கதை

பேசுவதால் என்ன பிரச்சனை?

ஆகைகயால் மனம் பாதிக்காத வண்ணம் இருப்பதற்கு கையாளப்படும் வழிகளுக்குள் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. மற்றவர்களுடன் பழகும் போது தான் நாம் நடைமுறை வாழ்க்கைக் கல்வியை கற்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். 

பேசுவது, கேட்பது, சிரிப்பது, கோபப்படுவது, அழுவது, பயப்படுவது, சோர்வது போன்ற பல செயல்களை நாம் பிறருடன் பழகும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செய்கிறோம். இவற்றை உணர்ந்து கொள்ள முடிந்தாலும் மிகச் சிலரால் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் நம்முடைய பேச்சக்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய விஷயம் என்பதை மறந்து விடக்கூடாது......" 

என்ற வரிகள் வரை வாசித்து விட்டு என் தற்போதைய நிலைப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். 

உள்நோக்கிய தன்னிலை ஆய்வு எப்பவுமே நமக்கு தேவையானதாக இருக்கிறது. தெளிவான அறிவையும், புரிதலையும் பிரச்சனையை நம் மனம் உடல் பாதிக்காத வகையில் எப்படி நம் நடவடிக்கைகள் வருகிறது என்பதை என்னில் இருந்து விலகி நான் என்னை பார்க்கிறேன்.... 

கடந்து வந்த காலங்களையும் கடக்க போகும் காலங்களையும் நான் நானாக என் மௌனத்தின் ஊடாகவோ அல்லது விமர்சனங்களை நாடகபாணி வாக்கியங்களுடன் விவாதித்துக் கொண்டோ சமுக விமர்சனம் என்ற கட்டங்களையும் தாண்டி தீர்வுகளுக்கான விவாதமாக ஏன் சொல்ல முடியவில்லை அல்லது ஏன் செல்லுவதில்லை என்று நான் நானாக என்னில் இருந்து விலகி நின்று என் நானை கேட்கும் போது சமுகத்தில் எனக்கும் உனக்குமான உறவுகளின் தொடர்புகளை நோக்கி ´நான்´ உற்று நோக்க வைத்திருக்கிறது....

´நான்´ எப்போதும் நானாக இருப்பதில் அகங்காரம் இல்லை. 
அது பிறருக்கு அலுப்பை தரும்போது எனக்குள் அகங்காரம் பேசுகிறது ஏதோ ஒரு மொழியால்....

அது மௌனமாகவோ..., எழுத்துக்களாகவோ..., செயலாகவோ...!  


தமிழச்சி
24.03.2010

 

அல்லாவின் முரண்

images'இப்லீஸ்´ குறித்து சுவாரசியமான ஓர் விவாதம் சில நாட்களுக்கு முன் முகநூல் நண்பர்களுடன் நடைப்பெற்றது. நீண்ட விவாதம் நடைபெற்றாலும் தெளிவற்ற நிலையிலேயே பல கருத்துக்கள் இருந்தன. இன்னும் சற்று விரிவாக ´இப்லீஸ்´ குறித்து மற்றொரு முறை விவாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள குரானை புரட்ட ஆரம்பித்திருந்தோம்...

´இப்லீஸ்´ குறித்து அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே சிறு அறிமுகத்துடன் இப்லீஸ் கதையை பார்ப்போம்.

உயிர்கள் உருவாக்கம் குறித்து இந்து, கிறிஸ்தவ மதங்கள் எப்படி தங்களுக்கென சில புராண கதைகளை வைத்திருக்கின்றதோ அதுபோல் இஸ்லாம் மதத்திலும் உள்ள புராண கதையை குறித்து குரான் கூறுகிறது:

நெருப்பின் ஜூவாலைகளால் ஜின்களைப் படைத்தான்(55-5). நீரில் இருந்து அல்லா மனிதனை உற்பத்தி செய்கிறான்(25-54). ஜின்களிடம் இறைவன் பூமிக்குப் பிரதிநிதியாக நான் ஆதமைப் படைக்கப்போகிறேன் என அறிவிக்கிறார். அல்லாவின் கூற்றில் ஜின்களுக்கு விருப்பம் இல்லை. ஜின்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன. இருப்பினும் அல்லா களிமண்ணால் ஆதமைப் படைத்து பூமியின் பிரதிநிதியாக நியமிக்கிறார் அல்லா.

அதற்கு பின் ஜின்களிடம், "ஆதமுக்குப் கீழ்படிந்து நடங்கள்" என கட்டளை போடுகிறார். ஜின்களும் அல்லாவின் கட்டளைக்கு கீழ்படிகின்றன.

´இப்லீஸ்´ ஆதமுக்கு அடிபணிய மறுக்கிறது.

"களிமண்ணால் படைத்த ஆதமை விட நெருப்பினால் படைத்த நானே சிறந்தவன். அப்படியிருக்க நான் ஏன் ஆதமிடம் அடிபணிய வேண்டும்?" என்று கூறுகிறது இப்லீஸ்.

தன் பேச்சை கேட்கவில்லையே என்று கோபம் வருகிறது அல்லாவுக்கு. "இதிலிருந்து நீ இறங்கி விடு" என்கிறார்.

இப்லீஸ் மறுக்கிறது; "உலகத்தில் உயிர்களின் முடிவு வரும்வரை உன் படைப்புகளின் வழி கெடுக்க எனக்கு இடம் கொடு" என்று எதிர்வாதம் செய்கிறது.

அல்லாவுக்கு தன் படைப்பில் அபார நம்பிக்கை. ´இப்லீஸ்´ பேச்சுக்கு
மரியாதை கிடைக்காது என தப்பு கணக்கு போட்டுவிடுகிறார். ´இப்லீஸ்´க்கு அனுமதி கிடைத்து விடுகிறது.

ஆக, அல்லாவுக்கு சவால் அது(7-15)

அல்லாவுக்கும் ´இப்லீஸ்´சுக்கும் அன்றிலிருந்து போட்டி தொடங்குகிறது...........

´இப்லீஸ்´ வளர்ச்சி அதிகமாகிறது.(17-64)

அல்லா இப்லீஸ் ஜின் இடம் தோற்றுப் போய்விட்டார்.

அல்லா தோற்றுப் போய்விட்டார் என்பதையும் தாண்டி சில முரண்களையும் நாம் பார்க்க வேண்டும். அல்லாதான் உலகில் உள்ள உயிர்களை படைக்கிறார் என்றால், உலகில் உள்ள உயிர்களில் 3-இல் 2-பிரிவு உயிர்கள் வேற்று மதங்களாக இந்து, கிறிஸ்து, புத்தம் போன்றவைகளில் இருப்பது ஏன்?

அல்லா தன் சொற்படி நடக்கும் பெரும்பான்மையான ஜின்களின் நிலையில் இருந்தும் தனக்கு ஆதரவாக தக்க வைத்துக் கொள்ளாத நிலையில் இருப்பதும் ஏன்?

அனேக ஜின்கள் ´இப்லீஸ்´ வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஏன் சிறுபான்மை கூட்டத்தினர் மட்டும் அல்லாவின் கட்டுப்பாட்டிற்கு மட்டும் ஒத்துழைக்க வேண்டும்?

இன்னொரு குரான் வாக்கியமும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

அல்லா ஒவ்வொரு இஸ்லாமியன் யுத்தம் செய்ய வேண்டியதும் யுத்தம் செய்ய மறுப்போரை எப்படி தண்டிப்பது என்பது குறித்தும் இவ்வாறு கூறுகிறார்:

யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது(2-216)

யுத்தம் செய்ய மறுப்போரை நீங்கள் சந்திப்பீர்களானால் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)

அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை கணுக் கணுவாக துண்டித்து விடுங்கள் (8-12)

அல்லாவுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் யுத்தம் செய்யுங்கள்
(8-49)

சிறை பிடியுங்கள் முற்றுகையிடுங்கள் பதுங்கி இருந்து பாயுங்கள் (9-5)

---- போன்ற குரான் வாக்கியங்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறோம்.

யுத்தத்தை புறக்கணிப்பவர்களை வெப்பம், வேதனை, அழுகை, இழிவு வந்தடையும். அவர்கள் செல்லும் இடம் நரகம்தான் (9-81, 82, 87, 90, 95)

யுத்தம் செய்ய மறுப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனை இது என்கிறார் அல்லா.

அல்லாவின் செயல்பாட்டின் மூலமும் மேற்குரிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்.

´நூற்´ - ´ஹீத்´ - ´ஸ்மூத்´ - ´ஸாலிஹை´ - ´லூத்´ - ´ஷீஐபை´ - ´மூஸா´ - ´ஆப்ரஹா´ - உட்ளிட்ட நபிகளை மார்க்கம் பரப்பக்கோரி அல்லா மக்களிடம் அனுப்பிய போது அம்மக்கள் எதிர்த்தார்கள், நம்பிக்கையற்று இருந்தார்கள் என்பதற்காக அம்மக்களை புயல், பூகம்பம் மற்றும் கற்களால் கூட கொன்றிருக்கிறார் அல்லா.

அதற்கு அல்லா கூறும் காரணம் :

"அல்லாவின் மார்க்கத்தை குறை கூறுவோருடன் போரிடுங்கள்(9-12)" என்கிறார். அதை அல்லா செயல்படுத்தியும் இருக்கிறார் என்பதை நபிகள் கூற்றை ஏற்காத மக்களுக்கு கிடைத்த தண்டனையை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

இப்படி தீவிரமாக பேசிய அல்லா இப்லீஸிடம் ஏன் யுத்தம் செய்யவில்லை? ஏன் தண்டிக்கவில்லை?

இதுபோன்ற பல கேள்விகள் எழுப்பப்படாமல் ´இப்லீஸ்´ என்னும் சைத்தானிடம் அல்லா தோற்றுப்போனது உண்மையா? என்று நடைபெற்ற விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இஸ்லாம் மதவாதி என்ன பதில் கூறுகிறார் என்பதை பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....

இனியும் குரானில் இருக்கும் முரண்பாடுகள் அலசப்படலாம்....

நாகரிகமாய் விவாதிப்போம். மிரட்டல்கள் வேண்டாம்.

நன்றி

தமிழச்சி
18.11.2010

 

ஆன்மீக ஆப்ரேஷனால் ஆணாக மாறிய திருப்பதி வெங்கடாசலபதி!

9532-807123271363-3221358-45722033-5056614-n


"தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யுதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரியவர்த்தம் விதுர்புதாஹா..."என்று மனு சொல்வார். அதாவது, இமயமலை விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதிதான் தெய்வப்பகுதி. மற்றவை எல்லாம் மிலேச்ச பகுதி. [´மிலேச்சர்கள்´ என்பது காட்டுமிராண்டிகள் என்பதை குறிக்கும் சொல்]

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே மலைவாழ் மக்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கும், சமவெளி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அறிவு சார்ந்த சிந்தனைகளிலும், பழக்க வழக்கங்களிலும் ஏகப்பட்ட மாறுபாடுகள் உண்டு. மலைவாழ் மக்களின் வாழ்க்கைகள் அந்த மலைப்பகுதிகளிக்குள்ளேயே சுருங்கி விடுகின்றன. மலை வாழ்க்கையை தவிர அவர்களுக்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் மக்களோடு இணைந்து வாழ்வது என்பது முடியாத காரியமாக இருந்தது. வாழ்வோ, சாவோ தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடங்களிலேயே சாகும்வரை இருந்து விடுகின்றனர். அதே போல் அவர்கள் வசிக்கும் மலைப்பகுதியின் மேல்பகுதியை தெய்வத் தன்மை உடையதாகவும் கற்பித்துக் கொள்கின்றனர். தங்களை விட உயர்ந்த இடத்தில் தங்களுக்கென்ற கடவுள்கள் வைத்திருக்கும் பழக்கங்கள் எல்லா இன மலைவாசி மக்களிடமும் இருந்திருக்கிறது. மீண்டும் மனு கருத்துக்கு வருவோம்.

இமயமலை விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதிதான் தெய்வப்பகுதி என்று குறிப்பிட காரணம் ஆரியர்கள் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள். அவர்களுடைய கலாச்சாரங்களை விட பூர்வீககுடிகளாக இருந்த திராவிடர்கள் வடக்கு பகுதி வரையில் பரவலாக இருந்திருந்தனர். அவர்களின் தோற்றம் பழக்க வழக்கங்களை காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் மனிதர்களை விட இழிவானவர்களாகவும் கருதப்பட்டு தங்களுக்கு அடிமைகளாக வைத்திருக்கவும், தங்கள் கட்டளைகளுக்கு எதிராக இருப்பவர்களை கொன்றும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டும் கொண்டிருந்தார்கள். தென்னிந்திய மலைவாழ் மக்கள் ஆரியர்களிடம் இருந்து தாங்கள் பாதுகாப்பாக வாழ்வதாக நினைத்திருந்தார்கள். தென்னிந்திய மலையில் தொடர்ச்சியாக ஏழு குன்றுகள் உடைய மலைகள் இருந்ததால் அந்த இடம்  ஏழுமலை என்று அழைக்கப்பட்டது. தற்போது இருக்கும் மலைக்குன்றுகளை விட பழங்காலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகளும் வனவிலங்குகளுக்கும் மத்தியில் மலைவாழ் மக்கள் அக்குன்றுகளில் வாழ்ந்தனர். 

காடுகளில் மரங்களில் இருந்த பழங்களும், காட்டு விலங்குகளும் தான் உணவு. தின்னது போக நிம்மதியாக வாழ்ந்தோமா, இருந்தோமா என்று அம்மக்களால் இருக்க முடியவில்லை. திடீர் திடீரென எங்கிருந்தோ வரும் மிருகங்கள் தங்களை அடித்துக் கொல்வதும், தாக்குவதும், இருட்டில் விஷ ஐந்துக்கள் கடித்து சாவதும் காரணம் தெரியாமல் இருட்டின் மீது பயத்தை கொடுத்தது. "பயம் தான் மனிதனுக்கு கடவுளைக் கண்டுப்பிடிக்க வைத்தது" என்பார்கள். இந்த மலைவாழ் மக்களும் தங்கள் இனத்திற்கென்று கடவுளாக சூரியனை கும்பிட ஆரம்பித்தார்கள். பகல் வெளிச்சமும், வெட்பமும் தங்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுத்ததால் வானத்தை பார்த்து சூரியனை வணங்க ஆரம்பித்தார்கள். அடுத்ததாக தங்களை தாக்கும் விலங்குகளையும் வணங்க ஆரம்பித்தார்கள். பிறகு தங்களுக்கு காவலாக இருக்க காவல் தெய்வ முறையில் தங்கள் கடவுளை அமைத்தனர். மலைகளில் இருந்த பாறாங்கற்களைக் கொண்டு அந்த மலைவாசிகள் தங்களைப் போன்ற தோற்றமுடைய உருவத்தை அமைத்தார்கள். அதற்கு பெயர் காளி.

காளி என்றால் கறுப்பு தெய்வம் என்று பொருள். காளிக்கு இரண்டு கைகள். வலது கையை கீழ்நோக்கி காட்டும்படி வைத்து இடது கையை தன்னை நோக்கி தூக்கி உள்ளங்கையை காட்டுவது போல் காளியின் வடிவம். "எனக்கு காலடியில் படையல் இட்டால் உன்னை நான் காப்பேன்" என்பது மலைவாசிகளின் அர்த்தமாக இருக்கலாம். காளிக்கு மலையில் இருக்கும் பூக்களை வைப்பதும், இசையால் தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டு நடனமிட்டுக் கொள்வதும் அவை பயத்தை போக்கிக் கொள்ளவதற்கான செயலாகவும் [Entertainment] இருந்திருக்க வேண்டும். இதற்கு பின் இதே காளியை மையமாக வைத்து விழாக்களும் எடுக்கப்பட்டன.

பெரும்பான்மையான இனங்களில் முதல் தெய்வமாக உருவாக்குவது பெண் வடிவத்தைத்தான். அதற்கு காரணம் ஆண்கள் குடும்பத் தேவைகளுக்காக பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளையும், குடில்களையும் பாதுகாக்கவும், தங்களுக்கு தேவையான உணவுகளை தயாரிப்பதிலும் பெரும்பாலான நேரங்களை செலவிட வேண்டி இருந்ததால் மக்கள் தங்கள் பகுதி பாதுகாப்புக்காக பெண் தெய்வங்களை உருவாக்கினார்கள். அதைப் போலவே மலைவாசிகள் தங்கள் மலையையும் குடும்பத்தையும் தங்கள் இனத்தையும் காப்பாற்றிக் கொள்ள மலைக்காளியை உருவாக்கினார்கள். வேட்டைக்குச் செல்லும் போது ஆண்கள் மலைக்காளியை வழிபடுவதும், வேட்டைக்குச் சென்றுவந்த பின்பு வேட்டையில் கிடைத்த பொருட்களை காளியின் பாதத்திற்கு கீழே படையலிட்டு எடுத்துச் செல்வதும் அவர்களது பழக்கமானது.

இப்படி மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பல நூறு வருடங்களாக வெளி மனிதர்களால் இக்குன்றுக்குள் வரமுடியாத வரை மலைவாழ் மக்களின் பழக்க வழக்களில் எந்த கலப்படமும் இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு பின் வெளி மக்களான பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர்கள் மலைவாசிகளின் கடவுள் வழிபடும் முறைகளைக் குறித்து கேள்வியெழுப்பினார்கள். ´ஆகமம்´ தெரிந்த நாங்கள் கடவுளுக்கு பூசை செய்வதும், காளிக்கு எப்படி சக்தி கொடுப்பது என்பது குறித்தும் எங்களுக்கு தெரியுமாதலால் கடவுள் வழிப்பாட்டு முறையை மாற்றி அதன் பொறுப்புகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தந்திரமாக ஆரம்பித்தார்கள். சமவெளி பகுதிகளில் வசித்து வந்த மக்களை அவர்களுடைய பண்பாடு கலாச்சாரத்திற்குள் ஊடுருவி அவர்களை அடிமைப்படுத்தியிருந்த பார்ப்பன ஆதிக்கம் மலைவாழ் மக்களிடமும் தன் ஆதிக்கத்தை காட்டியது.மலைவாழ் மக்களுக்கு ஆச்சரியம், பயம். எங்கிருந்தோ மேலே ஏறி வந்து நம் தெய்வத்தை கேட்கிறார்களே என்று. மலைவாழ் மக்கள் பல நூறு ஆண்டுகளான தம்முடைய பழக்க வழக்கத்தை எப்படி விட்டுக் கொடுப்பது என்று அவர்களுக்குள் விவாதம். சிலருக்கு காளிக்கு சக்தி ஏற்றினால் நன்றாக இருக்குமே என்றனர். இன்னும் சிலர் நம் காளியை நம் பழக்க வழக்கப்படிதான் கும்பிட வேண்டும் என்றனர். இவை மலைவாழ் மக்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. காலப்போக்கில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

காளிக்கு மாமிசம் படைப்பதை மலைவாழ் மக்களிடம் தடை செய்ய வைத்தனர் பார்ப்பனர். பூக்களை நேரடியாக மக்கள் போடக்கூடாதென்று காளிக்கு ஆகமவிதியில் நாங்கள் வழிபாடு செய்து பூக்களை வைத்துபூஜித்து தருகிறோம் என்று தந்திரமாக பேசி காளியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் பார்ப்பனர். பிறகு காளிக்கு கோவிலும் கட்டப்பட்டது.இதற்கு பின் மலைவாழ் மக்கள் கருவறைக்கு வரக்கூடாது. இது முன்பு இருந்த காளி அல்ல. ´ஆகம´ ரீதியில் சக்தி ஏற்றப்பட்ட காளி என்றும் உரிமை கொண்டாட ஆரம்பித்த போதுதான் மலைவாழ் மக்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். இதற்கும் மேலாக இன்னொரு கூத்தும் நடந்தது காளிக்கு. காளியின் கைகளில் நாகப்பாம்பு பொறுத்தப்பட்டிருந்தது. இனி இது ´ப்ராப கண்டா´ [Famous] இது சைவர்களின் கடவுள் சிவபெருமான். இனி இது காளி கிடையாது என்றனர்.

தங்களை கோவிலுக்குள் விடாமலும் நேரடியாக கடவுளை பூஜிக்கவும் மறுத்த இவர்கள் இன்று பெண் கடவுளை ஆணாக மாற்றி சிவன் என்கிறார்களே என்று ஆவேசம் கொண்டனர். தங்கள் கடவுளை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தனர். இங்கேயும் பார்ப்பனர் தந்திரமாக பேசினர். நம் இருவருக்குமே தெய்வத்தால் பலன் கிட்ட வேண்டும். நமக்குள் சண்டை வேண்டாம். இந்த கோவில் மூலமாக உங்களுக்கும் வருவாய் கிடைக்கும். உங்களின் முன்னோர்கள் தொழிலான வேட்டையாடுதல், தேன் எடுத்தல், முடிமழித்தல் போன்றவையில் முடிமழித்தல் தொழிலை இங்கே செய்யுங்கள். இக்போயிலில் சாமி தரிசனத்திற்கு யார் வந்தாலும் உங்களிடம் தலையை மழித்துக் கொண்டுதான் உள்ளே வரவேண்டும். அதற்கான தட்சணையை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். உள்ளே என்ன தட்சணை மக்கள் தருகிறார்களோ அதை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். நம் இருவருக்குமே வருமானம் கிடைக்கும் என்றனர். பார்ப்பனர்களின் பேச்சைக் கேட்டு மலைவாழ் மக்கள் மீண்டும் ஏமாந்தார்கள். அம்பட்டையர்களாக கோவிலுக்கு வெளியே காளியை வழிபடும் உரிமையை இழந்து மொட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். பார்ப்பனன் கோவிலுக்கு உள்ளே சவுகரியங்களை அனுபவித்தார்கள்.

திருப்பதி ஏழுமலையில் காளியாக இருந்த பெண் சாமி பார்ப்பனர்களால் சிவன் கடவுளாக ஆணாக மாற்றிய சைவர்கள் பற்றிய செய்தி வைணவத்தை சேர்ந்த பக்தர்களுக்கு தெரிகிறது.வைணவத்தை சேர்ந்த ஸ்ரீ ராமானுஜர் காலமான 11-ம் நூற்றாண்டில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மாமாவாகிய திருமலை நம்பியிடம் இராமாயணம் கேட்பதற்காக திருப்பதிக்கு செல்கிறார். அப்போது தான் மலையில் காளியை சிவபெருமானாக்கி சைவர்கள் வணங்கும் செய்தியை அறிந்துக் கொள்கிறார். தன்னுடன் பல வைணவர்களை அழைத்துக் கொண்டு மலைக்கு செல்கிறார் ஸ்ரீ ராமானூஜர். [திருப்பதி மலையில் வைணவ - சைவர்களுக்கு நடந்த யுத்தம் குறித்து குருபரம்பரை என்ற புனித நூலில் குறிப்பு உள்ளது.]

இனி குருபரம்பரை நூலில் இருந்து யுத்தம் குறித்த நிகழ்வுகளை பார்ப்போம்....

ஸ்ரீ ராமானுஜர் வைணவ கூட்டத்திற்கும், சைவர்களுக்குள்ளும் வாக்குவாதம் நடக்கிறது. ´நாராயணன் தோன்றிய இடம் இது´ சைவர்கள் இடத்தை காலி பண்ணுங்கள் என்று வைணவர்கள் வாதம் செய்தனர்."இல்லை, இவ்விடம் சிவனுக்கு சொந்தமானது. சைவர்களுக்கே சொந்தம். கடவுளின் கைகளைப் பாருங்கள். பாம்பு இருக்கிறது என்று ஆதாரம் காட்டினர்" சைவர். இருவரும் தங்கள் தரப்பு பிரச்சனையை மன்னனான தொண்டமான் என்ற சக்கரவர்த்தியிடம் கொண்டு சென்றனர்.ஸ்ரீ ராமானுஜர் இப்படி வாதப்பிரதிவாதங்கள் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இம்மலையில் இருப்பது பெருமாள் என நாங்கள் சொல்கிறோம். சைவர்களோ சிவகிரி என்றார்கள். இப்பிரச்சனையை நாம் பேசி தீர்க்க முடியாது. பகவானே பேசி தீர்க்கட்டும். அச்சிலை பெருமாளா, சிவனா என அவனே சொல்லட்டும் என்கிறார்.ராமானுஜரின் சிஷ்யர்களில் ஒருவர் "எம்பெருமானே பகவான் எப்படி சொல்வார்?" என கேள்வி எழுப்புகிறார்.

ஸ்ரீ ராமனுஜர் சொல்கிறார்: "பெருமானின் முக்கிய ஆயுதங்கள் சங்கு, சக்கரம். சிவனின் முக்கிய ஆயுதங்கள் மான், மழு. இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். அதை கடவுளின் சன்னதியில் விக்ரஹத்தின் பாதத்தில்  வைப்போம். இரவு சன்னதியை இழுத்து மூடிவிடுவோம். மறுநாள் சூர்யோதய சமயத்தில் வருவோம். சன்னதியில் விக்ரஹத்தில் சங்கு சக்கரத்தை வைத்திருந்தால் அவர் பெருமாள். மான் மழுவை வைத்திருந்தால் சிவன்."இந்த முடிவுக்கு கட்டுப்படுகிறீர்களா? என கேட்கிறார். அனைவரும் சம்மதிக்கிறார்கள். மலைமக்களுக்கு சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் நடக்கும் சண்டையைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று முழித்துக் கொண்டிருந்தனர். இரவு சக்கரவர்த்தியுடன் பொதுமக்கள் முன்பு சன்னிதானத்தில் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று நன்றாக ஆராய்ந்து பார்க்கப்பட்டு யாரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின் பெரிய பூட்டு போடப்பட்டது.

மறுநாள் காலை சூர்யோதயத்தில் மக்கள் ஆவலோடு நிற்க, ஆண்டவன் தீர்ப்பு என்ன என்பதை அறிய பரபரப்பாக கதவு திறக்கப்படுகிறது. தோள்பட்டையில் சங்கு சக்கரத்தோடு நிற்கிறது விக்ரஹம். அதோடு சிவனின் மான், மழு ஆயுதங்கள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டுக்கிடந்தன. வைணவர்கள் வென்றதாகவும், அந்த விக்ரஹாரம் பெருமாள் எனவும் தீர்ப்பு வழங்குகிறார் மன்னனான தொண்டமான். "அப்பனுக்கு சங்காழி அளித்தவர் ஸ்ரீ ராமனூஜர்" என்ற பட்டப்பெயர் உண்டு.´அப்பன் என்றால் திருப்பதி பெருமாள். அவருக்கே சங்கு ஆழி கொடுத்தவர் ஸ்ரீ ராமனூஜர்´ என்று அர்த்தம்.

இன்னொரு ஆதாரம்: "தர்க்க சமணமும் சாக்கிய பேய்களும் - தாழ்சடையோன்சொற்கற்ற சோம்பரும் சூனியவாதமும்நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீ நிலத்தேபொற்கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே..." என்றொரு பாடல் ´திருவரங்கத்து அமுதனார்´ பாடியிருக்கிறார்."வாதம் பண்ணும் சமணர்களும், புத்தமதம் என்னும் பேய்களும், தாழ்சடையோனாகிய சிவபெருமானின் வழியை பின்பற்றும் சைவர்களும், கடும் சூனியவாதம் பேசுபவர்களும், எல்லாமே பொய் என குறும்பு பேசும் அத்வைதிகளும் செத்தொழிந்தது எங்கள் ராமானுஜர் பிறந்த பிறகு...."என்பது பொருள்.

ஸ்ரீ ராமானுஜர் பற்றி இன்னொரு செய்தியும் உண்டு.

'ஆதிசேஷனின் அம்சம்´ என்று பெருமாள் கூறியதாக வைதீக குறிப்புகள் சொல்கிறது. சரி, எப்படி விக்ரஹத்தின் தோள்பட்டையில் சங்கு வந்தது? தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்று இரவு ஸ்ரீ ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சமான பாம்பு வடிவம் எடுத்து விக்ரஹத்துக்கு திருமஞ்சன நீராட்டு வைபவம் நடத்தும் போது அந்த நீர்மம் வெளியேறும் சிறு துவாரமான கோமுகை வழியாக உள் நுழைந்து விக்ரஹத்தின் தோள்பட்டையில் சங்கை சொருகி சிவனின் ஆயுதங்களை உடைத்துபோட்டு விட்டு மீண்டும் கோமுகை வழியாக பாம்பாக மாறி வெளியேறி மறைந்து விட்டார். ஸ்ரீ ராமானூஜர் பாம்பாக மாறிய செய்தி மட்டும் செவி வழி செய்தியாக இருந்தாலும், குருபரம்பரையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வாக இருக்கிறது. மற்றப்படி ஸ்ரீ ராமானுஜரை வைத்து எழுதிய பாடல்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மலைவாசிகளின் பெண் கடவுளாக இருந்த காளி சைவர்களால் சிவனாக ஆக்கப்பட்டு பின் வைணவர்களால் பெருமாளாக ஆக்கப்பட்ட சங்கதிகளுக்கு  ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் பெருமாளாகவே இன்றும் வெட்கங்கெட்டத்தனம் தொடருகிறது என்றால் பார்ப்பனர்கள் ஆன்மீக ஆப்ரேஷன் என்பது எப்படிபட்டதாக இருக்கும்? இந்தளவுக்கு பேசுவதற்கு என்ன ஆதாரங்கள் என நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

´அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்´ தெரியுமா? கும்பகோணத்தில் அக்னிஹோத்ரம் எனப்படும் யாகத்தைச் செய்த பரம்பரையைச் சேர்ந்த வைணவ குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர். மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் திருவெம்பாவை மாநாடுகளில் சொற்பொழிவு செய்தவர். ´Association of Mutts´ என்ற மடங்களில் மகா பெரியவர் தலைவராகவும், இவர் செயலாளராகவும் இருந்தவர். அவர்´இந்து மதம் எங்கே போகிறது?´ என்ற நூலை எழுதிய போது கடுமையான மிரட்டல்களை சந்தித்தவர். 100-வயதை நெருங்கிக் கொண்டிருந்த போது இந்நூலை அவர் எழுதினார்.உண்மையான இந்து மதம் என்பது என்ன? அவை இப்போது வியாபார நோக்கத்திற்காக எப்படி திசைமாறிப் போய் கொண்டிருக்கிறது என்பது உள்பட பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். அவர் அந்நூலில் 283-ஆம் பக்கத்தில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு நடந்த ஆன்மீக ஆப்ரேஷன் பற்றி சொல்கிறார்.

இஸ்ரேல் நாட்டில் ஜெருசேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய கோவில்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு நம் இந்தியா வந்திருந்தார். அவர் எம்.எஸ்.சுப்புலஷ்மிக்கு நன்கு அறிமுகமானவர். அவர் திருப்பதி கோவிலுக்கு சென்ற போது என்னையும் அழைத்துச் சென்றார். அவர் மிலேச்ச மதத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் சிற்சில பராக்கிரமங்களை செய்து தான் கோவில் உள்ளேயே விட்டார்கள். கோவிலின் உள்ளே சென்ற போது கருவறையில் இருந்த வெங்கடாசலப்பதியை உள்ளே சென்று பார்க்க விரும்பினார். கொஞ்சம் சிபாரிசுக்கு பிறகுதான் உள்ளே அனுமதித்தார்கள். அவரோடு உள்ளே சென்ற நானும் பெருமாளை சுற்றி வந்தேன்அப்போதுதானப்பா.... நானும் பார்த்தேன். திருப்பதி பெருமாளுக்கு அழகான பின்னல். தலையை சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள். இப்போது சரியா? அவள் மலைகாளி தான். ரொம்ப ரொம்ப தயக்கத்திற்குப் பிறகு அரை மனதோடு முழு உண்மையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்.

திருப்பதி பெருமாளை இப்போதும் எக்கச்சக்கமான பக்தர்கள் அதிக நம்பிக்கையோடு வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து திருப்பதிக்கு போய் வந்தால் ´வாழ்வில் திருப்பம் சேருமடா´ என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது. ஆனாலும்.... திருப்பதியில் என்ன நடக்கிறது? பணம் படைத்த முக்யஸ்தர்கள் என்றால்.... அவர்களை சற்றே கிட்டத்தில் நின்று பெருமாளை தரிசிக்க வைக்கிறார்கள். மற்றவர்களுக்கு 50-ரூபாய் 100-ரூபாய் என.... பெருமாளை பார்க்க கட்டணம் அதுவும் பணம் இல்லாதவர்கள் என்றால் 5-மணி நேம், 8-மணிநேரம், ஏன் 24- மணிநேரம் என நின்று பார்க்க வேண்டிய கட்டாயம்.அதுவும்... பெருமாளுக்கு 15-அடி, 20-அடி முன்னே பக்தர்களை தடுத்து நிறுத்தி, ´அப்படியே போய்க் கொண்டே இரு´ என்கிறார்கள்.இப்படி வர்த்தகக் கடவுளாக மாறிவிட்ட வெங்கடாஜலபதியின் உண்மை நிலையைத்தான் உங்களுக்கு சொன்னேன் என்கிறார் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். சிவனுடன் விஷ்ணுவைக் கோர்த்து மோகினி அவதாரம் எடுக்க வைத்து அய்யப்பனை பிள்ளையாகக் கொடுத்த பார்ப்பனர்களுக்கா பெண் சிலையை ஆணாக மாற்றத் தெரியாது?அய்யோ பாவம் திருப்பதி பெருமாள்! ஆடைக்கு உள்ளே பெண்ணிய அங்கங்களுடன் அவமானப்படுகிறார்.

தமிழச்சி

29.10.2009


 

ஏதாவது செய்யனுங்க...


திருப்பூர் பாலாவின் அறிமுகம் 2-வருடங்களுக்கு முன்பு கிடைத்தது. உங்களின் தீவிர வாசகர் என்னும் அறிமுகத்துடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட போது முதலில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ´அன்புள்ள அக்கா´ என தொடங்கும் பாலாவின் எழுத்தில் ஓர் ஈர்ப்பு வந்திருந்தது. முதன்முதலாக வாசகர் ஒருவர் அக்கா என என்னை அழைத்தது பாலா. இரண்டாவது ஒருவர் இருக்கிறார் பேர் பிரபு. அக்கா செண்ட்டிமேன்ட் கண்டு பாலாவிடம் தொடக்கத்தில் கிண்டலாக விமர்சித்தது உண்டு.

"சரியான செண்ட்டிமேன்ட் பார்ட்டியா நீ..." என்ற போது, "அப்படிலாம் இல்லக்கா; எங்க ஊருல மரியாதையா அப்படித்தான் பேசுவாங்க. நீங்க என்ன கிண்டல் பண்ணாலும் அக்கான்னு தான் சொல்வேன்.."

என்னென்னமோ செய்தும் ஆள் மசியவில்லை. சரி ஜொல்லு பசங்களுக்கு மத்தியில் அக்கான்னு தானே சொல்கிறான் என்று நானும் விட்டுவிட்டேன்.
தினமும் பாலாவிடம் இருந்து மின்னஞ்சல் ´வணக்கம் அக்கா´ தினமும் பாலாவிடமிருந்து பதிவு குறித்து கருத்துக்கள் ஆகா! ஓகோ! என்று...
சங்கடமாக இருக்கும். "ஏதோ தெரிந்ததை எழுதிட்டிருக்கேன். நீ நினைக்கிற மாதிரிலாம் அறிவு ஜீவி இல்லை ஆளை விடு..." பாலாவின் பிரமிப்புக்கு பயந்து போய் அடிக்கடி என் உண்மை நிலையை நினைவு படுத்திக் கொண்டே நான்...

இப்படியாக சில மாதங்கள் மின்னஞ்சல் மூலம் நல்ல தொடர்பு ஏற்பட்ட பிறகு பாலா தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தன்னுடைய படங்கள் மற்றும் குடும்பம், நண்பர்கள், இலக்கியம், தன்னுடைய கிராமம், வளர்ப்பு என சுயபுராணங்கள் அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் எழுத ஏதோ அருகில் இருந்துக் கொண்டு பழகிய உறவுகள் போல ஆகிவிட்டது.
23-வயது தான் பாலாவுக்கு. அந்த இளைஞனிடம் ஏதோ தேடுதல், எத்தனையோ எதிர்பார்ப்புகள், வலிகள், போராட்டங்கள், குழப்பங்கள் என தொய்ந்த நிலை.

சில நேரங்களில் சீரியஸாக பேச ஆரம்பித்தால் சித்தன் நிலையில் இருப்பதாக படும். வேலை நேரம் போக கிடத்த புத்தகங்களை வாசிப்பதிலும், நண்பர்களோடு சமூகப்பணி என்று அமைப்பின் மூலம் செயல் படுவதும், இணையத்திற்குள் வந்தால் குறிப்பிட்ட சில பக்கங்களை தொடர்ந்து வாசிப்பதும் அது குறித்து விவாதிப்பதுமாக கொஞ்சம் தமிழ்நாட்டு சராசரி இளைஞனில் இருந்து மாறுபட்டவனாக பாலா இருந்தான்.

பாலா எங்க வேலை செய்கிறாய் ஒருமுறை கேட்டபோது சொன்னான் "திருப்பூர் பனியன் கம்பெனில.."

2

1048508_461b5532a1_m_1சென்ற வருடம் செப்டம்பரில் ஈழத்தில் யுத்தம் ஆரம்பித்த நேரம்...

"அக்கா தமிழர்களின் நிலையை நினைத்தால் ரொம்ப கஷ்டமாயிருக்கு நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாதுண்ணு நினைச்சா வருத்தமா இருக்கு."

மின்னஞ்சலில் வார்த்தைகளாக பார்த்த எனக்கு பாலா சாதாரணமாக பேசுகிறான். நாளடைவில் மறந்து விடுவான் என அலட்சியமாக இருக்க வைத்தது.

"அக்கா இந்த படங்களை பாருங்க... ரொம்ப கொடுரமா இருக்கு.." விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுக்களால் சிதறிப்போய் கிடந்த மனித சதைகளை அனுப்பிய போது டிசம்பரில் நடந்த யுத்தக் காட்சிகளாக இருந்தது.

"ஏதாவது செய்யனும் அக்கா! என்ன செய்யறதுன்னு தெர்ல..." அந்த நேரத்தில் நான் உட்பட அனேக தமிழர்கள் பாலாக்களாக இருந்தோம்.
என்ன செய்வது? எதை செய்வது? எப்படி செய்வது? வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பதற்றத்துடனும் பயத்துடனும் ஈழ நிகழ்வுகளையும் தமிழ்நாட்டு தமிழர்களின் செயற்பாட்டையும் உன்னிப்பாக கவனிப்பதைத் தவீர வேறு எதைச் செய்வது?

"அக்கா முத்துக்குமார்னு ஒரு தோழர் தீக்குளிச்சி செத்துட்டாருக்கா..." பாலாதான் எனக்கு முத்துக்குமாரின் மரணச் செய்தியை முதலாவதாக சொன்னது.

"முட்டாள் பய, இவன் தீக்குளித்தால் பிரச்சனை தீர்ந்துடுமா? ஏதோ அவசரத்துல முடிவு பண்ணருப்பான்..."

"இல்லக்கா அவரு மரணசாஸ்திரம் எழுதியிருக்காரு. அனுப்பறேன் பாருங்க. ரொம்ப நெதானமா யோசிச்சு முடிவு பண்ணிருக்காரு..."

படித்தபோது தான் தெரிந்தது. அய்யோ முத்துக்குமாரா என்ன சொல்ல...

முத்துக்குமாரின் மரணத்திற்கு பிறகும் ஈழத்தில் யுத்தம் உச்சக்கட்டத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது ரொம்பவும் சோர்வாகவும், கவலையாகவும் பாலாவிடமிருந்து மின்னஞ்சல் வார்த்தைகள்.

"நான் செத்தா கூட பரவாயில்ல... ஏதாவது செய்யனும் அக்கா இனி பேச்சல்லாம் இல்ல செயல்தான்..." வாய்ஸ் சாட்டில் பாலா சொன்னபோது, ஏதாவது செய்வானோ என நினைக்கத் தோன்றியது.

காலையில் புலம்பல், மதியம் புலம்பல், மாலையில் புலம்பல் வேலை நேரத்தில் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தான் பாலா.

3

"அக்கா கலைஞரு உண்ணாவிரதத்தை பாத்திங்களா? தலை மாட்டில ஒரு பொண்டாட்டி, கால் மாட்டுல ஒரு வப்பாட்டி, பக்கத்துல ஏர் கூலரு சகஜமா படுத்துக்கிடக்கறாரு! பார்த்தா உல்லாச ஓய்வுக்கு வந்தாப்பல இருக்கு. இதையெல்லாம் பார்த்தா பெட்ரோல ஊத்திக்குண்ணு என்னையே பத்த வச்சிக்கணும் போல கிடக்கு..."

"சும்மா இப்படியே சொல்லிட்டு இரு. எதுவும் செய்யாத..." எரிச்சலாக அவனை திட்டியபோது...

"அக்கா ஒரு வார்த்தை சொல்லுக்கா, இப்பவே செய்துக்காட்டறேன்..."

"செய்வீயா... உண்மையாலுமே செய்வீயா..."

"சத்தியமாக்கா..."

"சரி! சரி! சாவனும்னு முடிவு பண்ணிட்ட... தனியா எரிஞ்சு செத்துப்போறதுக்கு பதிலா குண்டு கட்டிக்கிட்டு கலைஞரு உண்ணாவிரதம் இருக்கிற கூட்டத்துல குதிச்சிடு உனக்கு புண்ணியமாப் போவும்..."

"அக்கா கிண்டல் பண்றீயாக்கா?"

"போடா! இருக்கிற பிரச்சனையில நொய் நொய்ன்னு பேசிட்டிரு. வேலைய செய்ய விடு..."

எந்த பதிலும் இல்லை பாலாவிடம் இருந்து..

"அக்கா குண்டு எங்க கிடைக்கும்?" கொஞ்சம் நேரம் சென்று பாலா நிதானமாக மெல்லிய குரலில் கேட்டான்.

"பொட்டி கடையில கேட்டா குடுப்பாங்க. 10-ருபாய்க்கு கலர் கலரா கிடைக்கும்."

"அதலாம் நடிகைங்க தொப்புள விடத்தான் யூஸ்பண்ணுவாங்க..."

"அப்ப எந்த குண்ட கேட்ட..."

"தீவிரவாதிங்க யூஸ்பண்ற குண்டுக்கா..."

"ஏன்டா லூசுப்பையன் மாதிரி பேசிட்டு கிடக்கிற. கிறுக்கு ஏதாவது புடிச்சிக்கிச்சா? என்னிடம் குண்டு கேட்டா நான் என்ன பண்றது? குண்டு விக்கற இடம்னு போர்டு போட்டுட்டா கடை வச்சிருக்கான்?"

"அப்ப நம்பளுக்குள்ளாம் குண்டு கிடைக்காதா?"

"கிடைச்சிருந்தா அவனனும் குண்டு எறிஞ்சு ஆட்டைய போட்டிருப்பானுங்களே! ஏன்டா இன்னைக்கு உனக்கு வேலையில்லையா? என் உயிரை எடுத்திட்டிருக்க..."

"இல்லக்கா வேலைக்கு போல..."

"ஏன்?..."

"பிடிக்கல..."

"சாப்பிட்டியா?"

"இல்லக்கா"

"ஏன்?..."

"பிடிக்கல..."

"ஏன்?..."

"என்னால முடியல, என்னால எதுவுமே செய்ய முடியல, யுத்தக் காட்சிகளே எனக்கு திரும்ப திரும்ப ஞாபகத்துல வந்திட்டிருக்கு...." அழ ஆரம்பித்தான் பாலா.

4

"அக்கா பிரபாகரன் செத்துட்டாருன்னு சொல்றாங்க நீங்க நம்புறீங்களாக்கா?.."

"நான் என்ன சொன்னாலும் நம்பும் மனநிலையில் பாலா. இல்லை என்று நான் சொன்னால் அதே நிஜம் என்பது பாலாவின் நம்பிக்கை..."

"ஏம்பா நான் எங்க இருக்கேன், அவரு எங்க இருக்காரு, எதை வச்சி இருக்காரா இல்லையான்னு முடிவு சொல்ல முடியும். கொஞ்சம் நாள் பொறு. தானா விஷயம் வரும். இப்போதைக்கு எதையும் நம்பாதே..."

புலம்பல்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தது பாலாவிடம். விரக்தியாக பேசினான்; பழிவாங்கும் உணர்வோடு பேசினான்; இயலாமையில் பேசினான்; அத்தனை உணர்வுகளின் கலவைகளும் மாறி மாறி....

பாலாவை கொஞ்சம் பயத்தோடு பார்க்க ஆரம்பித்தேன்.

வேலைக்காக திருப்பூரில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தான். குடும்பத்தோடு சில நாட்கள் இருந்தால் சரியாகிவிடும் என்று தோன்றியது.

"ஏன் பாலா வீட்டுக்கு போய் இருரேன். கொஞ்சம் மாறுதலா இருக்கும்..."

"அதுக்கு இது பரவாயில்லக்கா, வீட்டில அப்பா திட்டிட்டே இருக்கார். உருப்படியா வேலை வீடுன்னு இருக்காமல் போராட்டம், பொதுக்கூட்டம், அரசியல் கட்சின்னு திரிஞ்சிட்டு இருன்னு திட்டுவார்..."

ம்ம்ம்...

"பாலா நான் என் குடும்பத்தோட ஜீலையில் சென்னை வரேன். வந்தா மீட் பண்றேன்..." பேச்சை வேறு திசைக்கு திருப்பினேன்.

"டையின்ஸ்க்கா கண்டிப்பா வெயிட் பண்ணுவேன்..."

ஒகே..

"அக்கா எங்க அமைப்பு சார்பா திருப்பூர் பக்கம் நடத்துற கூட்டத்துல நீங்க பேசனும்..."

"அரசியல், இலக்கியம், மேடைப் பேச்சுக்கள் தவீர்த்து வேறு அணுகுமுறையில் மக்களிடம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யற கூட்டம்னா ஓகே!..."

"அக்கா உங்களை வெச்சி பெரிய ப்ளான் பண்ணப்போறேன்..."

"என்ன ப்ளான்டா? நீ பேசறத பார்த்தா பயமாயிருக்கு..."

"அதெல்லாம் இல்ல போராட்டம் பண்ணலாம் அக்கா..."

"டேய் பாஸ்போர்ட்ட புடுங்கிடப் போறாங்கப்பா... வந்த கையோட
ஜெயிலுக்குள்ள அனுப்பிடுவ போல..."

"ஹி.. ஹி.. ரொம்ப கிண்டலா பேசறீங்க அக்கா! எம்புட்டு புரட்சியா எழுதுறீங்க? ஜெயிக்குப் போக இப்படி யோசிக்கிறீங்களே?..."

பாலா ரொம்ப நாட்களுக்கு பிறகு ஜாலியாக பேச ஆரம்பித்தான்.

"சரி.. சரி.. அடுத்த வாரம் சென்னைல சந்திக்கலாம்..."

"அக்கா ஏர்போர்ட்டுக்கு வரவா?.."

"வேணாம்ப்பபா..."

"சரி!.."

"ஊருக்கு வந்ததும் மீட் பண்றேன்..."

"சரி.."

5

கோவைக்கு அருகே அந்த இடத்தின் பெயர் சரியாக நினைவில்லை. தோழர்களோடு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடாகி இருந்தது. மதியம் கூட்டம் தொடங்கிய போது செய்தி வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த ஓர் பனியன் கம்பெனியில் சீங்கள உயர் அதிகாரி ஒருவர் ஓர் தமிழ் தொழிலாளியை கேவலமாக ஏதோ திட்டி வைக்க தொழிலாளிகளுக்குள் அது பிரச்சனையாக உருவெடுக்க.. பனியன் கம்பெனியை பூட்டு போட்டு போராட்டத்தை தொடங்க உதவிக்கு மற்ற அமைப்புகளுக்கும் தகவல்கள் பரவ பெ.தி.க.விடம் செய்தி வருகிறது.

எப்படி சிங்களவன் நம் நாட்டுக்குள் இருந்துக் கொண்டு நம்மை கேவலமாகப் பேசுவது? தோழர்கள் ஆவேசத்தோடு கிளம்புகிறார்கள். ஏற்கனவே ஏகப்பட்ட கூட்டம் அங்கே சேர்ந்திருக்கிறது. செய்திகள் அவசர அவசரமாக எல்லா இடங்களுக்கும் செல்கிறது.

பதட்டமான சூழல். போராட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல குறைந்தது 3- மணி நேரமாகலாம். எனக்கு உதவியாக வந்த தோழர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவதாக சொல்ல...

"அதெல்லாம் வேண்டாம் தோழர்; பிரச்சனையாயிடும்.." சமாதானமாக சொன்னார்கள்.

"இல்லை தோழர் பார்க்கவாவது போகனும்...."

வேறு வழி தெரியாமல் காரில் அழைத்துச் சென்றார்கள். வழி நெடுக்க விசாரிப்புகள். அப்போதைக்கப்போது தகவல்கள் வந்துக் கொண்டே இருந்தது. குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு 30-நிமிடங்கள் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தோழர்களும், தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டு திருப்பூரில் இருந்த திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வருகிறது. போராட்டத்தில் ஈடுபட சென்ற தோழர்கள் திருமண மண்டபத்தை நோக்கி செல்கிறார்கள்.

இணையத்தில் எவ்வளவோ எழுதிக் கிழிக்கிறோம். ஆனால் களத்தில் செயல்பாட்டில் போராடும் தோழர்கள் நிலையை அப்போது தான் உணர முடிந்தது.

நான் உட்பட வார்த்தைக்கு வார்த்தை "தோழர்" என்னும் சொல்லை உச்சரிக்கிறோம்.

ஆனால், பதட்டத்துடன், ´அந்த தோழரு எங்க காணோம்?´ ´இந்த தோழருக்கு என்னாச்சி?´ ´எல்லா தோழர்களும் திருமண மண்டபத்தில் இருக்காங்களா?´ ´எந்த தோழர்களை ஜெயிலுக்குள் போட்டாங்க?´ ´எந்த தோழர்களையாவது அடிச்சாங்களா?´ அவசர அவசரமான விசாரிப்புகள். அங்கே தான் "தோழமை" வார்த்தைகளுக்கு உயிர்பு இருப்பதை பார்த்தேன்.

திருமண மண்படபத்திற்கு முன்பே போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே கைதான தோழர்கள் எண்பதுக்கும் மேல். ஓர் தோழர் போலீஸிடம் அனுமதி கேட்க... என்னை மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டே அருகில் இருந்த போலீசிடம் சொல்ல ஏதோ ஆலோசணைக்கு பிறகு ஓகே வந்தது.

எல்லாத் தோழர்களையும் சந்தித்து கைக்குலுக்கலோடு போக என்னைப் பற்றி அறிமுகத்தை அங்கிருந்த தோழர்களுக்கு சொல்லிக் கொண்டே வர கடைசியாக ஒரு தோழர்...

"அய் யம் பாலா" தன்னை அறிமுகம் செய்கிறார்.

"ஹாய்" அவருக்கும் சிநேகிதத்தோடு கைக்குலுக்கிவிட்டு தாண்டிச் செல்ல முற்பட...

"அக்கா என்னை தெரியலையா?" ஏமாற்றக் குரலில் தோழர் கேள்வி எழுப்ப...

"தெரியலைங்க சாரி நீங்க...."

"பாலா அக்கா" இணையத்துல பேசுவேன்ல... திருப்பூர் பாலா"

"அடப்பாவி நீயா?.."

அங்கே இருந்த மற்ற தோழர்களிடம் இருந்து தள்ளிக் கொண்டு போய்...

"என்னடா என்னை போராட்டத்தில் ஜெயிலுக்கு அனுப்பனும்னு சொல்லிட்டு நீ இங்க இருக்கிற?..."

"இல்லக்கா அந்த சிங்களன் அசிங்கம்மா பேசிட்டான். அதான் எல்லா தோழர்களும் கிளம்பிட்டம்ல..."

கோபத்தோடு நடந்த சம்பவங்களை விவரிக்க ஆரம்பித்தான் பாலா.

சும்மா நம்ப கிட்ட புலம்பிட்டே இருக்கானே! தமிழ்நாட்டுல தானே இருக்கான் ஏன் செயல்ல காட்ட முடியல எல்லாம் வரட்டு கத்தல் தான்" என நான் கூட நினைத்திருந்தேன்.

பாலா குறித்த என்னுடைய கணிப்பு தவறாக இருந்தது. மிகச் சரியாகவே செயல்பட்டிருக்கிறான் பாலா. முதல் முறையாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளே வந்திருக்கிறான்.

"அப்பாவுக்கு தெரியுமா பாலா?..."

"தெரிந்தா தெரியட்டும் அக்கா. எத்தனை நாட்கள் தான் புலம்பிக் கொண்டு வெட்டிப் பேச்சு பேசிட்டிருப்பது? எல்லாரும் செயல்ல காட்டிணாத்தான் உருப்படியா ஏதாவது செய்ய முடியும். நான் துணிஞ்சிட்டேன் அக்கா."

கண்கள் சிவக்க ஆவேசமாக பேசிக் கொண்டே போகிறான் பாலா...

"தோழர்!.."

என்னை யாரோ அழைப்பது போல் இருக்க சட்டெறன திரும்பி பார்க்க

"கொஞ்சம் பேசனும் தோழர்..."

"சொல்லுங்க தோழர்..."

"இல்ல வெளிய வாங்க பேசலாம்.."

"இல்ல இங்கேயே சொல்லுங்க..."

"இல்லைங்க தோழர்! வெளியே வாங்க..."

பாலா புரிந்துக் கொண்டு "நீங்க பேசுங்க அக்கா, நான் அப்பறம் வரேன்" அங்கிருந்து நகர, தூரத்தில் சில பெண் போலீசுக்களும், ஆண் போலீசுக்களும் என்னையே பார்த்துக் கொண்டிருக்க...

"வாங்க தோழர்! வெளிய போய் பேசலாம்..."

ஒன்றும் புரியாமல் வெளியே வர...

"தோழர் உங்களை NRI மாதிரி இருக்காங்க. யாரு உள்ள விட்டதுன்னு கேட்டாங்க. அதான் பிரச்சனை வாணாம்னு..." தோழர் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாமல் நிறுத்திக் கொள்ள...

தூரத்தில் ஒரு போலீஸ் பக்கவாக்கில் நேர்வாக்கில் கேமராவால் என்னை எனக்குத் தெரியாமல் ´க்ளீக்´ செய்வதாக நினைத்துக் கொண்டு தொந்தி மீசையோடு இங்குமங்கும் அசைந்துக் கொண்டிருந்தது.

திருப்பூரில் பனியன் கம்பெனியின் மேல்அதிகாரியான சிங்களன் தமிழ்நாட்டில் தமிழர்களை அசிங்கப்படுத்திய சங்கதி குறித்தும் அதற்கு எதிராக நடந்த போராட்டம் குறித்தும் எந்த பத்திரிக்கையிலும் செய்தி இல்லை.

இப்படி அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது "ஏதாவது செய்யணும்" "ஏதாவது செய்யணும்" என்னும் பாலாக்களின் உணர்வுகள் என்ன செய்யும்? எப்படி செய்யும்? எதைச் செய்யும்? என்பதைக் கணிக்க முடியாமல் போனாலும்; ஏதாவது செய்ய வைத்து விடும் இளமையின் ஆவேசம் அவர்களிடம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

இளைஞர்கள் என்பவர்கள் ´தீப்பொறி´ போன்றவர்கள். எதன் மீது பட்டாலும் சமூகத்திற்கு ஆபத்தானது என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்.

தமிழச்சி
31.08.2009





 

ஸெல்லில் தொடங்கி...

images_11"சென்றன சென்றன வாழ்நாள் - செறுத்துஉடன்
வந்தது வந்தது கூற்று!"

ஒவ்வொரு நாளும் கடந்து சென்றுக்கொண்டே இருக்கிறது. சீற்றத்தோடு கூற்றுவன். (கூற்றுவன் என்றால் எமன்) தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறான். நாலடியார் நூலில் சைன முனிவர் ´நிலையாமை´ பற்றி இவ்வாறு சொல்கிறார்.

நாலடியார் படிக்கும் அளவுக்கு இலக்கியப்புலியோ, ஞானப்பழமோ இல்லை நான். படிக்கத் தோன்றும் போதெல்லாம் கண்டபடி இலக்கிய நூல்களை வாங்கி படித்துப் பார்த்து ஒன்றும் புரியாமல் எடுத்து வைத்துவிடுவதுண்டு. சூழலுக்கு ஏற்றபடி புத்தகம் வாசிக்கும் பழக்கம் எனக்கிருக்கிறது. கொஞ்சம் நிதானமாகவும், பொறுமையாகவும், அமைதியான இடமும் இருந்தால் இலக்கியத்துக்குள் போய்விடுவேன். இன்றும் அப்படித்தான்...

சைன முனிவரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. ஏனோ தெரியவில்லை; இலக்கியங்களில் அறிவாளிகளும், ஞானிகளும், இன்னபிற கனவான்களும் வாழ்க்கையை குறித்து ஒரேவித அபிப்பிராயத்தையே சொல்கிறார்கள். இந்த தாயுமானவர் கூட, "உலகம் ஒரு பொய்த் தோற்றமின்றி வேறில்லை. அது கானல் நீர்" என்கிறார். எதை சொல்லி நாம் திருப்திப்படுத்திக் கொள்ள முயல்கின்றோம்? நிஜத்தை ஜீரணித்துக் கொள்ளும் பக்குவம் நமக்கில்லையா? அல்லது சூழ்நிலையை மாற்றும் சக்தியை நமக்குள் உருவாக்க முற்படுவதில்லையா? ஏதோ இயலாமையில் நின்றுக் கொண்டு பினாத்துவது போலல்லவா இருக்கிறது?

"உலகம் பொய்யல்ல, வாழ்க்கை பொய்யல்ல" என்பார் ஆல்பர்ட் ஸ்வைட்ஜரின்.

ஆம்! நாம் இருப்பது நிஜம், நேற்று வாழ்ந்தது நிஜம், இன்று வாழ்ந்துக் கொண்டிருப்பது நிஜம், நாளை என்பதில் தான் நிஜமில்லை. மனிதனிடம். தூங்கச் செல்லும் போது நாளை விழிப்போம் என்ற நம்பிக்கையில் தான் தூங்கச் செல்கிறோம். அப்படியானால் நாளை என்பதும் நமக்கு இருக்கிறது. ஆனால் என்றோ ஒரு நாள் வரும் ´நாளை´ மட்டும் நமக்கு இல்லாமல் போகிறது. நம்மை புதைக்குழிக்குள் தள்ளுகிற ´நாளை´ என்ற நாளுக்காக நம் வாழ்க்கையில் பிரம்மச்சாரியாகவா இருக்க முடியும்?

காதல் வேண்டாம், அன்பு வேண்டாம், உறவு வேண்டாம், வேலை வேண்டாம், எதுவும் வேண்டாம் எப்படியும் சாகத்தானே போகிறோம்... என்று சும்மா இருந்து விட முடியுமா நம்மால்? பிறகு ஏன் கனவான்கள் இப்படிச் சொல்லிவிட்டு போகிறார்கள்?

மனித உடலின் ஆரம்பக்கட்டத்தில் கரு உருவாக ஒரே ஒரு ஸெல் போதும். அந்த ஸெல்லுக்குள் இருதயம், மூளை, எலும்பு, தசை, இரத்தம், நரம்பு, தோல் இன்னும் லட்சக்கணக்கில் அந்த ஸெல்லுக்குள் அற்புதங்கள் நடைப்பெறப் போகிறது. அதற்கு காமம் வரும்; காதல் வரும்; கோபம் வரும்; அழுகை வரும்; சந்தோஷம் வரும்; நோய் வரும்; மரணம் வரும் கடையில் எதுவுமில்லாமல் போகத்தான் போகின்றது. அதற்காக என்ன செய்வது?

நமக்கு வாழ்க்கையைக் குறித்து வந்த சந்தேகம் போல் பாரதியாருக்கும் வந்திருக்குமோ என்னமோ? ஆழமான வார்த்தைகளால் கேள்விகளாக கேட்கிறார்...

"வானகமே இளவெயிலே
மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறுங்
காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? இந்த
ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக்
குணங்களும் பொய்களோ?"

நமக்கு மட்டும் உலகம்/வாழ்க்கையைப் பற்றிய பிடிப்பு இல்லாமல் இருக்கிறது? இந்திய இலக்கியங்களிலும், இந்துத்துவ தத்துவங்களிலும் மறுவாழ்க்கைக் காண சொர்க்கத்தை விண்ணில் காட்டுகிறார்களே தவிர, மண்ணீல் சொர்க்கத்தை உருவாக்கும் கோட்பாட்டைப் பற்றி யாரும் சொல்லவில்லை. கிறிஸ்தவ மதத்திலும் பரமபிதாவின் பரலோகத்துக்கு வக்கணையாக பரிந்துரை செய்யப்படுகிறது. பாப மனிதனின் கரங்களில் வாழ்க்கையை ஒப்படைத்துவிட்டதாக சொல்லும் பரம பிதாவை நாம் ஒன்றும் செய்துவிட முடியாது.

13-ஆம் நூற்றாண்டு வரையில் கிறிஸ்துவ சமயத்தில் உலக மறுப்புக் கொள்கை குறித்த கோட்பாடுகள் ஐரோப்பிய சமூகத்தில் அதிகமிருந்தன.

கிரேக்கச் சிந்தனையாளர்கள் தொடக்கத்தில் உலகம் உண்மை. மனித வாழ்க்கைகள் உண்மை என்று கருதிய போதிலும் சில நூற்றாண்டுகளுக்கு பின் குழம்பிப்போயிருக்க வேண்டும். உலகத்தில் இருந்தும், வாழ்க்கையில் இருந்தும் முக்தி அடைவதே மனிதனின் சிறந்த குறிக்கோளாக எண்ணத் தொடங்கிவிட்டனர்.

பார்சிகளும், சீனத்தத்துவ சிந்தனையாளர்களும் தான் யதார்த்தமானவர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையும், வாழ்வைக் குறித்த தத்துவங்களும், மனிதனின் இயல்புகளைப் பற்றி பேசவும், எழுதவும் சீனத்தத்துவத்தால் தான் முடிகின்றது. இந்தியர்கள் மறுவாழ்க்கைக்கான சித்தாந்தங்களை பேசுபவர்கள் என்றும், சீனர்கள் யதார்த்தத்துவங்களில் வாழ்பவர்கள் என்றும் சும்மாவா சொல்கிறார்கள்?

சில வாரங்களுக்கு முன்பு சீன நாட்டில் இருந்து இருபத்தி ஏழு பேர் பொருளாதாரக் கல்வியை கற்ப்பதற்காக சீன அரசு பிரான்சுக்கு அனுப்பியிருந்தது. ஒரு பத்திரிக்கை நிருபர் அவர்களிடம் பேட்டி எடுக்கும் போது கேட்டார்,

"கம்னியூஸ்ட் கொள்கைவாதிகளான உங்கள் நாட்டில் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?"

யதார்த்தவாதிகளான சீனர்கள் சொன்னார்கள்,

"உலக வாழ்க்கை இசைவுக்கொள்கை கோட்பாடுகளில் இயந்து நிற்பது சீனர்களிடம் உயிர்விழைவுத் தத்துவத்துக்கு அனுகுணமான கோட்பாடு உள்ளவர்கள் நாங்கள். இன்றைய வாழ்க்கைக்கு மனிதனுக்கு தேவை பொருளாதாரம். அதை நோக்கிச் செல்வதில் தவறொன்றும் இல்லையே! இதைத்தான் ஆங்கிலத்தில் "World and Life Affirmation" என்பார்களோ?

பத்திரிக்கையில் அந்த வாக்கியங்களை ரசித்து ரசித்து பலமுறை படிக்கத் தோன்றியது பிரெஞ்சுக்காரர்களுக்கு. நம்ப ஊர்ல சொல்வாங்களே கடுகு சிறியதானாலும்... ஏதோ ஒன்று! (ஞாபகமில்லை)

மீண்டும் சைன முனிவர் சொன்ன கூற்றுக்கு வருவோம்.

"சென்றன சென்றன வாழ்நாள் - செறுத்துஉடன்
வந்தது வந்தது கூற்று!"

பலபொருள்களில் அர்த்தம் பொதிந்தது என்றாலும் மனிதனின் ஊக்க சக்தியை வற்றிவிட வைத்துவிடும் வாக்கியமல்லவா இது? எதற்கு வரட்டு சித்தாந்தம்? வாழ்க்கையை வாழ்ந்துப் பார்ப்போமே...!

ஹா... ஹா... திரும்பிப் பார்க்கிறேன்!

சீற்றத்தோடு கூற்றுவன் இருக்கிறானா...?

தமிழச்சி
17/11/2008

 

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel