மனிதனை மனிதனாக நடத்து!

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 


393585_176710475760850_120331151398783_283936_1220327942_n


அமீபாவில் தொடங்கி மிருகநிலையில் திரிந்த மனித சிந்தனைகளை நெறிப்படுத்திய சமயமும், தத்துவங்களும் மேற்கு ஐரோப்பியருக்கு இலட்சிய மனிதனின் உயர்ந்த நிலைப்பற்றி எடுத்துச் சொல்லி 200 ஆண்டுகள்தான் முடிந்திருக்கிறது.

கோடானகோடி மானிட வர்க்கத்தின் தொடர்ச்சியான மாற்றங்களோடு ஒப்பிடும் போது 200-ஆண்டுகள் குறுகியதுதான். ஆனால் அபாரமான பகுத்தறிவை மானிட வர்க்கத்தினருக்கு கொடுத்திருக்கிறது. "டாம் பெய்ன் (Tam Paine) என்ற சிந்தனையாளர் ஆங்கிலேய சமூதாயத்தில் இருந்த சாதி அடக்குமுறைக் கொடுமைகளையும், 'ஆதிப்பாவம்' என்னும் கிறிஸ்துவ மதக்கோட்பாடுகளையும் எதிர்க்க வைத்தது.

"நீக்ரோ இன மக்களைப் பிடித்து அமெரிக்காவில் விலைக்கு விற்ற 'அடிமைகள் வியாபார'த்தை ஜான் உல்மன் (Woolman) கண்டிக்க வைத்தது."

"படகோனியா பாலைவன மக்களின் கொடுமைகளுக்கு மனித நேய அடிப்படையில் தொண்டு செய்ய புறப்பட்டது ஜேசுசபை (The Society of Jesus)இந்நிகழ்வுகள் குறித்து பேராசிரியர் வொயிட்ஹெட் (Prof. Whitehead) சொல்கிறார் :

"ஜேசு சபையினரும், தத்துவ அறிஞர்களும் தங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் மனிதனைப் பற்றிய மதிப்பு உணர்வுகள் தத்துவத்தையும், சமயத்துறையையும் ஒன்றிணைத்தன. பத்தாம்பசலித்தன மூடத்தனங்களை தூக்கியெறிய வைத்து, ´ஜனநாயக சுதந்திரக் கொள்கை´க்குப் பெரிதும் ஊக்கமும், ஆக்கமும் கொடுக்க வைத்தது."

இப்படி உலக வரலாறுகளின் மானிட முன்னேற்றங்கள் சமூகப்பார்வையில் உயர்வு தாழ்வு பார்க்காமல் மனித மேம்பாட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தன.

வொயிட்ஹெட்டின் சமூகப்பார்வையும், தீவிர ஆராய்ச்சிகளும், ஒரு சில தனி மனிதர்களின் கடும் போராட்டங்களின் செயல்பாடுகளே, நெடிய மனித செயல்பாடுகளை புரட்டிபோட வைத்திருப்பதாக சொல்கிறார். அதே செயல்பாடுகள் நாம் வாழும் காலகட்டத்தில் எப்படி இருக்கின்றது என இன்றைய உலக நடப்புகளோடு ஒப்பிடும் போது இன்றைய ஜனநாயகப்போக்கும், மக்களாட்சி என்று மார்தட்டிக் கொள்பவர்களின் உண்மை நிலை என்ன?

ஒவ்வொரு மணிதனையும் ´Regimentation´ ஆக வைத்திருக்கும் அதிகாரத்தின் சூட்சமத்தை மனிதன் கண்டுபிடித்துவிட்டானா? சொந்த நாட்டில் அகதி வாழ்க்கை வாழும் தனிமனிதனின் சிந்தனை, நடத்தை, செயல்பாடுகள், சமூகப்பிடிப்பு, சுயகருத்துக்கள் கூட இன்று எங்கோ இருக்கும் ஒருசில தனிமனிதர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்மை அறியாமல் நமக்குள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாகரிகரிக மனிதனை விஞ்ஞான சாதனங்கள் மூலம் நம் மூளைக்குள் ஏதோ ஒருவித திணிப்பை அனுப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொடர்பு சாதனங்களான பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி, வீடியோ செய்திகளில் அப்பட்டமான பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உக்கிரமான மானிட உரிமை மீறல் கருத்து திணிப்புகளை இப்படி எந்த காலகட்டத்திலும் நடந்ததில்லை.

சமூகப்பற்றுள்ள சில மனிதர்கள் இதை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்ப்பு குரல்கள் அதாவது பெருவாரியான மக்களின் கருத்தில் இருந்து தனித்து போனால் அவர்கள் வேண்டப்படாதவர்களாக போய்விடுகிறார்கள். புறக்கணிக்கப்பட்டவாக (Non Conformists) போய்விடுகிறான்.

சுயசிந்தனையும், மனசாட்சியும் உள்ள தனி மனிதன் வெகுவாரி சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு தலைதூக்க முடியாதபடி அழுத்தப்படுகிறார்கள். ஏதோ ஒரு அதிகாரத்திற்கு விலைப்போனவர்களாக பொய்ப்பிரச்சாரத்தினால் மற்றவர்கள் நம்பும்படி சந்தேக நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

எல்லாக் காலகட்டங்களிலும் மாற்றுக் கருத்துகளுக்கு அங்கிகாரம் கிடைக்காமல் தனி மனித சிந்தனைகள் ஒடுக்கப்படும் போது இன்றை மனிதர்களை இன்னும் நாகரிகமடைந்தவனாக கருதமுடியாமல் இருக்கிறது. நாம் சந்திக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் எல்லாரும் அடக்குமுறையினால் சோர்வும் விரக்தியும் அடைந்த நிலையில் இருக்கிறார்கள்.

ஏதோ மக்களாட்சி நடக்கிறது; தனிமனிதனின் உணர்வுகள் மதிக்கப்படுகிறது; மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது; மாக்கள் மக்களாகி விட்டனர்; மானிட குலத்தின் சுதந்திரங்கள் போற்றி பாதுகாக்கப்படுகின்றன; சமத்துவ உரிமைகள் போற்றிப் பாதுகாக்க வல்லமை உடைய பல அமைப்புகள் சங்கங்கள் நமக்கு ஆதரவாக இருக்கின்றன என்றெல்லாம் கற்பனை போலித்தனத்தில் இருக்கின்றோமா என்னும் சந்தேகமும், பெரும் கவலையும் சமூகபற்றுவர்களுக்கு இன்று வந்திருக்கும் அளவு பல சூழ்ச்சிகள் உலகம் முழுவதிலும் நடக்கின்றன.

மீண்டும் மனிதனை மிருகநிலைக்கு கொண்டு சென்றுவிடும் அளவில் இன்றைய மனிதர்களின் வாழ்வாதார திண்டாட்டம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. சரியான சமூகவழிதளத்தில் பயணிக்க போதிய விழிப்புணர்ச்சியை நமக்குள் ஏற்படுத்த வேண்டிய கடமை நமக்குள் இருக்கிறது.

ஒவ்வொரு தலைமுறையிலும் எழுச்சி பெறும் கோட்பாடுகளை அந்த காலகட்டத்துச் சமூதாயத் தேவைகளை வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும் என்பது தானே வரலாற்று நியதி. அதை செய்வோமா?

- தமிழச்சி
27/05/2009






fbPixel