவுன் விலை 15-ரூபாய் இன்று 80-ஆண்டு பகுத்தறிவு பிரசாரம் முடிந்த பிறகு திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு ஆண்டு வருமானம் 1,600-கோடி ரூபாய். காணிக்கை வருமானம் 20-கோடி ரூபாய். இவையில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் ஏறக்குறைய 32-ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வெங்கடேச பெருமாளுக்கு சொந்தமாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்களை உடைமைகளாக வைத்துக் கொள்ள வெங்கடாசலப்பதி என்னும் கல்பொம்மைக்கு சட்டப்படி உரிமை உண்டு. அதாவது உயிர் இல்லை, உண்பது இல்லை, குடும்பம் நடந்துவது இல்லை என்றாலும் சொத்து வைத்துக் கொள்வது என்கிற அந்த காரியத்தை செய்வதற்கு மட்டும் ´வெங்கடாசலபதி´ சட்டப்படி உரிமை உள்ள மனிதனாக கருதப்பட்டு சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாட்டை இந்து சாஸ்திரங்கள், இந்து மதம், இந்து சட்டம், அரசமைப்புச் சட்டம் எல்லாம் 2009-இல் காப்பாற்றுகின்றன" என்கிறார் தோழர் ஆனைமுத்து.

அடுத்து பெண் விடுதலை குறித்த கேள்வியை எழுப்பினோம்..

"இந்தியாவில் உள்ள பெண் விடுதலை இயக்கங்கள் ஒவ்வொரு ஆணையும் கணவன் என்ற நிலையில் வைத்து ஒவ்வொரு கணவனும் மனைவிக்கு இழிக்கிற சித்திரவதைகள், கொடுமைகள், வன்புணர்ச்சி, உரிமை மறுப்பு இவற்றை மட்டுமே மையமாக வைத்து இவற்றில் இருந்தே விடுதலை பெற வேண்டும் என இயங்குகின்றன. ஆனால் இவை மட்டுமே போதாது. ஒவ்வொரு பெண்ணையும் குடும்பத் தலைவி என்று மட்டும் சித்தரித்து விட்டு, சமையல் வேலை, வீட்டு வேலை, பிள்ளை பெறும் வேலை, பிள்ளை வளர்க்கும் வேலை, இவ்வளவு கால்கட்டுக்களை போட்டு விட்டு பெண்ணுக்கு சமகல்வி, உரிமை மறுத்தல், சொத்தில் பங்குதர மறுத்தல், துணைவரைத் தேடிக் கொள்ள உரிமை தரமறுத்தல், மறுமணம் பெறும் உரிமையை மறுத்தல் முதலான மதம் சார்ந்த கொடுமைகளை எதிர்ப்பதில்லை. அத்துடன் சொத்து, வேலை வாய்ப்பு, உயர் படிப்பு இவற்றில் சமபங்கு அதாவது 50% விழுக்காடு வேண்டும் என்று போராடுவது இல்லை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியது மட்டுமே பெண் விடுதலை போராட்டம் ஆகும். இது சமதர்ம அரசு அமைப்பு அமைக்கப்படுவதிலேயே சாத்தியமாகும்"

என்று இந்தியப் பெண்களின் விடுதலை குறித்த கருத்தை சுருக்கமாக கூறினார் தோழர் ஆனைமுத்து.

பெண் விடுதலைக் குறித்து இன்றைய பெண்களின் பெண்ணுரிமைச் சிந்தனை என்பது எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் தோழர்...

"இந்தியாவில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள், மலைவாழ் வகுப்பு பெண்கள், இஸ்லாமியப் பெண்கள் கல்வி பெறாதவர்களாக வைக்கப்பட்டிருக்கின்றனர். முதலில் இந்த நிலையை மாற்ற வேண்டும். திருத்தப்பட்ட இந்து சட்டப்படி இந்து பெண்களுக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் நடைமுறையில் உரிமை இயல் துறையில் செயல்பாட்டுக்கு வர அரசும், மக்களும், கட்சிகளும் இணைந்து வழிகாண வேண்டும். உள் சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும் அகமண முறை மாறுவதற்கு சட்டத்தில் தடை இல்லை. ஆனால் நடப்பில் வரவில்லை. இவையெல்லாம் பற்றி முதலில் உயர்நிலை கல்வி திட்டத்தில் விரிவான பாடங்கள் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்னும் ஒரு தலைமுறைக் காலத்திலாவது பெண்கள் தாங்களே உரிமைக்கு போராட வருவார்கள்.

பெண்கள் உரிமைக்காக ஆண்கள் போராடுவார்கள் என எப்போதும் நினைக்கக் கூடாது. வீடுதோறும் நடைப்பெறுகின்ற பார்ப்பனியச் சடங்குகள், புரோகிதரை அழைக்கும் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் காலகாலமாக நடைபெறுவது உயர்ந்தது மேலானது என்னும் மூடநம்பிக்கை மக்களிடமிருந்து ஒழியும். இத்துடன் பெண்களுக்கு சட்டமன்றங்கள், நாடாளுமன்றம், ஊராட்சி மன்றங்கள், அரசு அலுவலகங்கள் பெண்மக்களுக்கு சரி பாதி 50% விழுக்காடு ஒதுக்கி கொடுக்கப்பட சட்டப்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்."

என்று தோழர் ஆனைமுத்து தமது பெண்ணிய சிந்தனைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார். தற்போதைய தி.க அமைப்பு மற்றும் பெ.தி.க செயல்பாடுகளைக் குறித்து கருத்து கேட்ட போது அவற்றைக் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்றார். பெரியார் சிந்தனைகள் மீண்டும் புத்தகமாக கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் தோழர் ஆணைமுத்துவின் சீரிய பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. "பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்" இரண்டாம் பதிப்பு 2010- பிப்ரவரியில் வெளியிடப்பட உள்ளது.

தமிழச்சி
27.10.2009

 

டுமீல் குப்பம்!

CIMG2458-1-_1


பேரைக் கேட்டபோதே விவகாரமாக இருக்கிறதே என்று தோழர்களிடம் விசாரித்தேன். அடுக்கடுக்கான உண்மைகளை எடுத்துவிட்டார்கள். கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அத்தனை செய்திகளும் உண்மைதானா என்று தெரிந்து கொள்ள எனக்குத் தெரிந்த இரண்டு பத்திரிகையாளர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். அத்தனையும் உண்மைதான். இன்னும் அவர்களுக்கு தெரியாத செய்திகள் கூட எங்களுக்குத் தெரியும். என்ன எதையும் வெளியில் எழுதிவிட முடியாது. பெரிய இடத்து விவகாரம் இல்லையா? வீட்டுக்கு ஆட்டோ வந்துவிடும் என்றார்கள்.

"நீங்களே இப்படி பேசலாமா? இதையெல்லாம் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டாமா? அநீதியோடு அனுசரித்துப் போகிறீர்களே உங்களுக்குள் நேர்மையான உணர்வு இல்லையா?" என்ற கேள்வியை வைத்த போது...

"அட! நீங்க வேற, நேர்மை, உண்மை எல்லாம் டயலாக் பேசதான் சரி. எதையும் நாங்கள் செய்துவிட முடியாது. பேனா எங்கள் கைகளில் தான் இருக்கிறது. அது என்ன எழுதவேண்டும் என்பதை மேலிடம் தான்
தீர்மானிக்கிறது. இந்த மேட்டருக்கு நாங்கள் வரல... நீங்க பேசிவிட்டு கிளம்பிடுவீங்க... நாங்க பேசினா மாட்டிக்குவோம். முடிந்தால் நீங்களே எழுதிக்கோங்க. எங்க பேரை வெளிய விட்றாதீங்க..."

பத்திரிகை நண்பர்கள் கவனமாக ஒதுங்கிக் கொண்டார்கள்.

அது என்னமோ நேர்மை, நீதி, அநீதி என்றாலே நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் தமிழ்நாட்டில்...

பத்திரிகை நண்பர்கள் சொன்னபடி நாமே எழுதலாம் தான். ஆனால் பார்க்காமல் எதை எழுதுவது? எதற்கும் டுமீல் குப்பத்தையும் நேரில் சென்று ஒரு நோட்டம் விட்டு வைப்போம் என்று தோன்றியது.

தமிழ்நாட்டில் குப்பங்களை நான் பார்த்திருக்காததால் ஜாலியாக கிளம்பிவிட்டேன்.

நல்ல வெயில், கரிப்புக் காற்றின் சாரலும் காக்காய்களின் கத்தலும், கவிச்சை வாசத்திற்கு மத்தியிலும் டுமீல் குப்பம் இருந்தது. அதுவும் கடற்கரை ஓரத்திலேயே சில அடிகள் தூரத்திலேயே குப்பம் இருக்கிறது. அங்கே இருக்கும் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதம் இல்லை. மழைக்காலத்திலோ அல்லது வெள்ளம் புயல் வந்தாலோ என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதிலும் அடிக்கிற சாதாரண காற்றிலேயே வீட்டின் கூரைகள் பிய்த்துக் கொண்டு போய்விடுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது.

நான் பகலில் செல்வது பாதுகாப்பானது என நினைத்திருந்ததால் அங்கு வசிக்கும் மீனவர்களிடம் இடக்கு மடக்காக என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற அசட்டுத் தைரியத்துடன் இருந்தேன். என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று எதையும் நான்
தீர்மானித்துக் கொள்ளவில்லை. இயல்பாகவே நம் மீனவ தோழர்களுடன் பேச முற்பட்டேன்.

பகலிலேயே தண்ணி அடித்துவிட்டு மப்பில் கடற்கரை மணலில் சிலர் படுத்துக் கொண்டும், சிலர் ஏதோ காரசாரமாக பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களிடம் போய் நான் பேசினாலும் பதில் சொல்லும் அளவிற்கு அவர்கள் நிதானத்தில் இல்லை.

தூரத்தில் சில இளைஞர்களும், முதியவர்களும் வலைக்குள் சிக்கியிருந்த சின்ன மீன்களை பிய்த்து பிய்த்து அருகில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் போட்டுக் கொண்டிருக்க இரண்டு பெண்கள் அந்த மீன்களை கழுவி கூடையில் போட்டுக் கொண்டிருந்தார்கள். எப்போதாவது சிலர் அவர்களிடம் வந்து மீன்களை விலைக்கு வாங்கிக் கொண்டு போனார்கள்.

செல்வமணி என்னும் மீனவருடன் பேச ஆரம்பித்தேன். என்னிடம் பேச ரொம்பவும் வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தார்.

சரி கொஞ்சம் இயல்பான நிலைக்கு வரட்டுமென்று மீன் தொழில் குறித்து பேச ஆரம்பித்ததும் மெட்ராஸ் பாஷையில் அழகாக பேச ஆரம்பித்துவிட்டார். அரை மணி நேரத்திற்குள் இயல்பான நிலைக்கு வந்திருந்தார்.

"நீங்க எங்கிருந்து வரீங்க..?" என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக கேட்டார்.

"பாரீஸ்ல இருந்து வந்திருக்கேன்.."

"அது எங்க இருக்கு..?"

"பிரான்சில..."

"பிரான்சா அது எங்க இருக்கு..?"

"இந்தியா மாதிரி அது ஒரு நாடு. உங்களுக்கு தெரியாதா..?"

"ஆங்... உலகம் சுற்றும் வாலிபன்ல வெளியூரெல்லாம் காட்டுவாங்கல்ல, அதுல பாத்திருக்கேன். அதான் பிரான்சா.."

"உலகம் சுற்றும் வாலிபனா? என்னது அது..?"

"சினிமா படங்க.. நம்ப எம்.ஜி.ஆரு நடிச்சது. இதுகூட தெரியாதா? நானு 30- வாட்டிக்கு மேல பாத்திருக்கன்ல..."

தன்னுடன் இருந்த சகாக்களை பார்த்து "இங்க பாருங்கப்பா இவங்களுக்கு நம்ப தலைவரு படத்த பத்தி ஒன்னும் தெரியல...."

"இன்னாது அது எப்பேர்பட்ட படம். அடுத்தவாட்டி தியேட்டருல வந்தா பார்த்து வையிங்க.. பாட்டெல்லாம் என்னமா இருக்கும் தெரியுமா..?"

அவர்களை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் செல்வமணி
28-வயதுடையவர். 2-வயதில் ஒரு மகன் இருக்காராம். 5-ஆம் கிளாஸ் வரைதான் படித்தாராம். அதற்கு பிறகு தொழில்ல இறங்கிட்டாறாம். எந்த கல்வியறிவும், பொது அறிவும் இல்லாமல் மீன்பிடி தொழில், குடி, குப்பம் வரையிலேயே அவருடைய சிந்தனை இருக்கிறது.

பாரீஸ் தெரியவில்லை என்கிறார் 28-வயதான இளைஞர். சற்றே அதிர்ச்சியும், ஆச்சரியத்துடனும் மீண்டும் பேச ஆரம்பித்தேன்.

"28-வயசுன்னு சொல்றீங்களே உங்க பிறந்த தேதி என்ன..?"

"அதெல்லாம் தெரியாதுங்க..."

"அப்ப எப்படி 28-வயசுன்னு சொல்றீங்க..?"

"தோத்தமா சொன்னங்க..."

"என்னது தோத்தமாவா? பிறந்த பதிவு இல்லையென்றால் ஒட்டு போடறதுல இருந்து உரிமை இருக்காதே..!"

"அதெல்லாம் பிரச்சனையில்லைங்க.."

"அப்ப ஓட்டு போட்டு இருக்கிங்களா?"

"போட்டு இருக்கங்க..."

"எப்படி?"

"என்னங்க இப்படிலாம் கேட்கறிங்க. எனக்கு ஒண்ணும் புரியமாட்டுங்குது..."

"சரி.. சரி.. மீன் தொழிலில் உங்களுக்கு தேவையான வருமானம் கிடைக்கிறதா....?"

"ஏதோ கிடைக்குதுங்க, சில நேரத்துல ஒண்ணும் கிடைக்காது. அப்பலாம் கஷ்டம்தான்..."

"மழை காலத்துல என்ன செய்வீங்க....?"

"பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு போவங்க..."

"ம்ம்ம்... சுனாமி வந்துதே; அப்ப இந்த இடத்துல பாதிப்பு எப்படி இருந்தது...?"

"அதையேங்க கேக்கறீங்க... எங்க பொருளுங்க எல்லாம் நாசமாப் போச்சு..."

"ஆமா! இந்த இடத்தை ஏன் டுமீல் குப்பம்னு சொல்றாங்க..."

கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு "தெரியலைங்க அவராண்ட கேட்டுபாருங்க..."

"ம்ம்ம்..."

அதே வலையில் கிடந்த மீன்களை ஒரு முதியவர் பிய்த்து வாளியில் போட்டுக் கொண்டிருந்தார். அவரே பேசவும் ஆரம்பிதார்...

"என்னோட பேரு பன்னீர் செல்வம்ங்க, 55-வயசாவுது எனக்கும் பிறந்த பதிவுலாம் கிடையாது. நானு ஸ்கூலு பக்கமே போகலைங்க..."

"ம்ம்ம்...."

"அப்பா சொல்லிப்புட்டாரு, படிச்சாலும் மீனு புடிக்கதானே போறே இன்னாத்துக்கு படிப்புப்புன்னு கேட்டாரு. நம்மக்கும் கடலு பொழப்ப வுட்டா வேற எதுவும் தெரியாதுங்க. அதால இதுலேயே இருந்துட்டேன்...."

"உங்க பிள்ளைங்கள படிக்க வைச்சிங்களா...?"

"ஓ.. படிச்சிருக்கானே!..."

"எத்தினாவது படித்திருக்கார்...?"

"5-ங் கிளாஸ்..."

"அதுக்கு மேல படிக்கிலையா...?"

"இல்லைங்க, தொழிலுக்கு ஒரு கை கொறைஞ்சுது வாடான்னுட்டேன்..."

"உங்க பழக்க வழக்கம் பற்றி சொல்லுங்களேன்..."

"என்னத்த சொல்றது...?"

"ஏதாவது சொல்லுங்க. உங்க விழாக்கள் ஏதாவது இருக்கா...?"

"ஆமா.. ஆமா.. எங்களுக்கு குல தெய்வம் பெரிய பாளையத்தம்மன் தான். வருஷா வருஷம் பொங்க வச்சி விழா எடுப்போம். நம்ப சாதி சனங்களாம் வந்துடும்ங்க..."

"ம்ம்... ஏன் இந்த இடத்தை டுமீல் குப்பம்னு சொல்றாங்க..?"

"அதுவாங்க மொதல்ல பவானி குப்பம்னுதான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க... இப்பவும் சொல்றாங்க. இருந்தாலும் டுமில் குப்பம்னும் சொல்றாங்க. இன்னாத்துக்குன்னு தெரியலம்மா..."

மைலாப்பூரில் சாந்தோம் அருகே இருக்கும் பவானி குப்பத்திற்கு டுமீல் குப்பம் என்ற பேர் எப்படி வந்தது. உங்களுக்காவது தெரியுமா?

பத்திரிகையாள தோழர்களிடமும் இதைத்தான் கேட்டேன்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் அடியாட்கள் முழுவதும் இந்த குப்பத்தில் தான் இருக்கிறார்கள். மீன்பிடி தொழில் மட்டுமல்ல; இங்கே கஞ்சா விற்பது, ஆயுதம் கடத்துவது, கொலை, கொள்ளை, ஆள்காட்டி வேலை, மிரட்டல், விபச்சாரம் உள்பட அத்தனை சமூக விரோத செயல்களும் ஸ்டாலின் பெயரால் நடக்கிறது.. நடந்துக் கொண்டும் இருக்கிறது.

குவாட்டரு, பிரியாணிக்கு ஸ்டாலினின் பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்டிக் கொண்டு போவதும் இங்கே தான்.

ஸ்டாலினை பேர் சொல்லி கூப்பிடக் கூடாது. அண்ணன் என்று அன்போடு பேசுவதும் இங்கே தான்.

பேரு சொன்னா என்னவாம் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ப்ளேடு போட்டுறுவாங்க...

சமீபத்தில் வீரமணி என்னும் தாதா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாரல்லவா? இந்த பகுதியில் தான் அச்சம்பவம் நடந்ததாக தோழர்கள் குறிப்பிட்டார்கள்.

இப்படி எல்லா சமூக விரோத செயல்களிலும் ஈடுபடும் தமிழக துணை முதல்வர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

நடிகை புவனேஸ்வரி மேட்டரில் தான்.

விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி வீட்டுக்குள் போலீஸ் நுழைய, தமிழக அரசியலின் முக்கிய தலைவரின் மகனுடன் புவனேஸ்வரி இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தார்களாம். அதைப்பார்த்து நடிகை புவனேஸ்வரி, "இவரு நமக்கு தெரிந்த ஆளுதான். என்னைய கைது பண்ணால் என்ன நடக்கும்னு தெரியுமில்ல..." என்று போலீசாரையே மிரட்டியதாக செய்திகள் வெளியிட்டபட்டதே தவிர ஸ்டாலினுடன் அந்த நடிகை புகைப்படத்தில் இருந்ததை எந்த பத்திரிகைகளும் போடவில்லை.

படிப்பவர்கள் யார் என்று குழம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த இந்த நடிகைகள் என்று விளாவரியாக படம் போட்டு செய்திகள் போடுவதற்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைகள், அரசியல்வாதிகளை மட்டும் ஏன் அம்பலப்படுத்துவதில்லை?

ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் நேர்மையாக செயல்படுகிறார்களா?

குற்றவாளிகள் யாராக இருந்தால் என்ன? ஏன் இருட்டடிப்பு செய்திகளையோ அல்லது தனிநபரின் அடையாளத்தை மறைத்தோ செய்திகள் போட வேண்டும்?

நடிகர் சங்கம் பத்திரிகையாளர் மீது பாயும் போதுதான் ´பத்திரிகை தர்மம்´ பற்றி ஞானோதயம் வருமா?

புவனேஸ்வரிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விகளெல்லாம் வராதா?

* "பார்ப்பனியத்துக்குச் சிறிது சிறிதாக அழிவு வந்து கொண்டு இருப்பது போலவே, பத்திரிகைத் தத்துவத்துக்கும் நல்லதொரு அழிவு உடனடியாக ஏற்படாதவரை இந்நாட்டால் மனித சமுதாய ஒழுக்கம், நேர்மை, நாணயம், சமாதானம், சாந்தி ஏற்படுவது என்பது முடியாத காரியமேயாகும் என்போம். சாஸ்திரம், புராணம், சூது, கள், விபசாரத்தனம், சினிமா முதலியவற்றால் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டு வளர்ந்துவரும் கேடுகளை விட பெரும்பாலான பத்திரிகைகளால் மிக மிகக் கேடும் நாசமும் ஏற்பட்டு வருகிறது." என்பார் பெரியார். (´குடிஅரசு´ - 29.03.1947)

இந்த காலத்துக்கும் பெரியாரின் சிந்தனை எடுத்துக்காட்டாக இருக்கிறது.

நாம் சினிமா, பத்திரிகை, அரசியல்வாதிகள் கையில் சின்னா பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேருதான் பெரிசா மக்களாட்சி!

டுமீல் குப்பத்து மக்களின் அறியாமையை எப்படி தந்திரமாக அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக உபயோகித்துக் கொள்கிறார்களோ அதுபோலவே, தமிழ்நாட்டு மக்களின் அலட்சியத்தையும், அனுசரித்துப் போதலையும், தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் பொறுக்கி அரசியல் இருக்கும் வரையில் நாமெல்லாம் உருப்படுவோமா?

தமிழச்சி
14.10.2009


 

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel