சமீபத்தில் "பீ" என்ற ஆவணப்படம் பார்த்தேன். தமிழ்நாட்டில் மதுரை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக [மலம் அள்ளுபவர்] வேலை செய்பவர் மாரியம்மாள் நடுத்தர வயதுள்ள பெண். அவரைச் சுற்றி கேமரா செல்கிறது. மதுரையில் இருக்கும் கீழைத் தெரு என்ற இடம் [கோயில் சந்து என்ற பெயரும் உண்டு] ஏதோ கோவிலுக்கு அருகே இருக்க வேண்டும்.
கோவில் மதில் சுவருக்கு பின்புறம் இருக்கும் இடத்தில் தான் மனித மலங்கள் அங்கங்கே கிடக்கிக்கிறது. பிய்ந்து போன கூடையில் இருந்து சாம்பல்களை மலத்தின் மீது தூவி இரண்டு தகடுகளால் வழித்து எடுத்து வாலியில் போடுகிறார் மாரியம்மாள்.
சில மலங்கள் காய்ந்து போய் இருந்ததால் தகடுகளில் அப்படியே ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. ஈரம் உலராத காயாத மலங்களை அள்ளும் போது மாரியம்மாள் கைகளிலும் படுகிறது. அவர் எந்தவித அருவருப்புமின்றி முகம் சுளிக்காமல் மலத்தை அள்ளி பிளாஸ்டிக் வாளியில் வாரிக் கொட்டுவதிலேயே இருக்கிறார்.
உண்மையில் கேமராமேன் மிக க்ளோசப்பில் வைத்து ஷாட் செய்திருக்கிறார். ஏனோ, தானோ என்ற நோக்குடன் கேமரா இருக்கவில்லை. காட்சிகளைப் பார்க்கும் போது மாரியம்மாளாக நாம் மாறிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. குமட்டலும், அருவருப்புமாக பார்க்கலாமா? வேண்டாமா? என்ற சிந்தனையை உருவாக்கிவிடுகிறது.
அந்தப்பக்கமாக நேரிலே அந்தக் காட்சியைப் பார்க்கும் சில பெண்களும், பெரியவர்களும் மூக்கைப் பொத்திக் கொண்டு போகின்றனர். இன்னும் சில சிறுவர்கள் கேமராவை பார்த்தபடி மலம் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
மாரியம்மாளிடம், "இது தெருவா? ஒதுக்குபுறமான இடமா?" என்ற கேள்விக்கு மலத்தை அள்ளிக் கொண்டே சொல்கிறார்:
"தெருதாங்க, ஆனா இந்த இடத்த கக்கூசா ஆக்கிட்டாங்க..."
மாநகராட்சி பொது மக்களுக்காக சில கழிப்பிடங்கள் கட்டி கொடுத்திருந்தும் பொது மக்கள் அதை உபயோகிப்பதில்லை. காற்றுவெளியில் போவதே சுகம் என்று செம்புடன் இங்கு வந்துவிடுகின்றனர்.
20-வருடங்களாக மலம் அள்ளும் வேலையில் இருக்கிற மாரியம்மாள் குடும்பம் பற்றி விசாரித்த போது இறந்து போன கணவன். கல்வி அறிவு இல்லை! குழந்தைகளுக்காக இந்த வேலையை செய்வதாக சொல்கிறார். அதற்கான சம்பளம் மாதம் ரூ 3000.
"மலம் அள்ள தேவையான உபகரணங்கள் கை உறைகள் ஏதாவது மாநகராட்சி தருகின்றதா?" என்ற கேள்விக்கு....
"அதெல்லாம் ஒன்னுமில்லங்க, இந்த பிளாஸ்டிக் வாலிதான் அவுக குடுத்தாங்க... சாம்பலு, தகடு எல்லாம் என்னோடதுங்க....."
பேசிக் கொண்ட வேலையில் ஈடுபட்டிருந்த மாரியம்மாவின் வாளியில் மலம் ரொம்பிப் போய்விடுகிறது. அந்த வாளியை மாரியம்மாள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தெரு ஓரத்தில் மாநகராட்சி வண்டியில் இருக்கும் ஆணிடம் போய்க் கொடுக்கிறார்.
நினைத்துப் பாருங்கள்! படிக்கும் போதே குமட்டலும், அருவெறுப்புமாக இருக்கிறது. சுதந்திரம் கிடைத்த 60-வருடங்களுக்கு பிறகும் கீழ்சாதியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இழிவான வேலைகளும், அதற்கான குறைந்த மாத வருமானமும், அவர்களை எந்த அளவுக்கு சமூகம் புறக்கணித்து வைத்திருக்கிறது என்பதை உங்களால் ஜீரணித்துக் கொள்ள முடிகிறதா?
சிலர் சொல்லலாம், தலீத் மக்கள் அவர்கள் சூழ்நிலையில் இருந்து அவர்கள் தான் மீண்டு வர அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். பாடுபட வேண்டும். அவர்களின் இழிநிலை ஒழிய கல்வி அறிவு வேண்டும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நீங்கள் நினைக்கிறீர்களா? எளிதில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் மாற்ற உயர்வர்க்கத்தினர் விட்டு விடுவார்களா?
சமீபத்தில் நடந்த சம்பவங்கள் தலீத் மக்களின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாவண்ணம் இருக்கிறது என்பதற்கு சிறு சான்றுகள் தான் ´´ஜாட்" சம்பவம்.
தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்புகளில் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், சமையல் எரிவாயு சாதனங்கள், நவீன மின்னணுக் கருவிகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவற்றைக் கூச்சமின்றிக் கொள்ளையடித்ததோடு, மாடி வீடுகளை தூக்கிச் செல்லமுடியவில்லையே என்ற ஆத்திரத்தில் அவற்றுக்குள் இருந்த மரச்சாமான்களையும் சேர்த்து தீ வைத்தது.
´என்ன இது?´ தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் குடிசை என்றால், சட்டியும், பானையும், சாம்பல் அடுப்பும்தானே இருக்கும்? ஆனால், இங்கு சலவை இயந்திரங்கள், கணிப்பொறிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் இவற்றோடு அழகான மாடி வீடுகள் கட்டிக் கொண்டு கீழ்சாதிக் கூட்டம் வசிப்பதா? அவர்கள் அனுபவிக்க நாம் வேடிக்கைப் பார்ப்பதா? மலத்தைச் சுமக்கும் தோட்டி கும்பல் மச்சு வீட்டில் வாழ்வதா?" என்ற உயர்சாதி கொழுப்பு ஜாட் சாதிவெறியர்களிடம் கொழுந்து விட்டு எரிந்தது.
விளைவு தலித் மக்களின் 50-ஆண்டுகால ரத்தமும், வேர்வையும், கனவும், உழைப்பும் வெறும் அரைமணி நேரத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பலால் சாம்பல் மேடாக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை தன்மானத்தின் குறியீடாக நிமிர்ந்து நின்ற அவர்களின் மாடி வீடுகளை ஜாட் சாதிவெறிக் கும்பல் குறிவைத்துத் தகர்த்தது.
"மாடி வீட்டில் வாழும் அவர்கள் தங்களைத் தலித்துகள் என்று ஏன் இன்னும் கூறிக் கொள்கிறார்கள்?" என்று, தாழ்த்தப்பட்டோரைச் சக மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ளவே மனம் ஒப்பாமல் பொருமுகிறார்கள் ´கோஹனா´ நகர நடுத்தர வர்க்கத்தினர். இதில் ஜாட் சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் பள்ளி ஆசிரியர் முதல் சிறுகடை வியாபாரிகள் வரை பலரும் அடக்கம்.
தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தையும் அவர்கள் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதையும் "தவிர்க்க முடியாதது", ´வேறு வழியில்லை" என்று வக்காலத்து வாங்கி வக்கிரமாக தங்கள் மகிழ்ச்சியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த அளவு சாதி இந்துக்களிடம் தாழ்த்தப்பட்டோர் மீதான வெறுப்பு உயர்சாதி திமிராக அருவருப்பாக வழிகிறது.
´கோஹனா சம்பவம்´ இந்து சாதிவெறியர்களுக்கு எதிராக ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவர் போராட்டத்தில் இறங்கினாலும் உடனடியாக அடிமைக்கால தண்டனைகளை ஏவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மொத்தமாகப் பழிதீர்க்கிறார்கள், உயர்சாதி வெறியர்கள்.
இதற்கு சமீபத்திய உதாரணம், ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டம், புபன்பதி என்ற கிராமத்தில் செப்டம்பர் 19-ந் தேதி நடந்த குரூரம்! கண்டாயித் என்ற இந்து ஆதிக்கச்சாதி திருமணத்தில் மாப்பிள்ளையின் காலை கழுவும் அடிமை வேலையை செய்ய மறுத்த தாழ்த்தப்பட்டோரைத் தண்டிக்க, அக்கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பெண்கள் அனைவரையும் நிர்வாணமாக்கி நடத்திச் சென்றனர் இந்து சாதிவெறியர்கள். ஆட்சி அதிகாரத்தை அதன் அடிவரை சுவைக்கும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மனிதர்களே அல்ல!
எனவே, சக மனிதர்கள் அனுபவிக்கும் எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு ´சலுகை´கள் கூட அவர்கள் அனுபவிப்பதை மேல்சாதி வெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
´கோஹனா´ நகரத்தின் வர்த்தக மையத்தில் மாடி வீட்டில் வாழ்ந்து கொண்டு, கலர் டி.வி. பார்த்துக் கொண்டு, மோட்டார் பைக்கில் பறந்து கொண்டு, "லேப்டாப்´ கம்ப்யூட்டரைத் தட்டிக் கொண்டு, கூடவே தங்களை ´தலித்" என்று கூறிக் கொண்டு இடஒதுக்கீட்டைப் பெற்று அரசு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். சமயத்தில் வெளி நாட்டுக்கும் பறந்து விடுகிறார்கள் என்ற "பொச்சரிப்பை´ பரப்பித் தான் தாழ்த்தப்பட்டோரின் சொற்ப சொத்துக்களையும் தீவைத்து கொளுத்தினார்கள், ஜாட் சாதிவெறியர்கள்.
ஆனால், கோஹனா நகரத்து தலித்துகள், சினிமா கழிசடைகள் போன்றோ, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் போன்றோ அல்லது கந்துவட்டி, மணல் திருட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சும் திடீர் பணக்கார பொறுக்கிகள் போன்ற கூட்டம் அல்ல.
கடந்த 50- ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரத்தில் அவர்கள் செலுத்திய கடுமையான உழைப்பும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காகவும், எதிர்கால வாழ்க்கைக்காகவும், மிக நீண்டகாலத்திற்குத் திட்டமிடும் அவர்கள் பாங்கும் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. பணம் படைத்த ஜாட் ஆதிக்க சாதி கும்பல்களே இவர்களைக் கண்டு மிரளும் அளவுக்கு தங்களுக்குள் ஒன்றுபட்டு, பலம் பொருந்திய அமைப்பாக திரண்டு ஜாட் ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள்.
இங்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தலைமுறை நபர்களும் ஒரு படி முன்னேற்றத்தில் நிற்கிறார்கள். தாத்தா, நகராட்சியில் தெரு கூட்டுபவர்; அப்பா, ரயில்வேயில் எழுத்தர்; மகன், எம்.சி.ஏ., மாணவன், கூடுதலாக பகுதி நேர வேலையில் வருமானம். பிள்ளைகள் பெரும்பாலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களாகவும், ஏதாவது ஒரு தொழிற்பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்களாகவும் வளர்கிறார்கள். தாத்தா பார்க்கும் தெருக்கூட்டும் வேலையை வரும் தலைமுறையினர் இனிமேலும் தொடரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் என்றால் உதிரிகள், தலைசொரிந்து நின்று மீதம் மிச்சத்தை வாங்கிக் கொள்பவர்கள், பிறரின் கருணைக்கு ஏங்குபவர்கள் என்ற ஆதிக்க சாதியினரின் சித்திரத்தை நிர்மூலமாக்குகிறார்கள்.
கோஹனா நகரத்தில் உருக்கு போன்ற அமைப்பாக திரண்டு இருக்கும் உழைக்கும் தாழ்த்தப்பட்டோரைக் கண்டு தீக்குள் விரலை விட்டவர்கள் போல் நடுங்குகிறார்கள், ஜாட் ஆதிக்க சாதிவெறியர்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவதும் ஏவிய வேலையை செய்து முடிப்பதும் அதிகபட்சம் போனால், ஆடுமாடுகள் போல் அடிமை வேலைக்குப் படைக்கப்பட்டவர்கள் தான் ´தாழ்த்தப்பட்டோர்" என்ற உயர்சாதி திமிர் கோஹனா நகரத்து தாழ்த்தப்பட்டோரிடம் செல்லுபடியாகவில்லை.
"கோஹனா நகரத்து" தாழ்த்தப்பட்டோர் வளமான எதிர்காலத்தைப் பற்றி கனவுகள் காண்பது குற்றம்! அவர்களுக்கு சொத்துக்கள் இருப்பது குற்றம் ´அவர்களுக்கு சுயமரியாதை தன்மானம் இருந்தால் பெருங்குற்றம்! அவர்கள் மனிதர்களாக அல்ல, மனிதர்கள் மாதிரி நடந்துக் கொண்டாலே அது மன்னிக்க முடியாத குற்றம்!" என்று கொக்கரிக்கிறது, ஜாட் ஆதிக்க சாதிவெறி கும்பல். இன்று நேற்றல்ல. இரண்டாயிரம் ஆண்டுகாலமாக இந்த உயர்சாதி இறுமாப்பில்தான் தாழ்த்தப்பட்டோரைக் கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆதிக்க இந்துசாதி வெறியர்கள். (நன்றி: ´புதிய ஜனநாயகம்´)
கோகாத் சம்பவம்: கோகாத், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கே வால்மிகி என்ற சாதி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சாதி அமைப்பு முக்கோணத்தின் அடிமட்டத்தில் இருக்கும் மக்கள். அதாவது தாழ்த்தபட்ட மக்கள். இவர்கள், கிட்டதட்ட அடிமை போன்று உயர்சாதியினரின் மலத்தை தினமும் அள்ள வேண்டும். இவர்கள் வேறு ஏந்த வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இதற்கு அவர்கள் பெறும் ஊழியம் ஒரு மாதத்திற்கு வெறும் ரூ 20. அதே வீட்டில் உணவிற்காக கையேந்தி நிற்க வேண்டும்.
இது சம்பந்தமாக உயர்சாதியினர் ஒருவர் கூறியது "இந்த வேலையை அவர்கள்தான் செய்ய வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால் யார் செய்வது?" என்றார்.
இது போன்று வால்மீகி சாதியினர் மலம் அள்ளுவதால் அவர்களை மற்றவர்கள் தீண்ட மறுக்கின்றனர். அதாவது முடிதிருத்தம் செய்வோர், அவர்களுக்கு முடிதிருத்தம் செய்ய மறுகின்றனர். இதனால் அவர்கள் முடிதிருத்தம் செய்ய சுமார் 20 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது.
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி பிரிவு 15-ல் "எந்த மனிதரையும் சாதி அடிப்படையில் பேதம் காட்டக்கூடாது. எல்லா மனிதர்களும் பொது இடத்திற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள்".
இருப்பினும் இதை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு வால்மிகி சாதியினர் ஒரு சாட்சி. இந்த வால்மிகி சாதியினர் பொது இடத்தில் தண்ணீர் எடுக்கவோ, கடவுள் இருக்குமிடத்திற்கு செல்லவோ முடியாது. டீ கடை, உணவகங்களில் இவர்களுக்கு தனி பாத்திரங்களில் தான் எல்லாம் பரிமாறப்படுகிறது.
பகவதி பிராசாத் குமார் என்ற பிராமணர் கூறுகையில், "நாங்கள் பல வருடங்களாக மதச் சடங்குகள், பூஜைகள் செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் வால்மிகி சாதியினருடன் அமர்ந்து உணவு உட்கொள்ளும் தவறை இது வரை செய்ததில்லை." என்றார்.
2003-ம் வருடம் மத்திய பிரதேச அரசாங்கம், "அனைத்து மலம்களிக்கும் இடத்தை பொது சாக்கடையில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றது. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இன்னும் வால்மிகி சாதியினர்தான், மலம் அள்ளுகின்றனர்.
சுமார் 20-வருடங்களாக இது போன்று மலம் அள்ளும் சுதா என்ற பெண், அதன்துருநாற்றத்தினால் மூச்சு திணறல் நோய், ஆஸ்துமா, டிபி மற்றும் மஞ்சக்காமலையால் அவதிப்படுகிறார். இது போன்று கிட்டதட்ட மலம் அள்ளும் அனைவரும் அவதிப்படுகின்றனர்.
மேலும், மலம் அள்ளும் ஒருவர்,
"என்னால் மலத்தை தினமும் பார்க்க முடியவில்லை. அதன் துருநாற்றத்தினால் என்க்கு தூக்கம் வருவதில்லை. அதனால் மது அருந்தினால்தான் தூக்கம் வருகிறது." என்கிறார்.
இதில், பூரி என்ற மற்றொரு பெண், திருமணம் முடிந்து சுமார் 10- வருடங்களாக இதை செய்வதாகவும், முதலில் மிகவும் கடினமாக இருந்ததாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அது நாளைடைவில் பழகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட கொடுரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்த அரசியல்வாதிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? மலம் அள்ளும் தொழிலை புனிதமாக கருதவேண்டும் என்று சொன்ன காந்திக்கு மகாத்மா பட்டம் கொடுத்து பெருமைப்படுத்திய நாடல்லவா? அந்த மகாத்மாவுக்கே புனித தொழிலாக தெரிந்த போது இந்நாள் அரசியல்வாதி என்ன செய்திருப்பான் என்பதற்கு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நல்ல உதாரணம்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஓர் புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத் தின் பெயர் "கர்மயோக்". அந்த நூலை நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் வெளியிடவில்லை. குஜராத் மாநில அரசின் செய்தித் துறையே கர்மயோக் என்ற அந்த நூலை வெளியிட்டுள்ளதுதான் மிகக் கேவலமான ஒரு கொடுமையான நிலையாகும். அந்த நூலில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை எப்படிக் கேவலப்படுத்தி எழுதியிருக்கின்றார்கள் என்றால்,
"மலம் அள்ளுவது, சாக்கடைகளையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள். அந்த பணியை செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியை அவர்கள் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டுமொத்மான சமூகத்திற்கும், கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நாக்கில் தேன் தடவுவது போன்ற ஒரு செய்தியை எழுதியிருக்கின்றார்.
வருணாசிரமக் கோட்பாடுகளை ஊக்குவிக்கும்படி இருந்த நரேந்திர மோடிக்கு தமிழகத்தின் திராவிட கழக தலைவர் கி. வீரமணி அவர்களும், தலீத் தலைவர் திருமா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து புத்தகத்தின் நகல்களை எரித்து போராட்டம் செய்தனர்.
இந்தியாவில் வருணாசிரமக்கோட்பாட்டுக்குள் இந்திய அரசியல்வாதிகளும் சட்டமும் துணைப்போவதால் மனிதனை ஜாதியை வைத்து இழிபடுத்தி இழிவான வேலைகளை அவர்களுக்கென்று ஒதுக்குவது எந்தவிதத்தில் நியாயமாகும்?
ஒருசில தனிமனிதர்களின் போராட்டத்தினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும் மட்டுமே சில முறை முன்னேற்றம் கண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு நடந்த அக்கிரமங்களை ஒழித்துக் கட்டியது.
இந்தியா முழுக்க துப்புரவு தொழிலாளர்கள் 6.76-இலட்சம் பேர் உள்ளனர். தலையில் மலத்தை சுமந்து செல்லக் கூடிய இழிவான நிலையில் இருக்கிறார்கள். நவீன கழிப்பிடம் 96-லட்சம் கட்டப்பட்டிருக்கிறது. சாக்கடை அள்ளி இறந்தோர் 22,000-பேர் மலம் கழிவு நீர் உள்ள பகுதியில் இன்றைக்கும் இறங்கி சுத்தம் செய்கிறவர்கள் எங்களுடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். சாக்கடைக்குள்ளே இறங்கி விஷ வாயு தாக்கி இறந்த எங் களுடைய தோழர்களுடைய எண்ணிக்கை மட்டும் 22,327 பேர். மலத்தையும் தலையில் சுமக்கிறார்கள். மரணத்தையும் தலையில் சுமக்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் மட்டும் 2700-முழு நேர சுகாதாரப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 90-விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள். 35-விழுக்காடு பெண்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 60-ஆண்டுகள் சென்ற போதிலும் பாதாள சாக்கடை போடப்படாத பல ஆண்டுகளுக்கு முன் திறந்த கழி வறைகள் கட்டப்பட்டு வந்தன. அதில் சேரும் மலத்தை கையால் அள்ளி சுமந்து செல்லும் நிலை இருந்தது. 20-ஆண்டுகளுக்கு முன்னால் திறந்த வெளி கழிப்பிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமும் தீட்டப்பட்டது. டில்லியிலும் 1987-ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளுவதற்கு தடை போடப்பட்டது.
ஆனால் சமீபத்தில் எடுத்த கணக்கின்படி (2008) 1000-பேர் மலம் அள்ளும் பணியில் இன்னமும் இருப்பதாக கணக்கெடுப்பு சொல்கிறது. அப்பகுதிகளை அடையாளம் கண்டுபிடித்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் அகு குறித்து கூறியபோது இதுவரையில் கையால் மலம் அள்ளுபவர்களைக் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும்
தெரிவித்தினர்.
மலம் அள்ளும் கொடுமையான தொழிலை அரசு ஒழித்துக் கட்ட முயற்சி செய்தாலும் சிலர் திட்டமிட்டு பின்பற்றி வருவதாக சொல்லப்படுகின்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 8000-பேர் கையால் மலம் அள்ளும் வேலை செய்ததாகவும், தற்போது 1000-பேர் மட்டும் இருப்பதையும் ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சேவை நிறுவனங்கள் முழு மூச்சுடன் செயல்படுகின்றன.
உங்களுக்கும் மலம் அள்ளும் தொழிலாளர்களை கண்டால் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுங்கள். அத்தொழிலாளி காப்பாற்றப்பட வேண்டியவர்.
தமிழச்சி
30/15/2008