'அயலானை நேசி' என்ற வெத்து வாதம்!

'இந்த இந்த அறநெறிக் கோட்பாட்டின்படி நட' என்று பரிந்துரை செய்ய வேண்டுமானால்; அந்த கோட்பாட்டில் கொஞ்சம் நியாயம் இருக்க வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு அறநெறியைக் கடைப்பிடி என்று எதற்குச் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை.
இயேசுவின், "நீ உன் அயலானை உன்னைப் போலவே நேசி" என்ற உபதேசத்தை தான் ஃப்ராய்டு கடுமையான தாக்கி பேசினார். ஃபராய்டு மனத்தத்துவ ஆராய்சியாளர் என்பது அனேகருக்கு தெரிந்த சங்கதி. ஆனால், இயேசுவின் கோட்பாடுகளையெல்லாம் புளி கரைத்து சக்கையாக்கி குப்பைக்கு அனுப்பி விட்டார். பைபிளில் இருந்த அனேக வாக்கியங்களை ஃப்ராய்டு விமர்சித்திருக்கிறார் என்பது அனேகருக்கு தெரியாத சங்கதி.
"எதிராளி ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பி காட்டு" போன்ற வாக்கியங்களுக்கு ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்கிறார் இவர். எதற்கு அயலானை நேசிக்க வேண்டும்? அதனால் நமக்கென்ன லாபம்? அதனால் நமக்கென்ன நன்மை? அடுத்தவனை நேசிப்பது என்பது எப்படி சாத்தியமாகும்? அதற்கு என்ன வழி இருக்கிறது? என்னிடமுள்ள அன்பாகிய உணர்ச்சி எனக்கு பயனுள்ள ஒன்று. அதைக் கொஞ்சமும் யோசனை இல்லாமல் வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டுமா? என் அன்பு எனக்குக்கென்று சில கடமைகளை விதித்திருக்கின்றது. அக்கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு நான் தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும். நான் யாரையாவது நேசிப்பதென்றால் அந்த ஆள் அதற்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். அந்த ஆளால் எனக்கென்ன லாபம் (ஆதாயம்) கிடைக்கும் என்பதை நான் இங்கு கணக்கிடுவதை தவீர்க்கிறேன். அத்துடன் என் காம உணர்ச்சியில் அந்த நபரின் இடம் என்ன என்பதையும் விட்டுவிடலாம்.
ஏனெனில் அயலானை நேசிக்கும் அறக்கோட்பாட்டிற்குள் மேற்கூறிய இரண்டு வகையான உறவுகளையும் பிரச்சனையாகக் கருதவில்லை. என் அயலானும் என்னைப் போன்ற கருத்துக்களை ஏற்றுக் கொண்டவனாக இருந்தால் என் நிழலின் மறுஉருவத்தை அவரிடம் காண்பேன். ஒருவகையில் அவரை நேசிப்பதன் மூலம் என்னையே நேசிப்பதாக இருக்கும். ஒருவேளை என்னை விட உத்தமனாகவும், அன்பாகவும் இருந்தால் அவர் மீது அன்பு செலுத்தலாம். அவருக்கு என் அன்பை பெறும் தகுதி இருக்கும். என் அயலான் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவரிடம் அன்பாக இருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. முன்பின் தெரியாத அன்னியராக இருந்து அவரின் செயல்பாடுகள் என்னை கவர்ந்திட முடியாத நிலையில் இருந்தால் அவரை நேசிப்பது கடினமாக இருக்குமே. இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் அவரை நேசிப்பது தவறானதாகும்.
என் அன்புக்குரிய மற்றோர் என்னை தவறாக கருத இடங்கொடுத்துவிடும். அவர்களுக்கு சமமாக இந்த அன்னிய நபரையும் மதிப்பது என்றால் என் பழைய நண்பர்களுக்கு நியாயமாக நான் நடப்பது போலாகாது. இன்னொரு விதத்தில் அண்டை வீட்டுக்காரர் இந்த பூமியில் வாழ்கின்ற ஓர் உயிர் பூச்சி, புழு, பாம்பு போல அவரும் ஒரு ஜந்து என்பதற்காகவே நான் அவர் மீது அன்பு காட்டலாம் தானே என்று சொன்னால் அவருக்கு என் மொத்த அன்பில் கோடியில் ஒரு பங்கு வேண்டுமானால் தரலாம். என் அன்பைக் கோடானு கோடி மண்ணுயிர்களுக்குப் பங்கு போடும் போது அண்டை வீட்டாருக்கு எவ்வளவு கிடைத்து விடப் போகிறது? என் விவேகத்தால் என்னை நான் எவ்வளவு தூரம் நேசிக்கின்றேனோ அதே அளவு அன்பை அந்த அயலாருக்குத் தருவதென்பது மிகவும் துர்தனமே!
என்னய்யா இது? அயலானை நேசி என்று இயேசு சொன்னதற்காகவா இந்த கிறுக்கன் இப்படி புலம்புகிறான். அன்பு என்பது அள்ள அள்ள குறையாதது. ஜீவனின் எல்லையில்லா ஊற்று அன்பு என்று ´டயலாக்´ சென்னால் அது என்ன லாஜீக்கோ? அதையே தான் எல்லா மதவாதிகளும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் நாம் காண்பது என்ன? அன்பு ஊற்றெடுக்கின்றதோ இல்லையோ வக்கனையாக எரிச்சல்களும், கோபங்களும், பொறாமையும் என ஒட்டு மொத்த அன்புக்கு எதிர்மறையான உணர்ச்சிகள் தாண்டவமாடுகின்றதே தவீர எங்கேயிருந்து பீய்த்துக் கொண்டு வருகின்றது அன்பு! ஆமாம் அதைத் தானே ஃப்ராய்டும் சொல்கிறார்:
'அடுத்த வீட்டு அயலானுக்கு என் மீது கொஞ்சமும் அன்பில்லாத போது, அவர் என்னை நேசிக்காத போது, நான் எப்படி அவரை நேசிக்க முடியும்? அவர் என்னை நேசிக்காத போது அவர் எனக்கு எந்தவிதத்திலாவது தீங்கிழைக்கவும் கூடும். அதனால் நான் அவரிடம் இருந்த எச்சரிக்கையாக ஒதுங்கி இருப்பது தானே நல்லது. என்னை பிடிக்காத காரணத்தினால் என்னை விமர்சிக்கலாம்; என்னை அவமதிக்கலாம்; அவதூறாக மற்றவரிடம் என்னைப் பற்றி பேசலாம். அல்லது அவர் செல்வந்தனாகவோ, அதிகாரமிக்க பொறுப்பில் இருந்தாலோ அவற்றை வைத்து என்னை இழிவாக நினைக்கலாம். அப்படிப்பட்ட அயலானை எப்படி நேசிக்க முடியும்?
"இந்த இந்த அறநெறிக் கோட்பாட்டின்படி நட என்று பரிந்துரை செய்ய வேண்டுமானால் அந்த கோட்பாட்டில் கொஞ்சம் நியாயம் இருக்க வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு அறநெறியைக் கடைப்பிடி என்று எதற்குச் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை." அடுக்கடுக்காக கேள்விகளை வீசுகிறார் ஃப்ராய்டு.
இயேசு இருந்திருந்தால் "ஆளை விடப்பா, தெரியாமல் சொல்லித் தொலைத்து விட்டேன்" என்று எஸ்கேப் ஆகியிருப்பாரோ!
- தமிழச்சி
26/01/2009
| < முன் | அடுத்தது > |
|---|


