வன்கொடுமை

அநீதிகளுக்கெதிரான போராளி முத்துக்குமாரன்!

போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1.இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2.ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3.இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4.புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5.புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6.ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7.பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9.புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10.சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11.பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12.தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14.சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழக ரௌடிகளின் அராஜகமும், அரசு ஆதரவும்

தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் சிறையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் மீது குண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் சிறைக்குள் கூட ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்னும் நிலையை கருணாநிதி அரசு உருவாக்கி இருக்கிறது. 

ஈழத்தமிழர்கள் மீது பொய்குற்றச்சாட்டு சுமத்துவது, சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக சிறையில் அடைப்பது, விடுதலை புலிகள் என்று சந்தேகிக்கிறோம் என்று இளைஞர்களை துன்புறுத்துவது என முகாம்களில் இருந்த ஈழத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்ட செய்திகள் அனேகமாக வெளிவருவதில்லை. பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்திகளும் மறைக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கரூரில் அகதி முகாமில் இருக்கும் 26-வயதுடைய பத்மா தேவியின் மரணம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பத்மா தேவியின் கணவரான குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பசுபதிபாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் மார்ச் 7-ஆம் தேதி அன்று பத்மா தேவியை அழைத்துச் சென்றிருக்கின்றனர். 

அன்று மாலை வீடு திரும்பிய பத்மா தேவி உடலில் மண்ணெண்னை ஊற்றி  தீக்குளித்தார். ஆபாத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். 

தகவல் அறிந்த ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களும், கரூர் அகதி முகாமை சேர்ந்தவர்களும் கரூர் மருத்துவமனை முன் குவிந்தனர். 

பலாத்கார முயற்சியால் தான் பத்மா தேவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், அதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைதியான முறையில் கோரிக்கை வைத்தனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் அம்பலமானதால் பதட்டநிலையை அடக்குவதற்காக திருமாநிலையூர், ராயனூர், கரூர் பகுதிகளில் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டனர். 

கரூர் பெ.தி.க தோழர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். 

"பத்மா தேவியின் மரணத்திற்கு காரணமான போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு பிரேதப் பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைத்தது. 

பத்மாவின் கணவரான குமாரை திருச்சி சிறையில் இருந்து அழைத்துவந்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததுடன் நிறுத்திக் கொண்டது. மேற்கொண்டு பத்மா தேவியின் மரணம் குறித்து எந்த விசாரணையும் நடத்தாததால் தோழர் கொளத்தூர் மணி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். 

இன்று தமிழகத்தில் கரூர் பகுதியில் போராட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இணையத்தில் உங்களோடு சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்....

நெருப்பில் எரிந்து கருகிய பத்மா தேவியின் உடலைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. வெறும் சம்பவமாவோ செய்திகளாக ஏற்க மனது மறுக்கிறது. எத்தனையெத்தனை இன்னல்கள் இந்த மக்களுக்கு... 

அகதியாக இருந்தாலும் இவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்ற உணர்வு தமிழக மக்களுக்கு இல்லாமல் போனது ஏன்? 

காக்கை கூட்டம் போன்று, "ஒர் அகதி மரணத்திற்கு அகதி கூட்டங்கள் ஒண்றினைந்து போராடிய ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு மௌனமாக நாம் கடந்து செல்வதா?"

நாமும் மனிதத் தன்மை உடையவர்களாக இருந்தால், "தமிழக அரசு பத்மா தேவியின் மரணத்தை விசாரிக்க உத்தரவு போட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்."

தமிழகத்தில் இருக்கும் பெண்கள் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட முன்வரவேண்டும். 

இவை அரசியல் பிரச்சனை இல்லை. மனிதன் நோக மனிதர் பார்க்கும் மானிட நியதியை முன்னெடுக்கும் முயற்சியாக உருவாக்க வேண்டும். 

தமிழச்சி
31.03.2010

 

வணிக நோக்கமற்ற மனித நேய முயற்சியை முன் வைத்து...

நமக்கு அருகே தான் எல்லாக் கொடூரங்களும் நடந்திருக்கின்றன. இராசாயன குண்டுகளால் தாக்கி அழிக்கப்பட்ட தமிழர்கள், துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட உடல்கள், பீரங்கிகளால் கூழாக்கப்பட்ட உடல்கள் என எத்தனை எத்தனை வன்முறை பிரயோகங்கள்? 

நமக்கு அருகே தான் எல்லாக் கொடூரங்களும் நடந்திருக்கின்றன. எப்படியெல்லாம் கதறி அழுதார்கள். பாராமுகமாய் இருந்துவிட்டோமே!எதுவுமே செய்யவில்லையே நாம்...

இன்று கதறல்கள் எல்லாம் அடங்கி மயான அமைதியாய் ஈழம் காட்சி தருகிறதே. இதற்காகவா இத்தனை உயிர்கள் பலியாகின... 

மனதிற்குள் தொடர் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த ஈழத்தின் இறுதி யுத்தம் நிறைவடைந்து இந்த மாதத்துடன் ஒரு வருடம் ஆகிறது... 

என்ன செய்வது? எப்படி செய்வது? என்பதைத் தவிர எதுவுமே செய்யாமல் இருந்த கொடுமையான நாட்களை எண்ணி எண்ணி குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது.... 

இனிவரும் வருடங்களிலும் ´ஏப்ரல்´ மாதம் வரலாம். ஒவ்வொரு முறையும் இரண்டு வருடங்கு முன், மூன்று வருடங்களுக்கு முன் என எண்ணிக்கை கூடிக்கொண்டு போகலாம்...

இனிவரும் சந்ததியினருக்கு சென்ற நூற்றாண்டில் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இந்திய வல்லரசு நாட்டின் வன்முறை என ஆவணப்படங்கள் காட்டப்படலாம். ஜெர்மனியில் யூதர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் இன்று இனவெறி காட்சிகளாக பதிவு செய்யப்பட்டிருப்பதை போல் நாளைய வரலாறு ஈழத்தின் சோகங்களை பதிவு செய்திருக்கிறதா? 

விரக்தியாக சிரிக்கிறார் பிரபாகரன்...

இல்லை. இதுவரையில் ஈழத்தின் இறுதி யுத்தக்காட்சிகள் நமக்கு கிடைத்த ஆதாரங்கள், ஒளிபடங்கள், ஆடியோக்கள், புகைப்படங்கள் எதுவும் ஆவணமாக இல்லை என்கிறார் பிரபாகரன்...

தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கே நடந்த சம்பவங்கள் தெரியவில்லை. முதலில் மக்களிடம் யுத்தக்காட்சிகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆவேசமாக பேசுகிறார் பிரபாகரன். 

மீண்டும் மீண்டும் மலையை மயிரால் கட்டி இழுக்கும் முயற்சிதான். முயன்றுதான் பார்ப்போமே! எதையும் செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்து தான் பார்ப்போமே...

என்ன செய்வது எப்படி செய்வது என்று தடுமாறும் புத்தி நமக்கு...

தோழர் பிரபாகரன் நிதானமாக சொல்கிறார்:

அன்புடையீர், வணக்கம்.

தமிழகத்தில் முத்துக்குமார் பற்றவைத்த நெருப்பு, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடந்த ஓராண்டு முழுவதும் நின்று கனன்று, பல்வேறு போராட்டங்களாக, மாநாடுகள் கருத்தரங்குகள் பேரணி பொதுக்கூட்டங்களாக இருந்துவருகிறது. எனினும் முத்துக்குமார் பற்றவைத்த நெருப்பு தமிழம் முழுவதும் பற்றி எரியாமல் பல்வேறு சதிகளால் முறியடிக்கப்பட்டது உண்மை. எனவே தமிழகத்தில் ஈழம் காற்றுத் தீயாய் பரவ இன்னொரு நெருப்பு அவசியமாய் உள்ளது. இந்த நெருப்பு சதிகளால் முறியடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது நமது பாடம். ஈழத்திற்க்கும் சாதாரண தமிழக மக்களுக்கும் உள்ள இடைவெளி என்னவென்றால் ஈழம் குறித்த செய்திகளும் முக்கியமாக காட்சிகள் தேவையான அளவிற்கு போய் சேரவில்லை என்பதே.  காட்சிகள் தமிழக மக்களின் உணர்வுகளை கிளறிவிடும் சக்தி வாய்ந்தவை என்பதாலேயே செய்தி ஊடகங்கள் காட்சிகளை மக்களிடத்தில் விரிப்பதில்லை. துரதிருஷ்டவசமாக நமது பணிகளும் அவ்வாறே அமைந்து விட்டது. காட்சிகளை சேர்ப்பதில் தன்னியல்பாக சிற்சில முயற்சிகள் இருந்தாலும் ஆறரை கோடி மக்களிடம் இவற்றை சேர்க்கும் பெரும் முயற்சி இல்லை. இதனை நிறைவு செய்யும் ஆரம்ப புள்ளியாக அறுபது ஆண்டு கால ஈழ படுகொலை காட்சிகளை சில முக்கிய நிகழ்வு படங்களுடன் இணைத்து வெளியீடாக வெளியிட உள்ளோம். இது விலைக்கானதன்று. தமிழகம் முழுவதும் இதை சுற்றுக்கு விடும் ஏற்பாட்டு திட்டங்களுடன் இது வெளியிடப்படுகிறது. இவற்றுடன் ஈழம் தொடர்பான சில வெளியீடுகளும் குறுந்தகடுகளும் ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளது, சராசரி மக்களின் உணர்வு நிலை, புரிதல்நிலை கணக்கில் கொள்வதாக இவை இருக்கும். புகைப்படவெளியீட்டின் வீச்சு அது வெளியிடப்படும் எண்ணிக்கையை பொறுத்து உள்ளது. எண்ணிக்கை நமது  அளவு கடந்த பொருளியல் பங்கேற்ப்பை பொறுத்து உள்ளது. ஆறரை கோடி மக்களில் நாம் ஒவ்வொருவரும்  நமது பங்காக எத்தனை ஆயிரம் பேரிடம் அல்லது எத்தனை லட்சம் பேரிடம் கொண்டு செல்ல போகிறோம் என்பது  நம் ஒவ்வொருவரின் பொருளியல் பங்கேற்பை பொறுத்தது. நூல் வெளியிட்ட பிறகு நாம் அதன்  பரப்புரையில் பங்கேற்பது இன்னும் முக்கியமானது. எனவே இப்பணியில் நாம் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு நிதி மட்டுமல்லாமல் கருத்துக்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் உட்பட எல்லா வகையிலும் பங்கேற்போம்.

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்  

தோழர் பிரபாகரன் குறித்து இயக்குனர் ராம் http://ow.ly/1weN7கருத்துக்களையும் வாசித்துவிடுங்கள். 

தோழர் பிரபாகரனிடம் நீங்களும் பேசிப் பாருங்களேன்.... 

ஏதாவது ஒருவகையில் நாமும் அவருக்கு உறுதுணையாய் இருப்போம். 

தோழமையுடன் 
தமிழச்சி
08.04.2010

 

தலிபான் தீர்ப்புகள்!

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான டைம்ஸ் அட்டைப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அழகிய இளம் பெண்ணின் மூக்கும், இரு காதுகளும் அறுக்கப்பட்ட புகைப்படம் அது...

பதற்றமாகவே மக்களும் செய்திகளை அறிந்துக் கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் கணவன், மாமியார் கொடுமைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிப்போன பெண்ணுக்கு கிடைத்த தண்டனை மூக்கையும், இரு காதுகளையும் அறுக்க வேண்டும் என்பது. தீர்ப்பு கொடுத்தவர்கள் தலிபான்கள். தண்டனையை நிறைவேற்றியவன் கணவன்.

"அய்யோ என்ன கொடூரம்" என்று நாம் பதறிக் கொண்டிருப்போம்...

சற்று உன்னிப்பாக டைம்ஸ் அட்டைப்படத்தின் வாக்கியத்தை கவனித்தீர்களானால் ´ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினால் இதுதான் கதி´ என்ற டைம்ஸ் வாக்கியம் ஓர் சூழ்ச்சியை சொல்லிச் செல்லும்...

இஸ்லாமியர்களின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியை மிக தந்திரமாகவும், கர்ச்சித்தமாகவும் அபலைப் பெண்ணின் வலிகளை வேறு நோக்கத்தில் டைம்ஸ் பத்திரிகை செய்திருக்கிறது...

பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்துவதைவிட இஸ்லாமியர்கள் மீதிருந்த மதவெறியை பழித்துச் சொல்கிறது டைம்ஸ்.

அட்டைப்படம் வாக்கியமும் இப்போது சர்ச்சைக்குள்....

நாம் அதையும் தாண்டி பெண்ணின் சிதைக்கப்பட்ட முகத்தை வெறுமையாய் பார்க்கிறோம்...

பெண்ணின் நிலையைக் குறித்து விரக்தியாய்...

பெண் -
அவளுக்குள் இருப்பதும்
உயிர்! உயிர்!! உயிர்!!!
உன்னையும், என்னையும் போலவே....
நம்புங்கள், நம்பினால் நம்புங்கள்!!!

* [பத்திரிகை செய்தி : http://bit.ly/9OWJv0]

---

17- வயதுடைய இலங்கையைச் சேர்ந்த ´ரிப்கா பாரி´ அமெரிக்காவில் ´ஒஹையோ´ மாநிலத்தில் தன் பெற்றோருடன் இருக்கிறார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ´ரிப்கா பாரி´ கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டு விட்டு வெளியேறினார். பெற்றோர்கள் தங்கள் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வந்து மீண்டும் தங்கள் மதத்திற்கு மாற்றும் முயற்சி எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பெற்றோர்கள் ´ரிப்கா பாரி´யை இலங்கைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து ´ரிப்கா பாரி´ தான் இலங்கை சென்றால் பாதுகாப்பு இருக்காது என்றும் தான் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தில் இருக்க விரும்புவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இப்பிரச்சனையை முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தற்போது ´ரிப்கா பாரி´யை பாதுகாப்பாக வேறொரு இடத்தில்  வைக்கப்பட்டிருக்கிறார். தங்கள் மகளுக்கு 17- வயது மட்டுமே நடைபெறுவதாகவும் தங்களுக்கு அமெரிக்க குடியுரிமை இல்லாததால் இலங்கை செல்ல விரும்புவதாகவும் அதனால் ´ரிப்கா பாரி´யை தங்களுடன் அனுப்பும்படி பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் ஒஹையோ மாநில நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியிருக்கிறது. ´ரிப்கா பாரி´க்கு தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதி அளித்து தீர்ப்பு கூறி இருக்கிறது.

மேலும் ´ரிப்கா பாரி´க்கு கர்பப்பையில் புற்றுநோய் இருப்பதால் சிகிச்சைக்கு அங்கேயே தொடர்ந்து தங்கி இருக்கவும், இதன் மூலம் அமெரிக்க குடியுரிமை பெறவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

´ரிப்கா பாரி´யின் உடல்நிலையையும் தாண்டி கிறிஸ்தவ மத மாற்றம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக மிக முக்கியத்துவம் கொடுத்து அமெரிக்க அரசாங்கம் செயல்பட்டிருப்பதை அவதானிக்கலாம். ஒருவேளை கிறிஸ்தவ மதம் தவீர்த்து வேற்று மதமாற்றத்திற்கு ´ரிப்கா பாரி´ மாறி இருந்தால் இப்பிரச்சனை முக்கியத்துவமும் பெற்றிருக்காது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்த ´ரிப்கா பாரி´யும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்.

நாம்  மதங்களையும் கடந்து அச்சிறு பெண்ணிற்கு கர்பப்பையை தாக்கி இருக்கும் புற்றுநோய் குறித்த செய்தியை குறித்து விரக்தியாய்...

பெண் -
அவளுக்குள் இருப்பதும்
உயிர்! உயிர்!! உயிர்!!!
உன்னையும், என்னையும் போலவே....
நம்புங்கள், நம்பினால் நம்புங்கள்!!!

* [பத்திரிகை செய்தி : http://bit.ly/aRnB7n]

---

நேற்று முன்தினம் இன்னொரு சம்பவம் :

இந்தியாவில் ´சுப்ரீம் கோர்ட்´ கொடுத்த தீர்ப்பு எரிச்சலை கொடுத்தது.

வரதட்சணை கேட்பது குற்றமல்ல. வரதட்சணைக்காக பெண்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தினால் மட்டுமே குற்றம் என்று கூறி இருக்கிறது.

வரதட்சணை கொடுமையால் 1993-இல் இறந்த பெண்ணிற்காக 2010-இல் கிடைத்த நீதி!

இது நீதியா? அநீதியா?  

எத்தனையோ பெண்கள் வரதட்சணையால் பாதிக்கப்படுவதும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய சமூகக் கட்டமைப்பில் சுப்ரீக் கோர்ட் தீர்ப்பு குறித்து எந்த சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்காதது ஏமாற்றமே.

இறந்துபோன பெண், "ஏன்டா இப்படியொரு அநியாயமான தீர்ப்பு என்று கேட்கப் போவதுமில்லை.."

இருப்பினும் இந்த சமூகத்தில் வாழ முடியாத சூழலை இப்பெண்ணுக்கு எது ஏற்படுத்தியது என்ற குமுறலில்...

பெண் -
அவளுக்குள் இருப்பதும்
உயிர்! உயிர்!! உயிர்!!!
உன்னையும், என்னையும் போலவே....
நம்புங்கள், நம்பினால் நம்புங்கள்!!!

* [பத்திரிகை செய்தி : http://bit.ly/dAh9mY]

---

பெண்கள் -
நாங்கள் மெளனங்களால்
சக பெண்களின்
துன்பங்களைக் கண்டு
இயலாமையாய் இருக்கிறோம்.
எங்களுக்கு ஒப்பாரி வைக்கத் தெரியும்  
எங்களால் கவிதை எழுத முடியும்
உங்களுக்கு சமயத்தில்
கதைச் சொல்லிகளாய் இருப்போம்
அடுக்களையில் புகுந்துக் கொண்டு
சாமான்களோடு வீரம் காட்டும்
அங்கிகாரம் கொண்டவர்களாய் மட்டும்
எங்களுக்கு அனுமதி இருக்கிறது
இதில் இருந்து விமோசனம்
பெற முடியுமா?
எங்கள் பிறப்புறுக்கள் மீது
உங்கள் ஆதிக்கம் இருக்கும்வரை
நாங்கள் கதை சொல்லிகளாக,
ஒப்பாரிக்காரிகளாகவே வாழ்ந்து விடுகிறோம்.
நீதிமார்களே சற்று உங்கள்
தீர்ப்புகளை மட்டும் நிறுத்தி வையுங்கள்.  

தமிழச்சி
08.08.2010

 
மேலதிகக் ஆக்கங்கள்...

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel