சிந்தனையாளர்

விக்டோர் உய்கோ..

பத்தொண்பதாம் நூற்றாண்டு.

உலக வரலாற்றில் ஒர் முக்கிய திருப்புமுனையாக அமைந்த நூற்றாண்டு பலமாறுதல்களும், அறிவியல் வளர்ச்சிகளும் உண்டாக்கிய நூற்றாண்டு. அடிமைத்தனம் ஒழித்த நூற்றாண்டும் இதுதான். 

பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் சமம். அனைவரும் சமஉரிமையோடு வாழ வேண்டும் என்று என்று சிந்தித்த காலம். மேலும் ஒரு சிறப்பு இந்த நூற்றாண்டுக்கு உண்டு. 

பிரான்ஸ் நாட்டு மகாகவிஞன் "விக்தோர் உய்கோ" பிறந்து பெரும்புகழ் பெற்ற நூற்றாண்டு.

26.02.1802 அன்று இரவு 10.30-மணிக்கு ´விக்தோர் உய்கோ´ பிறந்தார். குழந்தை பிறந்த போது மிகச் சிறியதாக இருந்தது. டாக்டர் குழந்தை பிழைக்காது என்று சொல்லிவிட்டார். அப்படிப்பட்ட குழந்தை தான் அழியாப்புகழ் அடைந்தது. அவரின் சிந்தனைகளை சில பாருங்கள்:

* "நேசியுங்கள் என்றார் ஏசு. பணம் கொடுங்கள் என்கிறது கோயில்."

* "மூடத்தனமான மோட்சத்தை விட அறிவுள்ள நரகம் மிக மேலானது."

* "இயற்கை பேசும்போது - மனித இனம் அதைக் கவனிக்காமலிருப்பது துன்பமானது."

* "நீதித்துறையில் சிலமனிதர்களைப் பார்க்கும் போது பெருவழியில் திருடர்களைக் காணும்போது நடுங்குவதைப் போல நடுங்க வேண்டியுள்ளது."

* "இப்போது நான் எதற்கு ஏற்றவன்? இறப்பதற்கு." [01-01-1874]

* "நீங்கள் ஒரு பள்ளியைத் திறக்கும் போது ஒரு சிறைச்சாலையை மூடுகிறீர்கள்."

* "ஐந்தாம் மாடியிலிருந்து ஒரு பூச்சாடியை உங்கள் தலைமேல் போடும் மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்லுவது உங்களுக்கு நான் இந்த ரோஜாப்பூக்களை அளிக்கிறேன் என்பது."

* "இந்த உலகத்தில் போரிடும் பெரிய மனிதர்கள் மூவர் எப்போதும் உண்டு.  
1-மனிதனாக இருப்பவன், 
2-மனிதனாக இருந்தவன். 
3-மனிதனாக இருக்கப்போகிறவன்.

* "கொலையின் வடிவங்கள் என்று மனிதனை மனிதன் கொல்வது மனிதக்கொலை. சட்டம் மனிதனைக் கொல்வது தூக்கு, மக்களை மக்கள் கொல்வது போர்."

* "புரட்சிக்காலத்தில் நடுநிலை வகிப்பவன் கையாலாகாதவன்."

* "நல்லவனாக இருப்பது எளிது. நேர்மை உள்ளவனாக இருப்பது தான் கடினம்."

* "உண்மையான நண்பனாக அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே."

* "பூவை உருவாக்குவது விதையும், சூரிய ஒளியும். பெரிய மனிதனை உருவாக்குவது திறமையும், வாய்ப்பும்."

* "என் சூழ்நிலையை நான் என் பகைவர்களின் முகத்திலிருந்து முடிவு செய்கிறேன்."

* "ஓவ்வொரு மனிதனும் எல்லா நாட்களிலும் பள்ளிக்குப் போகிறான்."

´விக்தோர் உய்கோ´வின் கவிதைகளும், சிந்தனைகளும் பிரான்ஸ் நாட்டின் பொக்கிஷங்களாக கருதப்படுபவை. அவர் சாகும் வரையிலும் சமுதாயத்திற்காக எழுதிக்கொண்டே இருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு கூட அதாவது 19.05.1885-அன்று தன்னுடைய குறிப்புச் சுவடியைக் கொண்டு வரும்படி கேட்டார். 

உடம்பு பலவீனமடைந்து மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருந்த அவர் மிகச் சிரமத்துடன் எழுதுவதற்கு முயற்சித்தார். ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிய அந்த கரங்களுக்கு அன்று எழுத முடியாமல் மிகவும் தடுமாறியது. கைக்குக்குள் இருந்த இறகு கனத்தது. எழுதும் போது சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு படிப்பதற்கு சிரமமாக இருந்தன. 

விக்டோர் உய்கோ எழுதிய கடைசி எழுத்துக்களும் இவைதான். அதற்கு பிறகு அவர் கண்களை மூடி படுத்துக் கொண்டார். 

"நான் கறுப்பு வெளிச்சத்தை பார்க்கிறேன் என்று அவர் வாய் முணு முணுத்தது." 

மே 22, 1885- வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.27-மணிக்கு ´விக்டோர் உய்கோ´ மறைந்தார். எழுத்துமலை ஒன்று சாய்ந்தது. லட்சியப் பேரொளி அணைந்தது. அவர் எழுதிய கடைசி வார்த்தை என்ன தெரியுமா?

"நேசித்தல் என்பது செயலாற்றல்."

தமிழச்சி
29/06/1997

 

பாக்குனினிஸம்

பயனாளர் தரப்படுத்தல்: / 6
குறைந்தஅதி சிறந்த 

Mikhail-Bakunin


சில திங்களுக்கு முன் 'அனார்க்கிஸ்டுகள்' பற்றி குறிப்பிட்டிருந்தோம். 'அனார்க்கிஸ்ட் ஸிண்டிகலிசம்' தத்துவத்தின் குருவான ´பிரௌதன்´[Pierre-Joseph Proudhon] சித்தாந்தம் அவர் காலத்திற்கு பின் எப்படி மாற்றம் அடைந்தது என்னும் வரலாற்றை இன்று தொடருவோம்....

1868-செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மார்க்ஸ் எங்கல்சுக்கு கடிதம் எழுதுகிறார்:

"ஜினீவா மற்றும் 'லாஸேன்னிலும்' இருந்த தொழிற்சங்கத்தை எதிர்த்த பிரெஞ்சு பிரெதனிஸ்டுகளும், பெல்ஜிய பிரௌதனிஸ்டுகளும் இன்று தொழிற்சங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது." [மார்க்ஸ்]

மார்க்ஸ் இப்படி குறிப்பிடுவதால் பிரௌதனிஸ்டுக்களின் எல்லா செயல்பாடுகளையும் ஆதரித்ததாக பொருள் கொள்ளக்கூடாது. தொழில்சங்கத்தின் ஆதரவாளர்களாக பிரௌதனிஸ்டுகள் மாறியதை மட்டுமே சுட்டுக்காட்டுகிறார்.

பிரௌதன் 1865-இல் இறக்கும் வரையிலும் தொழில்சங்கங்களுக்கு எதிரான கருத்துக்களையே சொல்லிக் கொண்டிருந்தார். கூலி, ஸ்தாபித விதிகள், பண்டங்களின் விலை நிர்ணயம், ஸ்தாபனத்தின் முக்கியத்துவத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டிருந்தார் பிரௌதன். முதலாளிகளை எதிர்த்து கூட்டுப் போராட்டம் [ஸ்டைக்], தொழிலாளர்கள் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்றார். அதன் பாதிப்பு தொழிலாளர்களுக்கே என்றார். பிரௌதனின் இத்தத்துவத்திற்கு மார்க்ஸ், 'பிரௌதனின் பிற்போக்கான அபத்தம்' என்று கண்டனம் தெரிவித்ததோடு, 'தத்துவத்தின் வறுமை' [´poverty of philosophy´] என்ற புத்தகத்தையும் எழுதி இருந்தார் என முன்பு எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டி இருந்தோம். இக்கருத்து பிரௌதனின் மறைவுக்கு பின் என்ன ஆனது என்பதையும் கவனிப்போம்.

பிரௌதனின் சீடரான ´மைக்கேல் பாக்குனின்´[Mikhail Bakunin] பிரௌதனின் உலகக் கண்ணோட்டத்தில் உள்ள பலவீனங்களையும், குறைப்பாடுகளையும் மாற்றம் செய்தார். அதுவே ´பாக்குனினிஸம்´பாக்குனினிஸம்´ உருவாக்குவதற்கு ´பிரௌதனிஸ´த்தை குறித்து மைக்கேல் பாக்குனின் கூறுகிறார்:

"யதார்த்தவாதியாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ முயன்றும் பிரௌதன் மானசீகவாதியாகவே இருந்தார். அதற்கு காரணமாக கிருஸ்தவ வேதமான பைபிளும், ரோமன் சட்டங்களும் பிரௌதனை ஊக்குவித்தன. பிரௌதன் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இது குறித்து விவாதித்தேன். ஆனால், பிரௌதன் சாகும் வரையில் தவறான நம்பிக்கையையே ஆதாரமாகக் கொண்டிருந்தார்..." என்று தன் குரு பிரௌதனைப் பற்றி ´மைக்கேல் பாக்குகனின்´ குறிப்பிடுகிறார்.தொழிலாளர் குறித்து பிரௌதன் கொண்டிருந்த கருத்தை விட மைக்கேல் பாக்குனின் கருத்து இவ்வாறு கூறுகிறது:

"பிரௌதனின் அராஜக அமைப்பை மாயாவாதத்தில் இருந்தும், ஆத்மார்த்திக வாதத்தில் இருந்தும் நாங்கள் மாற்றி விரிவுப்படுத்தி இருக்கிறோம்."திருத்தி அமைக்கப்பட்ட ´பிரௌதனிஸம்´ பாக்குனின் தத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டு ´பாக்குனினிஸம்´ உருவாக்கப்பட்டதும் ´இன்டர் நேஷனலின் கொள்கை´ என்று ஓர் நூலை எழுதுகிறார் பாக்குனின்.பாக்குனின் தத்துவ மாற்றத்தில் தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி எழுதுகிறார்:

"தொழிலாளர் விடுதலை என்பது தொழிலாளர்களுடைய சொந்த இலட்சியம். இவையே ஆயிரம் மடங்கு உண்மை. நமது மகத்தான யூனியனுக்கும் இவையே பிரதான அடிப்படை. இருப்பினும் ஏராளமான தொழிலாளர்கள் ஒன்றும் அறியாதவர்கள். அவர்களுக்கு கொள்கை என்ன என்பது தெரியாது. கோட்பாடு என்ன என்பது தெரியாது. அதனால் தொழிலாளர் முன் இருப்பது ஒரே ஒரு பாதை மட்டுமே. அது நடைமுறையில் விமோசனம் தேடும் பாதை... இந்த நடைமுறை என்பது என்னவென்றால் முதலாளிகளை எதிர்த்து ஒற்றுமை அடிப்படையில் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்கள். போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் ஸ்தாபனங்கள் பாதுகாப்பு நிதிக்கழகங்கள் கண்டிப்பாகத் தேவை. இந்த உண்மையை நாம உணர வேண்டும்...அதேப்போல் நம் தத்துவ விதிகளின்படி அரசியலை நிராகரித்துவிட வேண்டும். 'இன்டர்நேஷன்´ மூலம் எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களுடைய கிளர்ச்சி நடவடிக்கைகளை பொருளாதாரப் பாதையில் நடத்தப்பட வேண்டும்.தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதும் கூலியை உயர்த்துவதும் லட்சியமாக இருக்க வேண்டும். தொழிலாளர் ஸ்தாபனமும், பாதுகாப்பு நிதி திரட்டுவதும் கடமையாக இருக்க வேண்டும்.ஆக போராட்டங்கள் பொருளாதாரக் கிளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும்." [பாக்குனின்]

மீண்டும் மார்க்ஸ் எழுதிய கடித்தத்திற்குச் செல்வோம்....1868-செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி மார்க்ஸ் எங்கல்சுக்கு கடிதம் எழுதுகிறார்:

'ஜினீவா´ மற்றும் ´லாஸேன்னி´லும் இருந்த தொழிற்சங்கத்தை எதிர்த்த பிரெஞ்சு பிரெதனிஸ்டுகளும், பெல்ஜிய பிரௌதனிஸ்டுகளும் இன்று தொழிற்சங்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது...மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டதற்கு காரணம் 1866-இல் ஜினீவாவில் தொழிலாளர் போராட்டங்களையும் தொழிற்சங்கத்திற்கும் முதன்முறையாக அனார்க்கிஸ்டுகள் ஆதரவு கொடுத்ததும் அதேப்போல் லாஸேன்னியில் 1867-இல் தொழிலாளர் போராட்டத்திற்கும், அனார்க்கிஸ்டுகள் ஆதரவு கொடுத்ததையும் கவனித்து எங்னெல்சுக்கு மார்க்ஸ் கடிதம் எழுதினார். ஆனால் ´இன்டர் நேஷனலின் கொள்கை´ நூலில் பாக்குனினிஸத்தின் தத்துவங்களை தொழிற்சங்க ஆதரவு நிலைப்பாட்டை தவிர மற்றதை கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் மார்க்சும், எங்கல்சும் போராடினார்கள்."வர்க்கங்கள் ஒழிய வேண்டும்" என்கிறார் மார்க்ஸ்.பாக்குனினோ, "வர்க்கங்களுக்குள் சமத்துவம் கோருகிறார்."தொழிலாளர்கள் என்ன கோரவேண்டும் என்று பாக்குனின் கூறுகிறார்:

- அரசியல், பொருளாதார, சமூக சமத்துவம் மற்றும் பூமியின் மீதுள்ள சகல வர்க்கங்களுக்கும், சகல மனிதர்களுக்கும் இடையே சமத்துவம்.

- தாய் சொத்து ஒழிய வேண்டும்.

- நிலங்களை விவசாய சங்கங்களின் உபயோகத்திற்கு மாற்றிக் கொடுப்பது.

- மூலதனத்தையும், உற்பத்தி சாதனங்களையும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களுக்கு மாற்றிக் கொடுப்பது.... [பின்னாலில் மார்க்ஸின் பலத்த எதிர்ப்பினால் பாக்குனின் வர்க்க சமத்துவ கோரிக்கையை நிராகரித்து விட்டார்]

தொழில்கள், தொழிலாளர் ஸ்தாபனங்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பிற்காலத்தில் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலிய அனார்க்கிஸ்டு மற்றும் ஸிண்டிகலிஸ்டுகளின் கொள்கைகளுக்கு அடிப்படையாக காரணமானது. தொழிலாளர்களை பாமரர்களாக கருதிய பாக்குனின் அவர்களை ஓர் தலைமை வழிநடத்த வேண்டும் என்று கருதினார். மற்றும் தொழிலாளர்களே கலகம் செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மார்க்ஸ் மக்கள் மீதும் வர்க்க ஸ்தாபனங்கள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தினார். தொழிலாளர்களுக்கிடையே பிரசாரங்கள் செய்தார். மார்க்ஸின் அணுகுமுறையைக் கண்டு பாக்குனின், "மார்க்ஸ் வீண்வேலை செய்கிறார்" என்று கிண்டலடித்தார்.

"தொழிலாளர்களுக்கிடையே மார்க்ஸ் பிரசாரம் செய்யவில்லை, தொழிலாளர்களுக்கு 'வாதப் பிரதிவாதம்' சொல்லிக் கொடுத்து கெடுக்கிறார்" என்று குற்றம் சுமத்தினார். பாக்குனின் பெரிய குறை தொழிலாளர்களை வேறுபடுத்தி பார்க்க வைத்தது. தொழிலாளிகள், ஏழை மக்கள், வறுமையால் தாக்கப்பட்ட பகுதி மக்கள், சாதாரண உழைப்பாளி போன்ற சொற்களை உபயோகித்தார். முற்போக்கான தொழில்களில் இருந்த தொழிலாளர்களை ´மேல்ஜாதி´யினர் என்று உதாசீனப்படுத்தினார். மார்க்சும், எங்கல்சும் விட்டுக் கொடுப்பதாயில்லை. தத்துவப் போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன. கற்சுவரில் முட்டிக் கொண்டே இருந்தால் என்னவாகும் தறுதலைகளின் தலை? மார்க்ஸியத்தில் முட்டி மோதி மீண்டவர்கள் எத்தனை பேர்?

தமிழச்சி
01.03.2010


 

மே தினத்தன்று தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள் - பெரியார்

myths-slavery


உலக முழுவதும் தொழிலாளர் நிலைமை படுமோசம்.

இந்தியாவிலோ சொல்ல வேண்டியதில்லை.
எண்ணெய்க் கொப்பரையில்
வெந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளிகள்.

பொருளாதார நெருக்கடி சில காலமாக
மனித வர்க்கத்தை இறுகப்பிடித்து உலுக்கி வருகிறது.
கல்நெஞ்ச முதலாளிகள் ஈவிரக்கமின்றிச்
சம்பளக் குறைப்பால் தொழிலாளிகளை
உயிரோடு உடம்பை உரிக்கும் சித்திரவதை செய்து வருகிறார்கள்.

இன்றைய இந்தியத் தொழிலாளர் வாழ்வோ
அழுவாரற்ற பிணமாகவும், சீந்துவாரற்ற சவமாகவுங் கிடக்கிறது.

கடந்த ஒரு வாரமாய்ச் சம்பளத்தைக் குறைத்ததினால்
பம்பாய்த் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
பம்பாய் ஆலைகள் 57ல் 43 ஆலைகள் மூடப்பட்டுவிட்டன.
8 ஆலைகள் மாத்திரம் திண்டாட்டத்தின் பேரில்
வேலை நடத்தி வருகின்றன.

80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்.
பம்பாயில் துப்பாக்கிப் பிரயோகமும், அடிதடிகளும்,
கல்வீச்சும் நடந்த மயமாயிருக்கிறது.
உயிர்ச் சேதமும், படுகாயமும் கோரக் காட்சியளிக்கிறது.
பம்பாய் அமளி துமளியாய்க் கிடக்கிறது.

பொறுப்பு வாய்ந்த இந்திய சர்க்கார் தொழிலாளிகளை
அனாதைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது.

யதேச்சாதிகாரிகளான ஹிட்லரும், முசோலினியுங்கூட
தொழிலாளிகளைக் கௌரவித்து ஒத்தாசை புரியும்
நிர்பந்தத்திலிருக்கும் இந்நாள் ஜனநாயகத்துவத்தை
நீட்டி நீட்டிப் பேசும் பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதியான
இந்திய சர்க்கார், பம்பாய்த் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும்
நெருக்கடியைக் கவனியாது தூங்கிக் கொண்டிருப்பது மானக் கேடாகும்.

தன் கையே ஆபத்துக்குதவும் என்று
தொழிலாளிகளுக்கு எடுத்துக்கூற ஆசைப்படுகிறோம்.
தொழிலாளர் தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு
தொழிலாளர் சங்கங்களை பெயரளவிலன்றி
உண்மையாகவே பலப்படுத்தி சக்தியைப்
பெருக்க வேண்டிக் கொள்கிறோம்.

பம்பாய்த் தொழிலாளருக்கு ஆதரவு காட்டும் பொருட்டு
6500 பேர் டில்லியில் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்.
நாகபுரியிலும் மே 1-ந் தேதி வேலை நிறுத்தம்
ஆரம்பமாகுமென்று தெரியவருகிறது.

தென்னாட்டுத் தொழிலாளிகளும், சமதர்மிகளும்
பம்பாய்த் தோழர்களுக்கு ஆதரவு காட்டுந் தோரணையில்
மே தினத்தன்று தீர்மானங்கள் நிறைவேற்றி
ஆவன செய்யக் கோருகிறோம்.

- பெரியார்

* சிறுகுறிப்பு :- 1934-இல் பம்பாய் தொழிலாளர்கள் ஊதியம் குறைவுக்காக நடத்திய போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாள தோழர்களையும் பம்பாய் தோழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாய் போராடும்படி கோரி ´புரட்சி´ பத்திரிக்கையில் துணைத் தலையங்கமாக 29.04.1934-இல் பெரியார் எழுதியதை 76-வருடங்களுக்கு பிறகு இன்றைய மே தினத்தில் நினைவுகூறுகிறோம். ["பம்பாயில் பயங்கர வேலை நிறுத்தம்" என்ற தலைப்பில் 1934 ஏப்ரல் மாதத்தில் குடிஅரசு பத்திரிகையிலும் வெளியிடப்பட்டது]

தமிழச்சி 

 

எண்ணம் - குணநலன் - சூழ்நிலை!

18.02.2011-C


நல்ல எண்ணங்களோ, தீய எண்ணங்களோ ஒரு குறிப்பிட்ட எண்ணம் தொடர்ந்து நீடிக்கும் போது, அந்த எண்ணங்கள் அம்மனிதனின் குணநலன்களை பாதிக்காமல், ஒரு விளைவை ஏற்படுத்தாமல் விடாது என்று ´ஜேம்ஸ் ஆலன்´ சொல்கிறார்.

ஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் சூழலும் நம் கையில் தான் இருக்கிறது என்கிறார்.

´எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளலாம்´ எனறு மனிதர்கள் நினைக்கிறார்கள், கற்பனை செய்து கொள்கிறார்கள், ஆனால் எண்ணங்களை மறைக்க முடியாது. ஏனெனில், எண்ணம் முதலில் பழக்கமாக மாறுகிறது. பின் பழக்கம் சூழ்நிலையாக உருவாகிறது என்கிறார்.

இவ்வுண்மைமையை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் சோதித்துப் பார்க்க முடியும். நம்மைப்பற்றி நாமே ஆழ்ந்து சிந்தித்து சுய சோதனை செய்து கொள்வதன் மூலம் இந்த உண்மையைக் கண்டு பிடிக்ககலாம். அதற்கான உதாரணங்களையும் ஜேம்ஸ்ஆலன் தருகிறார்.

  • தாழ்ந்த எண்ணங்கள் - இச்சைகளாகவும், காம உணர்வுகளாகவும், குடிபோதை போன்ற பழக்கங்களாகவும் மாறுகின்றன. பின் அந்தப் பழக்கங்கள் அழிவு, நோய் என்ற சூழ்நிலைகளாக மாறுகின்றன.

  • துய்மையற்ற ஒவ்வொரு எண்ணமும், குழப்பம் தளர்ச்சி என்ற பழக்கங்களாக மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலைகளாக மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலையாக மாறி நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

  • பயம், சந்தேகம், முடிவெடுப்பதில் தயக்கம் என்ற எண்ணங்கள் பலகீனமான ஆண்மையற்ற உறுதி குலைந்த பழக்கங்களை உண்டாகுகின்றன. பின் அதுவே தோல்வி, வறுமை, அடிமையாக பிறரைச் சார்ந்திருத்தல் என்ற சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது.

  • சோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான பழக்க வழக்கங்களையும், நாணயமற்ற குணங்களையும் உண்டு பண்ணுகின்றன. பின் அதுவே பிச்சை எடுக்கும் நிலையையும், எதிலும் தோற்றுப் போகின்ற சூழ்நிலையையும் உருவாக்குகின்றது.

  • பிறரைப் பழிக்கும் எண்ணங்ககளும், வெறுப்பும் பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை உண்டாக்குகிறது. வன்முறையில் ஈடுபடும் குணத்தை உருவாக்குகிறது. மேற்கூறிய இரண்டு பழக்கங்களளும், நமக்கு ஊறு விளைவிக்கிற, காயப்படுத்துகிற - சூழ்நிலையையும் நாம் அபாண்டமாகத் தண்டிக்கப்படுகின்ற சூழ்நிலையையும் உருவாக்குகிறது.

  • சுயநலமிக்க எண்ணங்கள் தன்னை முன் நிறுத்துகின்ற பழக்கத்தையும், சுயலாபம் தேடும் குணத்தையும் ஏற்படுத்துகிறது. பின்னால் அதுவே சங்கடம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குகிறது. இதற்கு மாறாக அழகான எண்ணங்கள் அன்பு, கருணை என்ற பழக்கங்களாக மாறுகின்றன. பின்னால் அது சுமுகமான சூழ்நிலையையும், புத்துணர்ச்சியூட்டும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது.

  • தூய்மை மிக்க எண்ணங்கள் சுயகட்டுப்பாடு, அடக்கம் என்ற பழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின் அதுவே அமைதியும், சாந்தமும் நிறைந்த சூழ்நிலையை உண்டாக்குகின்றன.

  • தன் காலிலே நிற்க விரும்பும் எண்ணம், துணிவு, முடிவெடுக்கும் உறுதி போன்ற எண்ணங்கள் ஆண்மை நிறைந்த பழக்க வழக்கங்களை உண்டு பண்ணுகிறது. பின்னால் வளமான வாழ்வு, வெற்றி, சுதந்திரம் என்ற சூழ்நிலைகளை அமைக்கிறது.

  • துடிப்பு நிறைந்த எண்ணங்கள், தூய்மையான பழக்கங்களையும், உழைக்கும் மனோபாவத்தையும் உண்டு பண்ணுகின்றன. பின் அதுவே இனிமையான சூழ்நிலையாக மாறுகின்றது.

  • சாந்தமான எண்ணங்கள், மன்னிக்கும் எண்ணங்கள் அமைதியான பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின்னால் அதுவே ஒரு பாதுகாப்புத் தரும் சூழ்நிலையை உண்டாக்குகிறது.

  • அன்பான எண்ணங்கள், சுயநலமற்ற எண்ணங்கள், மற்றவருக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் குணத்தை - பழக்கத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக நிரந்தரமான வளம் நிறைந்த வாழ்வும் உண்மையான செல்வமும் ஏற்படுகிறது.

மேற்கோள் காட்டப்பட்ட குணநலன்கள் குறித்து மனவியல் ஆய்வாளர்கள் அதிசயிக்கிறார்கள். ஜேம்ஸ் ஆலனின் தத்துங்கள் அறிவியல்படி 100/100 உண்மை என்கிறார்கள். ஆம், "இப்பிரபஞ்சம் இயங்குவது சில விதி முறைகளினால் தான். ஏனோ தானோ என்றல்ல. வாழ்வின் அடிப்படை நீதிதான் - அநீதி அல்ல. ஆத்மீக உலகை ஆளும் சக்தி நேர்மைதான் - ஊழலல்ல."

தமிழச்சி
18.02.2011


 
மேலதிகக் ஆக்கங்கள்...

பதிவுகள் தேதி வாரியாக

  • 2012 (5)
  • 2011 (146)
  • 2010 (23)
  • 2009 (18)
  • 2008 (5)
  • 2007 (1)
  • 2003 (1)
  • 1997 (1)
  • 1999 (1)
  • fbPixel