அரசியல்

நாக்க "மு.க" வேஷங்கட்டி கூத்துக்கட்டறான்...

´மதுரை அண்ணன்´ பிறந்த நாளுக்கு 
அட்றாடா நாக்க ´மு.க´ நாக்க ´மு.க´ 
´தமிழகத்தின் அரிஸ்டிராட்டில்´ பிறந்த நாளுக்கு
அட்றாடா நாக்க ´மு.க´ நாக்க ´மு.க´ 
´பிறந்தவன் அல்ல, தோன்றியவன்´ அவன் 
பிறந்தநாளுக்கு அட்றாடா நாக்க ´மு.க´ நாக்க ´மு.க´  
மதுரை அண்ணனின் ஊழல் பெருத்த பணத்திலே 
நடத்துற பிறந்தநாளு கூத்துலே
எடுத்த அவதார வேஷங்களிலே  
மதுர எரியுது அணைங்கடா அணைங்கடா... 

http://youtu.be/fEU_qyiQmYQ

என்ன பாட்டு ராங்கா போவுதேன்னு யோசிக்கிறீங்களா? 

வேற என்ன பண்றது? 

மு.க.அழகிரியின் பிறந்த நாளுக்காக மதுரையில் நடத்தப்பட்ட கூத்துக்களைக் கண்டு நாமும் ´வாழ்த்துப்பா´ பாட வேண்டும் என்ற அவா தான். 

என்ன கொஞ்சம் லேட்டா போயிருச்சி!

பாவிங்க, போட்டோக்களுடன் செய்தி அனுப்புகிறேன் என்று சொன்ன ஆளு இதோ... அதோ... என்று இழுத்தடித்துக் கொண்டிருக்க.... 

இன்று ஆளைப்பிடித்து மேட்டரை கேட்ட போது, 

"அதெல்லாம் வேண்டாங்க, பெரிய இடத்து விவகாரம். அவன் பேரை கேட்டால் மதுரையே கலகலக்கும். அந்த பொறுக்கிய பத்தி எழுதறதால அவன் திருந்திடப் போறானா விடுங்க என்று அட்வைஸ் பண்ற ஆரம்பித்துவிட்டார். 

என்னாச்சி ´திடீர்னு ஞானோதயம்´ என்று நாலு கேள்வி கேட்டுவிட்டு இப்பதான் எழுத ஆரம்பித்தேன். 

மு.க. அழகிரியின் 59-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது, மு.க.அழகிரியின் பிறந்த நாளையொட்டி மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் 11-இடங்களில் நவீன கழிப்பிடங்கள் திறக்கப்பட்டன, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன என ஏக வர்ணனைகளுடன் பத்திரிகைகளில் வந்த செய்திகளுடன் மு.க வின் வேஷங்களையும், கோஷங்களையும் பார்த்த போதுதான் மு.க.அழகிரிக்கு இவ்வளவு முட்டாள் தொண்டர்களா என்று வியக்க வைத்தது. 

ஆளாளுக்கு மு.க. அழகிரியின் பெருத்த தடித்த [அய்யய்யோ இப்பலாம் இந்த வார்த்தையை யூஸ் பண்ணப்படாது] உருவத்தை பொருந்தாத் தோற்றத்தில் திணித்து, துருத்தி, பொருத்தி வைத்து அஞ்சா நெஞ்சனுக்கு பாமாலை பாடி மதுரையை ஒரு கலக்கு கலக்கி வைத்திருக்கிறார்கள். 

இது என்ன கூத்து? என்று விசாரித்த போது தான் மதுரையைச் சேர்ந்த தோழர் சொன்னார். 

"கட்டவுட் மட்டும் மதுரையின் முக்கிய இடங்களில் 5000-க்கு மேல் வைக்கப்பட்டிருந்தது" என்று. http://ow.ly/18P8U

ஜனவரி 30-க்கு கொண்டாட இருந்த பிறந்த நாளுக்காக ஜனவரி 20-ந் தேதியே நகரின் முக்கிய இடங்களில் சாலையை குழி தோண்ட ஆரம்பிக்க மக்கள் வேறு சாலைக்கு திருப்பி விடப்பட்டு அல்லோல்பட்டிருக்கிறார்கள். 

இது என்ன வழக்கம் போல் நடக்கறது தானே! எப்பேர்பட்ட தலைவர் அவர் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டு வரலாம். 

பொறுக்கி தின்பவர்களுக்கு வேறு எப்படி பேசவரும்?

எத்தனையெத்தனை வேஷங்கள்? 

எத்தனை விதங்களில் வர்ணனைகள்? 

இத்தனை கூத்துக்களுடன் மு.க.அழகிரி தன் மகனின் புதுப்படத்திற்கு பூஜை வேறு. படத்திற்கு பேர் ´தூங்கா நகரம்´

மதுரைக்குள் என்று மு.க நுழைந்ததோ அன்றிலிருந்தே சனங்கள் நிம்மதி இழந்து, தூக்கம் இழந்து தூங்கா நகரமாகிப் போனது தெரிந்தது தானே! 

புத்தக வெளியீடு கூட நடந்ததே!

மு.க.அழகிரி பற்றிய நூல் அது. தலைப்பு "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை"

உண்மைத்தானே! எந்த மேட்டரிலும் தப்பவேயில்லை. 

நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட தளபதி ஸ்டாலின் அதான் மு.க.வுக்கு தம்பியாக அவதரித்தவர், "நானும், அண்ணன் அழகிரியும் திமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து பணியாற்றி இயக்கத்துக்கும், தலைவர் கருணாநிதிக்கும் வலு சேர்ப்போம் என்று கூறிய போது அப்படியொரு கைத்தட்டல்களாம். 

இந்த வசனத்தையெல்லாம் வீடியோவில் பார்க்க நமக்குத்தான் குடுத்து வைக்கல.....

"வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கருணாநிதி புலம்பிக் கொண்டிருந்தார். அது அரசியலுக்கு...

மு.க.அழகிரிக்கு தெற்கு ஒதுக்கப்பட்ட பின் தெற்கு வாழ ஆரம்பித்துவிட்டது. அந்த விதத்தில் கருணாநிதிக்கு திருப்தியாகவே இருக்கும். 

இந்த ஜனநாயக கோமாளிகளின் கூத்துக்களை இப்படியே தொடர விடுவதா? வெட்கக்கேடு.... 

´அஞ்சா நெஞ்சன் அழகிரி´ பட்டாளத்தின் கூத்துக்களை வெளுத்துக்கட்ட அஞ்சா நெஞ்சுடைய இளைஞர்கள் முன்வர வேண்டும். 

வருவார்களா? 

தமிழச்சி 
18.02.2010

 

பொய் முகங்கள்..!

நம் சமூகம் குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் போலி முகமூடியை அணிந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய துக்கம், மகிழ்ச்சி, காதல், காமம், கோபம் என எதையும் தன் இயல்புகளில் மனிதர்களை வெளிப்படுத்த விடுவதில்லை. மனிதர்கள் ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்ட இயந்திரமனிதனாக இருக்க விரும்புகிறது. மாற்றுக் கருத்துக்களை சமூகம் எளிதில் ஏற்பதில்லை. ஒவ்வொரு குடும்பமும் துக்ககரமானது. துக்ககரமான வாழ்வில் மனிதனிடம் இருக்கும் பரவசத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

"நீ ஒரு பைத்தியக்கார விடுதியில் வீசியெறியப்பட்டிருக்கிறாய். எல்லோரும் பைத்தியங்கள். நீ என்ன செய்ய முடியும்? உனக்கு பைத்தியமில்லையானால் பைத்தியமாக நடி. அதுதான் அங்கே புத்திசாலித்தனம் என்கிறார்" ஓஷோ.

எளிமையான விளக்கங்களுடன் மேலும் உண்மையை வெட்டவெளிச்சமாக்குகிறார். எளிமையான வாக்கியங்களில் சாட்டையடி....

"நீ தெளிவானவன் என யாராவது அறிந்தால் பிரச்சனை உருவாகிவிடும். பைத்தியக்கார விடுதியில் ஒரு தெளிவான மனிதன் மற்ற பைத்தியங்களைவிட கூடுதல் பைத்தியத்துடன் நடிக்க வேண்டியுள்ளது. அதுதான் அவனுக்குப் பாதுகாப்பானது. 

இந்த வாழ்க்கையில் எல்லோரும் பித்தர்கள். 

நீ என்ன செய்ய முடியம்? 

இந்த பூகோளமே மிகப்பெரிய பைத்தியக்கார விடுதி. எல்லோரும் துக்கமானவர்கள். நோய் பிடித்தவர்கள் தெளிவற்றவர்கள். 

நீ என்ன செய்ய முடியும்? 

அவர்களுடன் நடித்துக் கொண்டிரு. அநாவசியமான பிரச்சனைகளை உருவாக்காதே, வெறுமனே நடி உன் நடிப்பை ரசித்து மகிழ்ந்திரு. பிறருக்காக நடி, ஆனால் உனக்காக பரவசத்துடன் பித்துப்பிடித்திரு! ஒரு பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட்டால் உன்னால் பரவசப்பட முடியாது. உதைப்பார்கள், 

அழு! "அழகாக நடி" அதுதான் அங்கு தேவை"

துக்ககரமான சூழ்நிலையில் மரணம் ஏற்கப்படாத நிலையில் மரணம் ஒரு பேயாகத் தெரியுமிடத்தில் யாருக்கும் எந்தவித தொல்லையும் தராதே. நீ அறிவாளியானால் நடித்துக் கொண்டிரு! 

"யாரும் உன்னைப் போல் அழவில்லை என்பது போல் அற்புதமாக நடித்து விடு...." 

இந்த நடிப்பைத்தான் நம் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் செயல்படுத்துகிறான்... 

இங்கே பொய்மை முன்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. யதார்த்தங்கள் மனதுக்குள் புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறது...

நாம் சூழல்களுக்கு ஏற்ற நடிகராக (நடிகையாக) மாறிவிடும் போது
தொல்லைகள் ஏதுமில்லை. இது எல்லாமே நடிப்புதான். 

இந்த வாழ்வும் ஒரு மன நாடகம் தான் என்று உணரும் போது கேள்விகளாய் நம்முன் இருப்பவை தனிமனித சுதந்திரமும், நம் இயல்பு நிலைகளும் கடந்த விரக்தி, அதைத் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

இது தான் மனித வாழ்வின் உயிரோட்டமா?

தமிழச்சி
03/03/2001

 

பந்தயம் கட்டிக் கேட்கிறேன்!

உலகில் நான் அறிந்தவரையில் நம் நாட்டு மக்களிடம் (இந்துக்கள் என்பவர்களிடம்) ஒழுக்கம், நாணயம் என்பது சற்றேக்குறைய 100-க்கு 99- பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன? நமக்கு "கடவுள்" இல்லையா? நாம் "கடவுள் பக்தி" இல்லாதவர்களா? நாம் மதம் அற்றவர்களா? நமக்கு கடவுள் பயம் இல்லையா? "கடவுள் நெறி" இல்லையா? நன்மை செய்தால் ´நற்பயன்´ கிடைக்கும். தீமை செய்தால் ´தீய பயன்´ கிடைக்கும் என்கின்றதான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் - ´தெய்வீகத் தன்மை´ கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுபவர்கள், கூறும்படியான நீதிநூல்கள் இல்லையா? அரசாங்கத் கட்டுத் திட்டம் தண்டனை முதலியவைகள் இல்லையா? நமக்கு ´நற்கதி´யளிக்கும்படியான கோயில்கள் இல்லையா? நமக்கு குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும் போது நமக்கு நம் மக்களுக்கு ஏன் ஒழுக்கம் நாணயம் இன உணர்ச்சி பொதுநல உணர்ச்சி யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப்பட்ட நிலை ஏற்பட என்ன காரணம் என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு பல ஆண்டகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு, இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை முக்கிய இலட்சியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றேன்.

எனது இத்தனை ஆண்டு வாழ்வில், 80-ஆண்டு உலக அனுபவத்தில், நாளுக்குநாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன் இன்று அக்குறைவு நிலை உச்சநிலையடையும் வழியில் மனித சமுதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து.

இதுபற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகுதியும் கவலைப்படுகிறேன். மேற்சொன்னபடி எனது பலநாள் 30, 40-ஆண்டுகள் இதற்காகவே நான் செய்துவந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அடியோடு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலைலோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது. இதற்கு என்ன பரிகாரம் என்பதில் நான் மிகுதியும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கின்றேன்.

நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டு கொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலையில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதில் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது!

ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில், எல்லா மக்களையும் பொறுத்த பொதுத் தொண்டில் சிறிதும் சுயநலமில்லாமல் எனக்குள்ள சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எந்தவித சுநயல நன்மையும் அடையாமல் உண்மையாகவே என்னை ஒரு தொண்டன் - ஒரு தொண்டனுக்காகவே வாழ்பவன், வாழ வேண்டியவன் என்று கருதிக் கொண்டு உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லையென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் என கருதிக் கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை, அதாவது நம் மக்களில் யோக்கியமானவன், நாணயமானவன், எந்தத் தரத்திலும் எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக் கூட காண முடியவில்லை - இருப்பதாகக் கருதக் கூட முடியவில்லை என்பனவற்றைக் கருதக் கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகின்றேன்.

இந்த நீண்ட நாள் கவலையின் - சிந்தனையின் பயனாக இதற்கு - அதாவது இந்த நாட்டில் இன்று இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்கமானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளானவன் எந்த தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் காரணம் நமது நாட்டில் உள்ள சூழ்நிலை சுற்றுச்சார்பு, நமது சமயம், நமது கடவுள்கள், நமது நீதிநெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவை பற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள் இன்று இருந்து வரும் அரசாங்கமுறை அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலியவைகள்தான் என்கிற முடிவுக்கு வர வேண்டியவனாகிவிட்டேன்.

அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட முடியாது என்பதுடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டியவனாகி விட்டேன்.

நமது கடவுள்களில் ஒன்றுகூட ஒழுக்கமாய், யோக்கியமாய், நாணயமாய், யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாக கடவுள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களிலுமே காண முடியவில்லை - கேட்க முடியவில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்க ஈனம், யோக்கிய ஈனம், நாணயமற்ற காரியங்கள் எதுவும் இன்றுள்ள நம் கடவுள்கள் எதனிடமும் இல்லை என்று சொல்ல முடியாத தன்மையில் தானே இருந்து வருகின்றன! ஒழுக்கக்கேடு, யோக்கியக்கேடு இல்லாத நம் பதினாயிரக்கணக்கனான கடவுள்கள், அவர்களின் பெண்டு பிள்ளைக் கடவுளையாவது காட்ட எந்த பக்தனாலாவது, குருமார்களினாலாவது, கடவுள் கதைகளிலாவது முடியுமா என்று பந்தயம் சுட்டிக் கேட்கின்றேன்.

மற்றும் வேத சாஸ்திர, தர்ம புராண இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும் - விரும்பும், ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாய்க் கருதும் நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்த பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனையாவது காட்ட முடியுமா? என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத் தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ, அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்ட முடிமா? என்று கேட்கிறேன்; பந்தயம் கட்டிக் கேட்கின்றேன்.

- தோழர் பெரியார்

[31.07.1972- ´விடுதலை´ நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்]

 

நித்தியானந்த சாமியாரின் செக்ஸ் காட்சிகள். தமிழ்நாட்டில் பரபரப்பு!

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

நடிகையுடன் சல்லாபத்தில் நித்தியானந்தம்
http://www.youtube.com/watch?v=VLykyuWZviQ

நித்தியானந்தம் இணையதளம் 
http://www.nithyanandam.org/

மக்களே சிந்தியுங்கள்... 

இதோ பெரியார் பேசுகிறார்...

நான் சொல்வதைப் பல பேர் கேட்டு நடக்க ஆரம்பித்திருக்கிறபடியாலும், நானே வந்து அவ்விசயங்களைச் சொல்ல வேண்டுமென்று கேட்கின்றபடியாலும், என்னால் சொல்லப்படுகின்ற உண்மை ஜனங்களின் உண்மையான உணர்ச்சியில் தோன்றக்கூடியதுதான் என்றும், அதுதான் சுயமரியாதையுள்ள மக்களுக்குள்ள உயர்ந்த அபிப்பிராயமென்றும், அதையேதான் நான் சொல்கின்றேன் என்றும் உணர்கின்றேன். 

ஆனால், நான் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்டதன்படி நடக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் நரக தண்டனையென்று நான் மேற்கோளும் காட்ட வரவில்லை.

சங்கராச்சாரி, மடாதிபதிகள், குருக்கள், புரோகிதர்களுடைய ஊழல்களைச் சொல்லுவதானால் நான் மேற்படி மடாதிபதியாக வருவதற்கல்ல. நான் நாயன்மாராகவோ ஆழ்வாராகவோ ஆவதற்கல்ல. 

ஆனால் என் அனுபோகத்திற்கும், ஆராய்ச்சிக்கும் உண்மையென்று பட்டதை நான் உள்ளபடி உணர்வதை உங்களுக்கும் சொல்லுகின்றேன். உங்கள் அறிவிற்கு அது சரியென்றுபட்டால் கொள்ளுங்கள், அல்லவென்றுபட்டால் தள்ளுங்கள். சரியென்று பட்டபின் அதைக் கொள்ள தைரியமில்லாமல் ஊரை ஏமாற்ற நாயக்கர் நாஸ்திகம் பேசுகிறார் என்று சொல்லி வீண் பழிபாவத்திற்கு உள்ளாகாதீர்கள்.

நமது சமூகத்திற்கு எதிரிகளாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து பிழைக்கும் கோடாரிக் காம்புகளின் பேச்சைக் கேட்டு ஏமாறாதீர்கள். 

கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுள் பேரால் விபச்சாரம் செய்து கொண்டு, கடவுள் பேரால் தீண்டாமையை உற்பத்தி செய்து கொண்டிருப்பதையெல்லாம் தான் நான் கண்டிக்கிறேன். 

கடவுளை நம்புகிறவன் யோக்கியமாய் இருக்க வேண்டியது அவசியம். கடவுளை நம்பி யோக்கியமாய் இருக்க முடியவில்லையானால், கடவுளைப்பற்றி கவலைப்படாமலாவது நீங்கள் யோக்கியர்களாய் இருக்க வேண்டுமென்பது தான் என் கோரிக்கை.

எல்லாரையும் சமமாயும், சகோதரராயும் பாவிக்க வேண்டும். எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துதல் வேண்டும். தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும். தாசித் தொழில் ஒழிய வேண்டும். பால்ய விவாகம் ஒழிந்து நம் பெண்கள் எப்பொழுதும் சுகமாயிருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. திருடக் கூடாது. யோக்கியமாய் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று இதுபோல் சொல்லி வருகின்றேன். இதைச் சில அயோக்கியர்களும், அவர் தம் பத்திரிகைகளும், பொறாமை, சுயநலம், அற்பபுத்தி காரணமாக நாஸ்திகம் என்று பேசியும், எழுதியும் வருகின்றன. 

இவையெல்லாம் நாஸ்திகமாயின் பின் ஆஸ்திகம்தான் என்ன?

கடவுள் பேரால் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுதலும், கடவுள் பேரால் தீண்டாதார்களைக் கோயிலுக்குள் கும்பிட விடாமலும், கடவுள் பேரால் இளங்கன்னிகைகளைக் கல்யாணம் செய்து அறுதலியாக்குவதும், கடவுள் பேரால் 100–க்கு தொண்ணூற்று ஆறரை பேர் முட்டாளாகவும், மூன்றரை பேர் படிக்கவும், கடவுள் பேரால் ஒரு வகுப்பார் உட்கார்ந்து சாப்பிடவும், மற்றொரு வகுப்பார் உப்பில்லாமல் ஓடி உழைக்கவும், கடவுள் பேரால் பொய் சொல்லவும், திருடவும், பலியிடவும், யாகங்கள் செய்யவும், ஏமாற்றவும் செய்தால் இதுதானா ஆஸ்திகம் என்று கேட்கின்றேன். அப்படியானால் இந்த ஆஸ்திகத்தை ஒழிப்பதே உலகுக்கு நன்மை பயக்குமல்லவா?

உங்கள் அறிவை விளக்கி இம்மாதிரி ஆஸ்திகப் பேச்சைவிட நான் சொல்லும் பேச்சில் ஆஸ்திகம் அதிகமாயிருக்கிறதா, நாஸ்திகம் இருக்கிறதா என்று பகுத்தறிந்து பின்பற்றுங்கள். அயோக்கியர்கள் உங்களை நீண்ட காலம் ஏமாற்ற முடியாது. 

மதத்தின் பேரால் பார்ப்பனர்களின் பொய், புரட்டு, வேதம், புராணம், சாஸ்திரம் முதலியவற்றில் நம் மக்கள் பல்லாயிரக்கணக்கான வருசங்களாக அடிமைப்பட்டு விட்டனர். 

சுயமரியாதையே இல்லாது போய்விட்டது. சுயமரியாதை இல்லாது போனால் சுயராஜ்யம் எங்கே இருக்கும்?

கிறிஸ்தவ மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. புத்த மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. முகமதிய மதத்திற்கு ராஜ்யமிருக்கிறது. அந்தந்த ராஜ்யம் அந்தந்த மதத்தார்களால் ஆளப்படுகிறது. ஆனால், பழைய தொண்மையான இந்து மதத்திற்கு அநாதி காலந்தொட்டு ராஜ்யமுமில்லை. இருக்கிற ராஜ்யத்தையும் இந்துக்கள் ஆளாமல் அந்நியர் ஆளுகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் ஜனத்தொகை பெருகுகின்றது. நம் பழைமையான இந்து மதத்திற்கு ஜனத்தொகை குறைகின்றது.

இந்தியாவில் உள்ள இந்து மதச் சம்பிரதாயப்படியுள்ள தீண்டாமையென்னும் கொடிய வழக்கத்தால் சுமார் ஏழு, எட்டுக் கோடி முகமதியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிட்டனர். இன்னும் தீண்டாமை ஒழியாவிட்டால் முகமதியராகவும், கிறிஸ்தவராகவும் ஆவதற்காக ஆறு கோடி பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்துவாக இருந்து முகமதியராக மாறினவர்களுக்கும், துருக்கி சுல்தானுடனும், ஆப்கன் அமீருடனும் சமத்துவமாக நின்று தொழவும், குரான் படிக்கவும், உணவு அருந்தவும் சமத்துவமான சுதந்திரம் உண்டு.

இதுபோல் கிறிஸ்தவ மதத்திலும், புத்த மதத்திலும் உண்டு. ஆனால், பழைய இந்து மதத்தில் கடவுளைப் பார்க்கக் கூடாத ஒரு ஜாதி, கிட்டே போகாத ஜாதி, இந்து வேதத்தைப் படிக்கக் கூடாத ஜாதி உண்டு. ஆனால், அதை ஒப்புக் கொள்கிறவன் தான் இந்து. இதெல்லாம் வெறும் புரட்டும், மக்களை ஏமாற்ற எழுதி வைத்ததும் தற்கால வாழ்விற்கு வேண்டாததும், ஆகியவையா இல்லையா என்று தான் கேட்கின்றேன்.

ஆதலால், இந்தப் புரட்டையெல்லாம் உதறித் தள்ளி நல்ல சமயத்தில் பற்றிக் கொண்டு நல்ல காரியத்தைச் செய்யுங்கள் என்றால் நாஸ்திகம் என்று குறுக்கே சொல்ல வந்துவிடுகிறார்கள். 

- தோழர் பெரியார்.

[20.03.1928-இல் அலசந்தாபுரத்தில் தோழர் பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவில் இருந்து சில... ´குடிஅரசு,´ 15.04.1928]

 
மேலதிகக் ஆக்கங்கள்...

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel