பெரியாரியல்

எதற்காக பிறந்தநாள் விழா கொண்டாட்டம்?

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதன் பேரால் யார் நடத்தினாலும், எங்கு நடத்தினாலும் அது ஒரு பிரச்சாரத்திற்காகவே ஆகும். நாட்டில் மகான்களுக்கும், மகாத்மாக்களுக்கும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியவர்களுக்கும் பிறந்த தினம் கொண்டாடுகிறார்கள். இப்படிக் கொண்டாடுவதால் கடவுளுக்கோ, ஆழ்வார், நாயன்மார்களுக்கோ என்ன இலாபம்? இதன் மூலம் கடவுள் பிரச்சாரம், ஆழ்வார் நாயன்மார்கள் பிரச்சாரத்தை மக்களிடையே புகுத்தவே இப்படிப் பிறந்த நாள் கொண்டாடுகின்றார்கள்.

மனிதன் பேரால் பிறந்த நாள் கொண்டாடுவதிலாவது அர்த்தம் உண்டு. அவன் அது செய்தான், இது செய்தான் என்று சொல்லிப் கொள்ளலாம். ஆனால் கடவுள் - நாயன்மார்கள் - ஆழ்வார்கள் பிறந்தநாளில் எதைச் செய்ததாகச் சொல்ல முடியும்? முட்டாள்தனமான காரியங்களை மக்களிடையே புகுத்தி நம்மை மடையனாக்க வேண்டுமானால் பயன்படும்.

எனது பிறந்தநாள் என்பதில் என்னுடைய பேச்சு - கருத்துகளை - கழகக் கொள்கையினை எடுத்துச் சொல்லப் பயன்படும் என்பதுதான் முக்கிய பலனாகும்.

இதில் நான் ஏன் கலந்து கொள்ளுகின்றேன்? நீங்கள் பாராட்டுவதைக் கேட்டுப் பெருமை அடையவா? இல்லை. என்னுடைய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லலாம் என்றே வந்திருக்கின்றேன்.

- 09.10.1960- அன்று தூத்துக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவில் இருந்து சில..... (´விடுதலை´, 13.10.1960)

இக்கட்டுரை முழுவதும் வாசிக்க :
 http://bit.ly/a1io4z 

 

ஆசிரியர் தினத்தில் சிந்திக்க ஒரு கருத்து...

எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது,
நம் நாட்டில் பொது உடைமைக்
கொள்கையைப் பரப்புவது போன்று
அவ்வளவு கடினமான காரியமாய் இருக்கிறது.
கல்வியறிவும், சுயமரியாதை எண்ணமும்,
பகுத்தறிவுத் தன்மையுமே
தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள்
எல்லோரும் மாணவர்களின்
ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம்
இவைகளை வளர்க்க முயற்சி
எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிப்பு எதற்கு? அறிவுக்கு, அறிவு எதற்கு?
மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து,
மற்ற மனிதனுக்கு உதவியாய்,
தொல்லை கொடுக்காதவனாய்,
நாணயமாய் வாழ்வதற்கு.

முதலாவதாக, மாணவர்கள்
ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும்.
அதற்கு அடுத்தாற்போல் தான் பாடம். 

- தோழர் பெரியார்

 

மர்மங்களால் பிணைக்கப்பட்டிருப்பது மனிதனா? அவன் சிந்தனையா?

நம்மைத் தெரிந்து கொள்வது என்றால் உலகத்தோடு நமக்குள்ள உறவை, அதாவது கருத்துலகம் மக்கள் உலகம் மட்டுமின்றி இயற்கை மற்றும் நம்முடைய உடைமைகள் ஆகியவற்றோடும் நமக்குள்ள உறவைத் தெரிந்து கொள்வது என்பதாகும். அது தான் நம் வாழ்க்கை. வாழ்க்கை என்பது முழுமையோடு கொண்டுள்ள உறவுத் தொடர்பு. அந்த உறவை விளங்கிக் கொள்வதற்கு ஏதாவது நிபுணத்துவம் தேவைப்படுகிறதா? இல்லை என்பது தெளிவு. என்ன தேவைப்படுகிறது என்றால் வாழ்வை முழுமையாகச் சந்திக்கும் ஒரு விழிப்புணர்வு. அது தான் நம் பிரச்சனை. அந்த விழிப்புணர்வை எவ்வாறு பெறுவது?

வாழ்வை முழுமையாச் சந்திக்கும் ஆற்றலைப் பெறுவது எவ்வாறு? அப்படி என்றால் உங்களுடைய அயலாரோடு உங்களுக்குள்ள தனிப்பட்ட உறவு மட்டும்ல, இயற்கை உங்கள் உடைமைகள், கருத்துக்கள் அத்துடன் மனம் உற்பத்தி செய்யும் மாயங்கள் ஆசை முதலியவறறோடும் உங்களுக்கு உள்ள உறவுத் தொடர்பு. இதை அறிவது எவ்வாறு?

உண்மையில் அதுதான் நம் வாழ்க்கை அல்லவா? உறவுத் தொடர்பு இல்லாமல் வாழ்க்கை என்பது இல்லை. இந்த உறவுத் தொடர்பை விளங்கிக் கொள்வதென்றால் தனித்துப் போவது என்பதல்ல. மாறாக இந்த உறவுத் தொடர்பின் மொத்த நடைமுறையைப் பற்றிக் கண்டு கொள்ளுதலும் விழித்துணர்ந்து கொள்ளுதலும் அதற்குத் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒருவர் விழித்துணர்வது? எதையும் எப்படி நாம் விழிப்போடு உணர்கிறோம்? ஒரு நபரோடு உங்களுக்கு உள்ள உறவை எப்படி உணர்கிறீர்கள்?

மரங்கள், பறவையின் ஒலியை எவ்வாறு உணர்கிறீர்கள்? ஒரு செய்தித்தாளைப் படிக்கும் போது விளையும் செயல்பாடுகளை எவ்வாறு உணர்கிறீர்கிறீர்கள்? மனத்தின் மேற்போக்கான செய்கைகளை மட்டும் உணர்கிறோமோ? அல்லது உள்ளே உள்ளவற்றையும் சேர்த்து உணர்கிறோமா? எந்த ஒன்றையும் எவ்வாறு உணர்கிறோம்? முதலில் ஓர் உந்துதலுக்கு ஏற்படும் வினை விளைவாய் உணர்கிறோம் அல்லவா? இது தெளிவான கண்கூடான உண்மை.

நான் மரங்களைப் பார்க்கிறேன், ஒரு வினை விளைகிறது. பின் புலனுணர்வு ஏற்படுகிறது. தொடர்பு அடையாளம் காணல் ஆசை ஆகியன ஏற்படுகின்றன. இது தான் சாதாரண நடைமுறை அல்லவா? உண்மையில் என்ன நிகழ்கிறது என்பதை எந்த நூல்களையும் படிக்காமலே நாம் காண முடியும். ஆகவே அடையாளம் காணல் முலம் உங்களுக்கு இன்பமும், துன்பமும் ஏற்படுகின்றன.

நம்முடைய திறமை என்பதே இன்பத்தில் உள்ள அக்கறையும், துன்பத்தைத் தவிர்த்தலும் தான் அல்லவா? நீங்கள் ஒன்றில் ஆர்வம் கொண்டிருந்தால் அது உங்களுக்கு இன்பத்தைத் தந்தால் உடனடியாகத் திறமை ஏற்படுகிறது. அந்த உண்மை பற்றிய விழிப்புணர்வு உடனே ஏற்படுகிறது. அது துன்பமானதாக இருந்தால் அதைத் தவிர்ப்பதற்கான திறமை மேலே கொண்டுவரப்படுகிறது.

நம்மை அறிந்து கொள்ள இந்தத் திறமையை எதிர்பார்க்கும் வரை நாம் தவறுவது உறுதி. ஏனெனில் நம்மை அறிந்து கொள்வது என்பது திறமையைச் சார்ந்ததல்ல. அது நீங்கள் காலத்தால் தொடர்ந்து கூர்மைப்படுத்துவதால் வளர்த்துக் கொளளும் பேணும் மிகுதிப்படுத்தும் ஒரு நுணுக்கம் அல்ல.

தன்னை பற்றிய விழிப்புணர்வை உறவின் செயல்பாட்டில் உண்மையில் சோதிக்கலாம். நாம் எப்படிப் பேசுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம்? என்பதைக் கொண்டு அதைச் சோதிக்கலாம். எவ்வித ஒன்றுபடுத்திக் கொள்ளலும், எவ்வித ஒப்பிடுதலும், எவ்விதக் கண்டனம் செய்தலும் இல்லாமல் உங்களைக் கவனியுங்கள். ஓர் அசாதாரணமான பொருள் நிகழ்வதை நீங்கள் காண முடியும்.

நீங்கள் அடிமன வாயிலாக வரும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருகிறீர்கள். நம்முடைய பெரும்பான்னைமயான நடவடிக்கைகள் அடிமனத்தைச் சேர்ந்தவையே. அப்படி முடிவுக்குக் கொண்டு வருவதொடு மட்டுமின்றி அந்தச் செயலுக்கான உள்நோக்கங்களை எவ்வித வினவுதலுமின்றி உள்ளே புகுந்து பார்க்காமலேயே கண்டுணர்கிறீர்கள்.

நீங்கள் விழிப்பணர்வுடன் இருக்கும் போது உங்களுடைய சிந்தனை செயல் ஆகியவற்றின் நடைமுறையையும் பார்க்கிறீர்கள். ஆனால் அது கண்டனம் செய்யாமலிக்கும் போது தான் ஏற்பட முடியும். நான் ஒன்றைக் கண்டனம் செய்யும் போது அதைப் புரிந்து கொள்வதில்லை. எந்தவிதமான விளக்கிக் கொள்வதையும் தவிர்க்கும் ஒரு வழி அது.

நான் உங்களைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால் நான் எவ்வித மன இயக்கமும் இல்லாமல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் உங்கள் கதையைச் சொல்கிறீர்கள். அது திறமையையோ, நிபுணத்துவத்தையோ கொண்டதல்ல. அந்த நடைமுறையில் நாம் நம்மைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம். நனவு மனத்தின் மேற்போக்கான அடுக்குகளை மட்டுமின்றி ஆழமானவற்றையும் விளக்கிக் கொள்கிறோம்.
அது மிகமிக முக்கியமானது.

ஏனெனில் அங்கு தான் நம் உள்நோக்கங்கள் நம் எண்ணங்கள் அடங்கிக் கிடக்கும் குழம்பிய தேவைகள் கலக்கங்கள், அச்சங்கள், பசிகள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. வெளிப்புறத்தில் நாம் அவற்றை அடக்கிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கின்றன. விழிப்புணர்வின் மூலம் அவற்றை முழுவதுமாக விளங்கிக் கொள்ளாதவரை அங்கு விடுதலையோ, மகிழ்ச்சியோ, நுண்ணறிவோ இருக்க முடியாது என்பது தெளிவு.

நுண்ணறிவு என்பது நிபுணத்துவமா? நுண்ணறிவு என்பது நம்முடைய நடைமுறை பற்றிய மொத்த விழிப்புணர்வே அந்த நுண்ணறிவு ஒரு நிபுணத்துவத்தை பெறும் வகையில் வளர்த்துக் கொள்ளப்பட வேண்ய ஒன்றா? ஏனென்றால் அதுதான் நடைபெறுகிறது. அல்லவா? பாதிரியார், மருத்துவர், பொறியியலாளர், தொழில், முதலாளிகள், வியாபாரி, பேராசிரியர் இப்படியாக நிபுணததுவ மனோபாவமே நம்மிடமிக்கிறது.

மிக உயர்ந்த நுண்ணறிவு நிலையை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதாவது உண்மையை கடவுளை விவரிக்க முடியாத ஒன்றை அதை உணர்ந்து கொள்ள நாம் நிபுணர்களாக வேண்டுமென நினைக்கிறோம். நாம் கற்கிறோம் துழாவுகிறோம் தேடுகிறோம். அத்துடன் நிபுணத்துவ மனோபாவத்துடனோ அல்லது நிபுணரை நாடியோ நம்முடைய தகராறுகளையும், துயரங்களையும் தீர்க்க எதவும் திறமையை வளர்க்கும் வகையில் நம்மைப் பற்றிக் கற்கிறோம்.

நம்முடைய பிரச்சனை நாம் விழிப்புடன் இருந்தால் நம்முடைய தகராறுகளும், துயர்களும், துன்பங்களும் அன்றாட வாழ்வில் தோன்றும் இவற்றை இன்னொருவர் தீர்க்க முடியுமா என்பது தான். அவர்களால் முடியாது என்றால் நாம் எப்படி அவற்றைத் தீர்க்கப் போகிறோம்?

ஒரு பிரச்சினையை விளக்கிக் கொள்ள ஓரளவுக்கு நுண்ணிணு தேவை என்பது தெளிவு. அந்த நுண்ணறிவை நிபுணத்துவத்தின் ஆலம் வளர்ப்பதோ அதிலிருந்து பெறுவதோ முடியாத செயல். நாம் அமைதியாக நம்முடைய நனவு மனத்தின் மொத்த நடைமுறையையும் விழிப்புடன் உணரும் போது தான் அது வருகிறது. அதாவது நம்மை நாம் எவ்விதத் தெரிந்தெடுப்புமின்றி எது சரி எது தவறு என்று தேர்ந்தெடுக்காமல் விழிப்படன் நோக்கம் போது தான் அது வருகிறது.

நீங்கள் அமைதியாக விழித்துணர்ந்தால் அந்த அமைதித் தன்மையிலிருந்து அது சோம்பலன்று, அது தூக்கமன்று ஆனால் இறுதியான எச்சரிக்கை நிலை பிரச்சினைக்கு வேறு விதமான உள்ளர்த்தம் ஏற்படுகிறது. அப்படி என்றால் இனிமேலும் பிரச்சனையோடு ஒன்றி இருத்தல் என்பது இல்லாமல் போகிறது. ஆகவே பிரச்சனை பற்றிய நியாயத் தீர்ப்பு இல்லை. ஆகவே பிரச்சனை அதன் உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்குகிறது. இதை நீங்கள் இடைவிடாது தொடர்ச்சியாகச் செய்ய முடியுமானால் பின் அன்றாடப் பிரச்சினைகளை மேலோட்டமாக இல்லாமல் அடிப்படையிலேயே தீர்க்கலாம். அதுதான் நமக்குக் கடினமாக இருக்கிறது.

உணர்ச்சி வசப்படாமல் ஒரு பிரச்சினையை எப்படித் பார்ப்பது என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் முடியாதவர்களாக இருக்கிறோம். ஏனெனில் பிரச்சினையிலிருந்து ஒரு தீர்வை வேண்டுகிறோம். ஒரு விடையை எதிர்பார்க்கிறோம், ஒரு முடிவை எதிர் நேர்குகிறோம் அல்லது பிரச்சினையை நம்முடைய இன்ப துன்பங்களுக்கு ஏற்றவாறு மாற்ற முயல்கிறோம். அல்லது பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதற்கு ஏற்கனவே ஒரு விடையை வைத்திருக்கிறோம். ஆகவே பிரச்சினையை எப்போதும் புதியதாகவே தோன்றுவதைப் பழைய பாணியிலேயே அணுகுகிறோம். சவால் எப்பொழுதும் புதிதுதான். சமாளிக்கும் வழியோ பழையதாக இருக்கிறது. சவாலைப் போதிய அளவில் முழுமையாகச் சந்திப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது.

பிரச்சினை எப்பொழுதும் உறவை ஒட்டியது தான். பொருள்களுடன் மக்களுடன் அல்லது கருத்துக்களுடன் இதைத் தவிர வேறு பிரச்சினை கிடையாது. அப்படி உறவுப் பிரச்சினையைச் சரியாகச் சந்திக்க சரியாகச் சந்திக்க போதிய அளவில் சந்திக்க அமைதியான விழிப்புணர்வுடனிருக்க வேண்டும். பிரச்சினை தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிற தேவைகளைக் கொண்டிருக்கிறது. அமைதி நிலை என்பது உறுதியையோ தன் முனைப்பையோ, கட்டுப்பாட்டையோ கொண்டதல்ல.

நாம் அமைந்திருக்கவில்லை என்று உணர்வதே தொடக்கம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தீர்வு குறிப்பிட்ட விடையை வேண்டுகிறோம் என்று உணர்ந்து கொள்வதே உண்மையில் தொடக்கமாகும். பிரச்சினையை ஒட்டி நம்மைப் புரிந்து கொள்வதும் பிரச்சினையை எப்படிக் கையாளுகிறோம் என்பதை அறிவதும் தொடக்கமாகும். பிரச்சினையை ஒட்டி எதிர் கொள்கிறோம். நம்முடைய பலவிதப்பட்ட தப்பெண்ணங்கள் நம் தேவைகள் பின் தொடர்பவை ஆகியவை என்ன என்று உணரும் போது அது நம்முடைய சிந்தனையையும் நம் உள்ளத்துத் தன்மையையும் வெளிப்படுத்தும். அதிலே ஒரு விடுவிப்புக் கிடைக்கிறது.

எது இருக்கிறதோ அது இருக்கிறது. கருத்தின் அடிப்படையில் செயல்படுவது தேர்ந்தெடுத்துச் செய்வதாகும். அப்படிப்பட்ட செயல் விடுதலையைக் கொண்டு வருவதில்லை. மாறாக மேலும் எதிர்ப்பையும், சச்சரவையும் அதன் உருவாக்கப்பட்ட சிந்தனைக்கேற்பத் தோற்றுவிக்கிறது. வாழ்க்கை என்பது உறவுத் தொடர்பான விவகாரம். அதை நிலையாக இல்லாததை விளக்கிக் கொள்ள நெகிழ்வோடு கூடிய விழிப்போடு ஆனால் அமைதியான ஆவேசத்துடன் செயல்படாத விழிப்புணர்வு தேவை.

மெய்ப்பொருள் மனம் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு பொருள் அல்ல. ஏனெனில் மனம் என்பது தெரிந்ததன் விளைவு கடந்த காலத்தின் விளைவு. ஆகவே மனம் தன்னையும் தன் செயல்பாட்டையும் தன்னுடைய உண்மையையும் தானே விளங்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் காணாதது உண்டாவதற்கான சாத்தியக்கூறு இருக்க முடியும்.

ஜே.கே. கிருஷ்ணமூர்த்தி

 

வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு 
சாமானியமல்லவே! 

ஒரு ஏட்டைக் கிழியோம்; 
ஒரு எழுத்தை மிதியோம்; 
இறைந்து கிடக்கும் 
இதழில் துப்போம்; 

கால்பட்டால் 
தொட்டுக் கும்பிடுவோம்; 
கைப்பட்டால் 
கண்ணில் ஒத்திக் கொள்வோம்; 

எந்த ஏட்டிற்கும் 
காப்பு சொல்வோம்; 
செல்லரித்த ஏட்டையும் 
புண்ணிய தீர்த்தத்தில்´ 
கொண்டு போய் போடுவோமே ஒழிய 
தெருவில் போடோம்; 

கற்றவர் நாவின் கருத்தும் 
கம்பன் கவித்திறனும் 
அவளே என்போம். 

இத்தனையும் போதாமல் 
வருடம் ஒரு தரம் பத்து நாள் 
பள்ளியறையில் வைத்துக் 
கும்பிடவும் செய்கிறோம். 

இத்தனையும் நாம் இங்கு செய்ய, 
இந்த சரஸ்வதி கொஞ்சமும் 
நன்றி விசுவாசம் இல்லாமல் 
மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? 
என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.

- தோழர் பெரியார்.
["இந்துமதப் பண்டிகைகள்" நூலில் இருந்து...]

 
மேலதிகக் ஆக்கங்கள்...

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel