எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படையானவை ´இருத்தலுக்கும், இல்லாததற்கும் இடையேயான நிலை´ குறித்தே. இவை குறித்து விவாதிக்க ஆரம்பித்தாலே பிரச்சனைதான். பொருள்வாதம் தெளிவாக தன்நிலை கருத்தை வைத்தாலும் கருத்து முதல்வாதம் விடுவதாக இல்லையே!
கருத்து முதல்வாதம் வேறொரு லோக்கத்துக்கு தள்ளிக் கொண்டு செல்கிறது. ´வரும் ஆனா வராது´ என்பது போல், ´உணர முடியும், ஆனா பார்க்க முடியாத´ தத்துவமாக ஓட்டிக் கொண்டிருக்கிறது கருத்துவாதம்.
கருத்து முதல்வாதிகளால் யதார்த்த வாழ்க்கையை முழுவதாக புறக்கணிக்க முடிவதில்லை. அதேநேரம் முழுவதுமாக ஏற்கவும் முடியாத குழப்பநிலை.
இவை சாண்டோக்ய உபநிடதத்தில் இருந்து தொடருகிறது....
பொருள் முதல்வாதத்தில் பௌத்தர்கள் காலத்தில் இருந்தே கருத்து முதல் வாதத்தோடு போராட வேண்டி இருந்தது.
அண்மைய நூற்றாண்டுகளில் கூட கருத்து முதல் வாதத்தோடு பொருள் முதல்வாதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏஞ்கெல்ஸ் முதற்கொண்டு தேவி பிரசாத் சட்டோபாத்யாயா வரை நீள்கிறது....
இன்னும் எப்படித்தான் விளக்குவது?
"விட்டுத் தள்ளுங்கள், இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதனின் அறிவு வளர்ச்சி கூடும் போது இந்த மதவாதிகளின் கூப்பாடு மக்களிடம் எடுபடாமல் போய்விடும்" என்று கூலாக சொல்கிறார்கள் இன்றைய தத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
அப்படி கூறும் சில தத்துவவாதிகளின் நூல்களையும் ஆய்வுகளை நீங்களும் வாசித்துப் பாருங்கள்:
* ´Erich Frauwallner´ எழுதிய "Geschichteder Indishen philosophic"[1][இதில் வைசேஷிகம், ஜைனம், லோகாயதம் குறித்த தத்துவங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது]
* ´Debiprasad Chattopadhyaya´ எழுதிய "Lokayata: A Study in Ancient Indian Materialism" - New Delhi, 1959[2][பொருள் முதல்வாதம் குறித்த தத்துவ ஆய்வு]
* அமெரிக்காவைச் சேர்ந்த ´Dale Riepe´ எழுதிய "The Naturalistic Tradition in Indian Thought"[3]
* ´P.N. Anikieu´ எழுதிய ´History of Philosophy´
* ´வால்டர் ரூபன்´ எழுதிய "Geschichte der Indiscaen philosophie" (1954)
2
எப்போது இக்கருத்துப் போராட்டம் மனிதனிடம் தொடங்கி இருக்கக் கூடும்?
மனிதன் உடலின் உள்நோக்கிய சிந்தனையில் தொடங்கி இருக்கிறது கருத்து முதல் வாதம்...
அனேகமாக ´சாண்டோக்ய உபநிடதத்தில்´ தேடுதல் தொடங்கியிருக்க வேண்டும். இந்திய தத்துவ வரலாற்று ஆராய்ச்சியாளரான தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவும் "Lokayata: A Study in Ancient Indian Materialism" ஆய்வு நூலில் மனிதனின் உள்நோக்கிய சிந்தனை ஆத்மா தேடலில் சாண்டோக்ய உபநிடதத்தில் தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
ஆத்மா குறித்த கீழை தத்துவங்களும், மேலை தத்துவங்களும் [ஐரோப்பாவில் ´ஆத்மா´ என்ற சொல் உபயோகப்படுத்தியவர் கிரேக்க தத்துவவாதியான பிளேட்டோ] பொருள் முதல் வாதத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தன.
´Sophist´[4] என்ற நூலில் ´பிளேட்டோ´ யதார்த்தம் பற்றிய விவாதம் என்பது கடவுளர்களுக்கும், அசுரர்களுர்களும் இடையே நடக்கும் சண்டையைப் போன்றது என்கிறார்.
கடவுள் தன்மை என்பது கருத்து முதல் வாதமாகவும், பொருள் முதல்வாதிகள் அசுரர்களாகவும் பிளேட்டோ சித்தரிக்கிறார்.
அதேப்போல் இந்திய தத்துவத்தின் ஆதித் தத்துவமான ´சாண்டோக்ய உபநிடதத்தில்´ இந்திரனும், விரோசனன் என்பவரும் ´ஆத்மா´ பற்றிய அறிவைத் தேடி பிரஜாபதியிடம் சென்றதாக புராணங்கள் கூறும். அந்த நிகழ்வில் கருத்து முதல்வாதம் தேவர்களுக்கும், பொருள் முதல்வாதிகள் அசுரர்களாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திரன் தேவ இனத்தை சேர்ந்தவனாகவும், விரோசனன் அசுரனாகவும் குறிப்பிடும் புராணம்; கருத்து முதல் வாதமும் பொருள் முதல்வாதமும் தோன்றியதை இவர்களிடமிருந்தே தொடங்குகிறது...
ஆத்மா பற்றிய அறிவை அறிய பிரஜாபதியிடம் சென்ற இந்திரனையும் விரோசனனையும் அழைத்து பெரிய பாத்திரத்திற்குள் இருக்கும் நீரை பிரஜாபதி பார்க்கச் சொல்லுகிறார்.
தங்களுடைய முழு உருவத்தையும் நீரில் பார்க்கும் இந்திரனுக்கும், விரோசனனுக்கும் வேறு வேறு சிந்தனைகள் தோன்றுகின்றன.
´ஆத்மா´ என்பது நம் உடல் தான் என்கிறான் விரோசனன்.
இது பொருள் முதல்வாதமாகவும், அசுரர்களுக்கு உபநிடதமாகவும் உருவாகியது.
இந்திரனுக்கோ நீரில் கண்ட உருவத்தை குறித்து திருப்தியாக இருக்கவில்லை.
பிரஜாபதியிடம் மீண்டும், "கருத்து முதல்வாத தத்துவம் குறித்து விளக்கம் வேண்டும்" என்று கேட்கிறார்.
இந்திரனுக்கு மட்டும் தனியாக போதிக்கிறார் பிரஜாபதி. அதுவே தேவர்களின் தத்துவமாக ஆகிறது.
இதில் வழக்கம் போல் ஓர் ´பார்ப்பன சூழ்ச்சி´ நடந்திருக்கிறது.
ஏன் விரோசனனுக்கு தத்துவத்தை பிரஜாபதி கூறவில்லை?
´அசுரர்களுக்கு அறிவு தேவையில்லை´ என்பது பிரஜாபதியின் முடிவு. இருளையும், அறியாமையையும் அசுரர்களுக்குள் இருக்க வேண்டும் என்பது தேவர்களின் விருப்பம். [சதபத பிராம்மணம் தத்துவத்தில் இக்காரணம் இருப்பதாக தேவிபிரசாத் சட்டோபாத்யாயா குறிப்பிட்டிருக்கிறார்]
புராணக் கதையான இவற்றை சுட்டிக்காட்ட காரணம் கருத்து முதல் வாதமும், பொருள் முதல்வாதமும் குறித்த விவாதங்கள் இன்றும் நடைப்பெறும் போதும் கருத்து முதல்வாத ஆதரவாளர்கள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையொன்று இருப்பதாகக் கூறி அனாவசியமான சொற்கோவைகளால் நம்மை வேறொரு நிலைக்கு கொண்டு செல்வதையும் உண்மை என்ற உண்மையான நிலையில் இருந்து மாயை என்னும் வோறொரு உணர்வுக்குள் நம்மை கொண்டு செல்ல முற்படுவதும் ஏமாற்று வேலைதானே? மோசடித்தானே என்கிறது அறிவியல்.
தத்துவம் போதிக்க முற்பட்ட புராணக்கதையிலேயே நிகழ்ந்த சூழ்ச்சிகளும், அந்த சூழ்ச்சிகளை குறித்து ´மைத்ரீ உபநிடதத்திலும்´, ´சதபத பிராம்மணம்´ போன்ற வேதங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இப்படியே போய்க் கொண்டிருக்கிறது கருத்து முதல் வாதத்தின் அழுவாச்சி ஆட்டம். ஆக இப்போதைக்கு தன் பலவீன தத்துவக் கருத்தை மேற்கொண்டு தொடர முடியாது தத்தளிக்கிறது கருத்து முதல்வாதம்.
இப்போதைக்கு இத்துடன் விட்டுவிடுவோம்.
மேற்கொண்டு தொடருமானால் நமக்கு பைத்தியம் பிடித்துவிடும்.
தமிழச்சி
11.05.2010
கட்டுரைக்கு தொடர்புடைய இணைப்புகள்:
* Geschichteder Indishen philosophic[1]
http://bit.ly/bG5pmQ
* Lokayata: A Study in Ancient Indian Materialism" - New Delhi, 1959[2]
http://bit.ly/cMDqx1
* The Naturalistic Tradition in Indian Thought[3]
http://bit.ly/blUA60
* Sophist´[4]
http://bit.ly/ac9gig